< யோபு 35 >

1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: 2 “‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ? 3 நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்? என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர். 4 “இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும் பதில்சொல்ல விரும்புகிறேன். 5 வானங்களை மேலே நோக்கிப்பாரும்; உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும். 6 நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்? உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்? 7 நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்? அல்லது அவர் உம் கையில் இருந்து எதைப் பெற்றுக்கொள்கிறார்? 8 உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும், உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும். 9 “ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்; பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள். 10 ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே? இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே? 11 பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே? ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’ என்று கேட்பவர் ஒருவருமில்லை. 12 கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம், மனிதர் அழும்போது இறைவன் அவர்களுக்குப் பதில் கொடுப்பதில்லை. 13 இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார். 14 அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும், உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும், நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது, அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ? 15 மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை; என்றும் மனிதரின் கொடுமையை அவர் கொஞ்சமும் கவனிப்பதில்லை என்று எண்ணி, 16 யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி, அறிவில்லாமல் தன் வார்த்தைகளை வசனிக்கிறார்.”

< யோபு 35 >