< யோபு 27 >

1 யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2 “எனக்கு நீதியை மறுத்து, வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,
“என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,
3 எனக்குள் என் உயிரும், என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,
4 என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
5 நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்; நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.
நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.
6 என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.
என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.
7 “என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும், என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.
என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.
8 இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய், இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?
அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?
9 அவனுக்குத் துன்பம் வரும்போது இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?
10 எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ? எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?
௧0அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
11 “இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
௧௧தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
12 இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும் ஏன் இந்த வீண்பேச்சு?
௧௨இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
13 “கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
௧௩பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
14 அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
௧௪அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
15 அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
௧௫அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை.
16 அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,
௧௬அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,
17 அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
௧௭அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
18 அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.
௧௮அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.
19 அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
௧௯அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
20 பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.
௨0வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
21 கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.
௨௧கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
22 அது இரக்கமின்றி அவனை விரட்டும்; இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.
௨௨அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;
23 மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”
௨௩மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.

< யோபு 27 >