< எரேமியா 50 >

1 பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே:
யெகோவா தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்திற்கும் விரோதமாகச் சொன்ன வசனம்:
2 “அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள். கொடியை உயர்த்தி பிரசித்தப்படுத்துங்கள். ஒன்றையும் மறைக்காமல் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘பாபிலோன் கைப்பற்றப்படும். பேல் தெய்வம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும், மெரொதாக் தெய்வம் பயங்கரத்தினால் நிரப்பப்படும். பாபிலோனின் உருவச்சிலைகள் வெட்கத்துக்குள்ளாகும். அவளுடைய விக்கிரகங்களும் பயங்கரத்தினால் நிரப்பப்படும்.’
பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் வெட்கமடைந்தது; அதினுடைய சிலைகள் நொறுங்கிப்போயின என்று மக்களுக்குள்ளே அறிவித்துப் பிரபலப்படுத்துங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்செய்யுங்கள்.
3 வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். ஒருவனும் அதில் வாழமாட்டான். மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள்.
அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
4 “அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்குக் கண்ணீருடன் போவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் வருவார்கள்; அவர்களும் யூதா மக்களும் ஏகமாக அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
5 “சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத ஒரு நித்திய உடன்படிக்கையினால் தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள்.
மறக்கமுடியாத நிலையான உடன்படிக்கையினால் நாம் யெகோவாவைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராக முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
6 “என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைத் தவறாய் வழிநடத்தி, மலைகளில் அலைந்து திரியப் பண்ணினார்கள். அவர்கள் மலையின்மேலும் குன்றின்மேலும் அலைந்து திரிந்து, தங்கள் இளைப்பாறும் சொந்த இடத்தை மறந்துவிட்டார்கள்.
என் மக்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறச்செய்து, மலைகளில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.
7 அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள்.
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் யெகோவாவுக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள்.
8 “பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள், பாபிலோனியரின் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்; மந்தைக்கு முன்செல்லும் வெள்ளாடுகளைப்போல் இருங்கள்.
பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல இருங்கள்.
9 ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின் ஒரு கூட்டத்தைப் பாபிலோனுக்கு விரோதமாகத் தூண்டி, எழுப்பிக் கொண்டுவருவேன். அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுத்து வருவார்கள். வடக்கிலிருந்து அது சிறைப்பிடிக்கப்படும். அவர்களுடைய அம்புகள் வெறுங்கையுடன் திரும்பிவராத திறமைவாய்ந்த போர் வீரரைப்போல் இருக்கும்.
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய மக்கள் கூட்டத்தை எழுப்பி, அதை வரச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்செய்வார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் வீணாகத் திரும்புவதில்லை.
10 பாபிலோன் சூறையாடப்படும். அதைச் சூறையாடுபவர்கள் யாவரும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
௧0கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லோரும் பரிபூரணமடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
11 என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே! நீங்கள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறீர்கள். சூடுமிதிக்கும் இளம் பசுவைப்போல் துள்ளிக் குதிக்கிறீர்கள்; ஆண் குதிரைகளைப்போல் கனைக்கிறீர்கள்.
௧௧தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.
12 ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள்.
௧௨உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
13 அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால், இனி குடியேற்றப்படாமல், முற்றிலும் கைவிடப்பட்டிருக்கும். பாபிலோனைக் கடந்து போகிறவர்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு நேரிட்டவைகளைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.
௧௩யெகோவாவின் கோபத்தினால் அது குடியற்றதும் பெரும் பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, நடுங்குவான்.
14 வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள்.
௧௪நீங்கள் எல்லோரும் பாபிலோனுக்கு விரோதமாகச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பார்க்காதீர்கள்; அது, யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.
15 எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. இது யெகோவாவின் பழிவாங்குதல். ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள்.
௧௫அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது யெகோவா வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
16 விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும்.
௧௬விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்செய்யுங்கள்; கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்ப அவரவர் தங்கள் மக்களிடத்திற்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள்.
17 இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. முதலில் அசீரிய அரசனே அதை விழுங்கியவன். கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன்.
௧௭இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
18 ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன்.
௧௮ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
19 இஸ்ரயேலையோ நான் திரும்பவும் அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். எப்பிராயீம் மலைநாட்டிலும், கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான்.
௧௯இஸ்ரவேலை அதின் இடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
20 அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். அங்கு ஒன்றும் இராது. யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். ஒன்றும் காணப்படமாட்டாது. ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
௨0அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
21 மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள்.
௨௧மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.
22 நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
௨௨தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
23 முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது?
௨௩சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! மக்களுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போனது!
24 பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய்.
௨௪பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.
25 யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாபிலோன் நாட்டில் ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு.
௨௫யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய கோபத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்தில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற செயல்.
26 வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். ஒன்றும் மீந்திராதபடி அவளை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
௨௬கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
27 அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது.
௨௭அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேருவதாக; ஐயோ, அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
28 பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள்.
௨௮நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனில் அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
29 வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள்.
௨௯பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது.
30 ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
௩0ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் போர்வீரர் எல்லோரும் அந்நாளில் சங்காரமாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
31 “பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். “உன் நாள் வந்துவிட்டது; நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது.
௩௧இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
32 அகங்காரி இடறி விழுவாள்; அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.”
௩௨பெருமையுள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் நெருப்பைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லோரையும் பட்சிக்கும்.
33 மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள்.
௩௩சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் ஏகமாக ஒடுக்கப்பட்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின அனைவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
34 ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார்.
௩௪அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்; தேசத்தை இளைப்பாறச்செய்வதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கச்செய்வதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
35 பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார். பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும்.
௩௫பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று யெகோவா சொல்லுகிறார்.
36 அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் மூடர்களாவார்கள். அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள்.
௩௬பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
37 அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பெண்களைப் போலாவார்கள். அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். அவை சூறையாடப்படும்.
௩௭பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலதேசத்தின் மக்கள் அனைவர்மேலும் வரும், அவர்கள் தைரியமற்றவர்களாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
38 அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். அவை வறண்டுபோகும். ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும்.
௩௮வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோகும்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
39 ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; ஆந்தையும் அங்கு வசிக்கும். அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள்.
௩௯ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை.
40 இறைவன் சோதோமையும், கொமோராவையும் அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்த்ததைப்போலவே, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார்.
௪0தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
41 “இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.
௪௧இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
42 அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது. பாபிலோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.
௪௨அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
43 அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது.
௪௩அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
44 யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.
௪௪இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தங்குமிடத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியில் ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டம்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
45 “ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
௪௫ஆகையால் யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்திற்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்களுடைய தங்குமிடங்களை அவர் பாழாக்குவார்.
46 பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.”
௪௬பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் மக்களுக்குள்ளே கேட்கப்படும்.

< எரேமியா 50 >