< யோபு 12 >
1 பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
௧யோபு மறுமொழியாக:
2 “நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
௨“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3 எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல; இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
௩உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4 “நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்; நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும், என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
௪என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான்.
5 சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
௫ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.
6 திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன; தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும், இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
௬திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும், ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
௭இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8 பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும். அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
௮அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9 யெகோவாவின் கரமே இதைச் செய்தது என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
௯யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
10 ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும், எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
௧0எல்லா உயிரினங்களின் உயிரும், மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11 நாவு உணவை ருசிப்பதுபோல, காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
௧௧வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12 முதியோரிடத்தில் ஞானம் இருக்கும். வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
௧௨முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13 “ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன; ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
௧௩அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14 அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
௧௪இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
15 தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது; அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
௧௫இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும்.
16 பெலமும் வெற்றியும் அவருக்குரியன; ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
௧௬அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17 அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்; நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
௧௭அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார்.
18 அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
௧௮அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார்.
19 அவர் ஆசாரியர்களை நீக்கி, நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
௧௯அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
20 அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்; முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
௨0அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார்.
21 அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
௨௧அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார்.
22 அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்; இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
௨௨அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
23 அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்; மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
௨௩அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.
24 பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்; பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
௨௪அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார்.
25 அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்; வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.
௨௫அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.