< யோபு 34 >
1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2 “ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
3 நாவு உணவைச் சுவைப்பதுபோல், காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
4 வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
5 “யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.
6 நான் சரியானவனாய் இருந்தபோதிலும், பொய்யனாகவே எண்ணப்படுகிறேன். குற்றமற்றவனாய் இருந்தபோதிலும், அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார்.
7 தண்ணீர் பருகுவதைப்போல் கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
8 அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார்.
9 ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.
10 “புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். தீமை இறைனுக்கும், அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
11 மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார்.
12 இறைவன் அநியாயம் செய்யாமலும், எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
13 பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்?
14 அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,
15 எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.
16 “உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், நான் சொல்வதற்குச் செவிகொடும்.
17 நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ?
18 அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார்.
19 அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை; ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா?
20 அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.
21 “இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
22 தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு இருளான இடமோ, காரிருளோ இல்லை.
23 இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை.
24 இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார்.
25 ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.
26 அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார்.
27 ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள்.
28 அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.
29 மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; நாட்டிற்கும், மனிதனுக்கும், அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
30 அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.
31 “யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: ‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன்.
32 நான் காணாதவற்றை எனக்குப் போதியும், நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’
33 நீர் மனந்திரும்ப மறுக்கும்போது உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ? நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்; நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.
34 “நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் ஞானமுள்ளவர்களும் என்னிடம்,
35 ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும்,
36 யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும்.
37 தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி, இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”