< யோபு 36 >

1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
பின்னும் எலிகூ:
2 “சற்று என்னிடம் பொறுமையாயிரும், இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
“நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்; இன்னும் தேவனின் சார்பாக நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக் காண்பிப்பேன்.
3 நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.
நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கச்செய்வேன்.
4 என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
5 “இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
6 அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.
அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
7 அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி, அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார்.
8 ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
9 அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.
அவர், அவர்களுடைய செயல்களையும், அதிகமான அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
10 அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
௧0அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.
11 அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
௧௧அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருடங்களைச் செழிப்பான வாழ்வாகவும் போக்குவார்கள்.
12 அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், வாளினால் அழிந்து, அறிவில்லாமலே சாவார்கள்.
௧௨அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி, ஞானம் அடையாமல் இறந்துபோவார்கள்.
13 “உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.
௧௩மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போதும் தேவனைக் கெஞ்சிக் கூப்பிடுவதில்லை.
14 அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் தங்கள் இளமையிலேயே சாவார்கள்.
௧௪அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்; இழிவானவர்களுக்குள்ளே அவர்கள் இறப்பார்கள்.
15 ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
௧௫சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் செவியைத் திறக்கிறார்.
16 “யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும், வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.
௧௬அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி, இடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய உணவுப்பந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
17 கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.
௧௭ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
18 செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.
௧௮கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.
19 உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?
௧௯உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
20 மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.
௨0மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.
21 தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
௨௧பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைவிட அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
22 “இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
௨௨இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
23 இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
௨௩அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
24 மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.
௨௪மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.
25 அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்; அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;
௨௫எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.
26 நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
௨௬இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
27 “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
௨௭அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
28 மேகங்கள் மழையைப் பொழிகின்றன, அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
௨௮அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.
29 அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?
௨௯மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30 அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.
௩0இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்; சமுத்திரத்தை இருளால் மூடுகிறார்.
31 இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.
௩௧அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார்.
32 அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.
௩௨அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
33 அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.
௩௩அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.

< யோபு 36 >