< யோபு 11 >

1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது:
அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:
2 “இந்த வார்த்தைகளுக்கு யாராவது பதில்சொல்ல வேண்டாமா? அதிகப் பேச்சினால் ஒருவன் நீதிமானாக முடியுமா?
“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ?
3 உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ? நீ கேலி செய்யும்போது யாரும் உன்னைக் கண்டிக்கமாட்டார்களோ?
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
4 நீ இறைவனிடம், ‘என்னுடைய நம்பிக்கைகள் மாசற்றவை; நான் உமது பார்வையில் தூய்மையானவன்’ என்று சொல்கிறாய்.
என் சொல் சுத்தம் என்றும், நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
5 இறைவன் உன்னோடு பேசினால் நலமாயிருக்கும், அவர் உனக்கு விரோதமாக,
ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து,
6 ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது; ஏனெனில் மெய்ஞானம் இருபக்கங்களைக் கொண்டது. இறைவன் உனது பாவங்களில் சிலவற்றைக்கூட மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்.
உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
7 “இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ? எல்லாம் வல்லவரின் எல்லைகளை ஆராய உன்னால் முடியுமோ?
தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?
8 அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்? (Sheol h7585)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol h7585)
9 அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை; கடலைவிட அகலமானவை.
அதின் அளவு பூமியைவிட நீளமும், சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது.
10 “அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால், யாரால் அவரை எதிர்த்து நிற்கமுடியும்?
௧0அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடை செய்கிறவன் யார்?
11 ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்; தீமையைக் காணும்போது அவர் கவனியாமல் இருப்பாரோ?
௧௧மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?
12 ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ, அப்படியே பகுத்தறிவில்லாத ஒருவனும் ஞானமுள்ளவனாகமாட்டான்.
௧௨புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், அறிவுள்ளவனாக இருக்கிறான்.
13 “அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம் பயபக்தியாயிருந்து உன் கைகளை அவரிடத்திற்கு நீட்டி,
௧௩நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
14 உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு, உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால்,
௧௪உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
15 நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி, பயமின்றி உறுதியாய் நிற்பாய்.
௧௫அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர்.
16 நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய், கடந்துபோன தண்ணீரைப்போல அது உன் ஞாபகத்தில் இருக்கும்.
௧௬அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
17 அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும், இருள் காலையைப்போல மாறும்.
௧௭அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
18 நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர், சுற்றிலும் பார்த்து, பாதுகாப்பாக இளைப்பாறுவாய்.
௧௮நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.
19 யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்; அநேகர் உன் தயவை தேடிவருவார்கள்.
௧௯பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.
20 ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும், அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களின் நம்பிக்கை மரணமே.”
௨0துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.

< யோபு 11 >