< எரேமியா 52 >
1 சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள்.
2 சிதேக்கியாவும் யோயாக்கீம் செய்ததுபோலவே, யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
3 யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார். இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான்.
4 எனவே சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதி பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தன் எல்லாப் படைகளுடனும், எருசலேமுக்கு விரோதமாக அணிவகுத்து வந்தான். அவர்கள் நகரத்துக்கு வெளியே முகாமிட்டு, அதைச் சுற்றிலும் கொத்தளங்களை அமைத்தார்கள்.
5 சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
6 நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில், பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால், அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது.
7 அப்பொழுது பட்டணத்து மதில் உடைக்கப்பட்டது. முழு இராணுவமும் தப்பி ஓடியது. பாபிலோனியர் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசனின் தோட்டத்தின் அருகே இரு சுவர்களுக்கும் இடையில் இருந்த வாசல் வழியாக, இரவு நேரத்தில் அவர்கள் பட்டணத்தைவிட்டு ஓடினார்கள். அவர்கள் யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கித் தப்பி ஓடினார்கள்.
8 ஆனால் பாபிலோனியப் படைகள் சிதேக்கியா அரசனைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் அவனைப் பிடித்தார்கள். அவனுடைய எல்லா இராணுவவீரரும் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டதால், சிதேக்கியா பிடிபட்டான்.
9 அவன் ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கே பாபிலோன் அரசன் அவனுக்குத் தீர்ப்பளித்தான்.
10 ரிப்லாவிலே பாபிலோன் அரசன், சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். யூதாவின் எல்லா அலுவலர்களையும் கொலைசெய்தான்.
11 பின்பு பாபிலோனின் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். அங்கே அவன் சாகும் நாள்வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.
12 பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்த மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்.
13 அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான்.
14 பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த எல்லா மதில்களையும் உடைத்தது வீழ்த்தியது.
15 மெய்க்காவல் தளபதி நேபுசராதான் ஏழை மக்களுள் சிலரையும், பட்டணத்தில் மீதியாயிருந்தவர்களையும், மீதியாயிருந்த கைவினைஞர்களுடனும், பாபிலோன் அரசனிடம் சரணடைய வந்தவர்களுடனும் நாடுகடத்திச் சென்றான்.
16 ஆனால் அந்த நாட்டில் மீதியாயிருந்த ஏழை மக்களையோ, திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக மெய்க்காவல் தளபதி நேபுசராதான் அங்கே விட்டுச்சென்றான்.
17 பாபிலோனியர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலம் முழுவதையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
18 அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தூபகிண்ணங்களையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
19 மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தூபகலசங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும், பானைகளையும், குத்துவிளக்குகளையும், தட்டங்களையும், பானபலிக்குப் பயன்படுத்தப்பட்ட கிண்ணங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
20 யெகோவாவின் ஆலயத்துக்காக அரசனாகிய சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், அதன் உருளக்கூடிய ஆதாரங்களுக்கு கீழிருந்த பன்னிரண்டு வெண்கல எருதுகள், ஆகியவற்றிலுள்ள வெண்கலத்தின் எடை நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன.
21 ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமும், பதினெட்டு அடி சுற்றளவுமாயிருந்தன. ஒவ்வொன்றும் நான்கு விரலளவு கனமாகவும், உள்ளே குழாயாகவும் இருந்தது.
22 தூணின் உச்சியில் ஏழரை அடி உயரமான வெண்கலக் குமிழ் இருந்தது. அது சுற்றிலும் வெண்கலத்தினாலான வலைப் பின்னல்களாலும், வெண்கல மாதுளம் பழங்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தன. மற்றத் தூணும், அப்படியே அதன் மாதுளம் பழங்களோடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
23 அதன் பக்கங்களில் தொண்ணூற்றாறு மாதுளம் பழங்கள் இருந்தன. சுற்றிலும் வலைப்பின்னலுக்கு மேலாக இருந்த மாதுளம் பழங்களின் மொத்த எண்ணிக்கை நூறு ஆகும்.
24 மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது நிலை ஆசாரியனான செப்பனியாவையும், மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான்.
25 மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில் இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஏழு அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான்.
26 காவல் தளபதி நேபுசராதான் அவர்கள் யாவரையும் ரிப்லாவிலிருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டுபோனான்.
27 அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள்.
28 நேபுகாத்நேச்சார் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கையாவது: அவன் ஆட்சி செய்த ஏழாம் வருடத்தில் 3,023 யூதர்களும்,
29 நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடத்தில் எருசலேமிலிருந்து 832 பேரும் கொண்டுசெல்லப்பட்டனர்.
30 நேபுகாத்நேச்சாரின் இருபத்தி மூன்றாம் வருடத்தில், 745 யூதர்கள் காவல் தளபதியான நேபுசராதானால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் மொத்தமாக 4,600 பேர்.
31 யூதா அரசன் யோயாக்கீன் நாடுகடத்தப்பட்ட முப்பத்தேழாம் வருடத்தில், ஏவில் மெரொதாக் பாபிலோனுக்கு அரசனானான், அவன் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதி, யூதாவின் அரசன் யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.
32 அவன் யோயாக்கீனுடன் அன்பாகப் பேசி, பாபிலோனில் தன்னோடிருந்த மற்ற அரசர்களைப் பார்க்கிலும் மேன்மையான இருக்கையை அவனுக்குக் கொடுத்தான்.
33 அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான்.
34 யோயாக்கீனின் மரண நாள்வரை, உயிர்வாழ்ந்த நாளெல்லாம், பாபிலோன் அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.