< எரேமியா 15 >
1 அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும்.
௧யெகோவா என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்திற்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த மக்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு.
2 ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “‘மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் மரணத்துக்கும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்கள் வாளுக்கும், பஞ்சத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்கும் போவார்கள்.’
௨எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு.
3 “நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன்.
௩கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
4 யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன்.
௪எசேக்கியாவின் மகனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையச்செய்வேன்.
5 “எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்? யார் உனக்காக துக்கிப்பார்கள்? நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்க யார் வருவார்கள்?
௫எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதாபப்படுவார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?
6 நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய். ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன். என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது.
௬நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன். அவர்கள் தங்கள் வழிகளைவிட்டு மனந்திரும்பாதபடியினால் என் மக்களை தவிக்கச்செய்து, அவர்கள்மேல் அழிவைக் கொண்டுவருவேன்.
௭தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் மக்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாததினால் நான் அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்கி அழிப்பேன்.
8 அவர்களின் விதவைகளை கடற்கரை மணலைப் பார்க்கிலும் எண்ணற்றவர்களாக்குவேன். நண்பகலில் அவர்களுடைய வாலிபரின் தாய்மாருக்கு எதிராக அழிக்கிறவனைக் கொண்டுவருவேன். திடீரென அவர்கள்மீது கலகத்தையும், பயங்கரத்தையும் கொண்டுவருவேன்.
௮கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன்.
9 ஏழு பிள்ளைகளின் தாய் மூச்சடைத்து செத்துப்போவாள். இன்னும் பகல் வேளையாயிருக்கும்போதே அவளுடைய சூரியன் அஸ்தமிக்கும். அவள் அவமானத்துக்குள்ளாகி தாழ்த்தப்பட்டுப் போவாள். அவர்களில் தப்பியிருப்பவர்களை அவர்களுடைய பகைவருக்கு முன்பாக வாளுக்கு இரையாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
௯ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் இளைத்துப்போகிறாள்; அவள் தன் உயிரை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கும்போது அவளுடைய சூரியன் மறைந்தது; வெட்கமும் அவமானமும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய எதிரிகளுக்கு முன்பாகப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
10 அப்பொழுது நான், “என் தாயே! நீ என்னைப் பெற்றெடுத்தாயே; முழு நாடுமே எதிர்த்து வாதாடும் மனிதனாகிய என்னைப் பெற்றாயே! நான் யாரிடத்திலும் கடன் வாங்கவும் இல்லை, யாருக்கும் கடன் கொடுக்கவும் இல்லை. அப்படியிருந்தும் ஒவ்வொருவரும் என்னைச் சபிக்கிறார்கள்.”
௧0என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதிற்கும் உள்ளானவனாயிருக்க என்னை நீ பெற்றாயே; ஐயோ, நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லோரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11 அதற்கு யெகோவா சொன்னதாவது, “நான் உன்னை நிச்சயமாக ஒரு நல்ல நோக்கத்திற்காக விடுவிப்பேன்; பேராபத்திலும், பெருந்துன்ப காலத்திலும் நிச்சயமாக உன் பகைவர்கள் உன்னிடத்தில் கெஞ்சி மன்றாடும்படி செய்வேன்.
௧௧உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் பகைவனுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
12 “ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது, வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ?
௧௨வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
13 “நாடு முழுவதிலும் அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக, அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும் விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன்.
௧௩உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.
14 அவர்கள் அறியாத நாட்டில் அவர்களுடைய பகைவர்களுக்கு அவர்களை அடிமையாக்குவேன். என் கோபத்தினால் உண்டாகிற நெருப்பு அவர்களுக்கெதிராய் எரியும்” என்றார்.
௧௪நீ அறியாத தேசத்தில் உன் எதிரிகள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகச்செய்வேன்; உங்கள்மேல் எரியப்போகிற நெருப்பை என் கோபத்தினால் ஏற்பட்டது என்று யெகோவா சொன்னார்.
15 யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும். என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும். நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும். உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும்.
௧௫யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
16 உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும், என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன.
௧௬உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பெயர் எனக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
17 நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை. உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன். நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர்.
௧௭நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர்.
18 ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது? நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும், ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன்.
௧௮என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?
19 அதற்கு யெகோவா: “நீ மனந்திரும்பினால், நீ எனக்குப் பணிசெய்யும்படி நான் உன்னை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன். நீ பயனற்ற வார்த்தைகளை விட்டு, பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவாயானால், மீண்டும் என்னுடைய பேச்சாளனாய் இருப்பாய், இந்த மக்கள் உன் பக்கமாகத் திரும்பட்டும்; ஆனால் நீயோ அவர்கள் பக்கமாய்த் திரும்பாதே.
௧௯இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார்.
20 நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்; அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன். அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி, நான் உன்னுடனே இருக்கிறேன்,” என்று யெகோவா அறிவிக்கிறார்.
௨0உன்னை இந்த மக்களுக்கு முன்பாக பாதுகாப்பான வெண்கல மதிலாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாகப் போர்செய்வார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னைப் பாதுகாப்பதற்காகவும், உன்னைக் காப்பாற்றுவதற்காகவும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
21 “கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து, கொடூரமானவர்களின் பிடியிலிருந்து உன்னை மீட்டெடுப்பேன்.”
௨௧நான் உன்னைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றி, உன்னைப் பலவான்களின் கைக்கு விலக்கி விடுவிப்பேன் என்கிறார்.