< எரேமியா 11 >

1 யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே.
யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
2 “இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல்.
நீங்கள் கேட்டு யூதாவின் மனிதருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
3 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன்.
என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;
4 நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.
நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனிதன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறாரென்று அவர்களுக்குச் சொல்.
5 அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன்.
இன்றையதினம் இருக்கிறதுபோல, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்குச் சொன்ன வாக்கை நான் உறுதிப்படுத்த இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் மறுமொழியாக, அப்படியே ஆகக்கடவது யெகோவாவே என்றேன்.
6 அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள்.
அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.
7 நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன்.
நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்த நாள்முதல், இந்நாள்வரை நான் அவர்களுக்கு உறுதியான சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கும்விதமாக எச்சரித்துவந்தேன்.
8 ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.”
ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயக் கடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கச்செய்வேன் என்று சொல் என்றார்.
9 மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது.
மேலும் யெகோவா என்னை நோக்கி: யூதாவின் மனிதருக்குள்ளும் எருசலேமின் குடிமக்களுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.
10 அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள்.
௧0அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தெய்வங்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.
11 ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன்.
௧௧ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
12 அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது.
௧௨அப்பொழுது யூதா பட்டணங்களின் மனிதரும், எருசலேமின் குடிகளும் போய் தாங்கள் தூபங்காட்டியிருந்த தெய்வங்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை காப்பாற்றுவதில்லை.
13 யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’
௧௩யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும் உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி; எருசலேமுடைய வீதிகளின் எண்ணிக்கையும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த வெட்கமான காரியத்திற்கு ஸ்தாபித்த பீடங்களின் எண்ணிக்கையும் சரி.
14 “ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன்.
௧௪ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.
15 “என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே! பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ? நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியடைகிறீர்களோ!”
௧௫தீயவருடன் மகா தீமை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகச்செய்வார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ சந்தோசப்படுகிறாயே.
16 அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும்.
௧௬நல்ல பழம் இருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பெயரைக் யெகோவா உனக்குச் சூட்டினார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.
17 உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள்.
௧௭பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினால் எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்புக்காக உன்மேல் தீங்கை வரச்செய்வேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
18 யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார்.
௧௮அதை யெகோவா எனக்கு அறிவித்ததினால் அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரிவித்தார்.
19 நானோ வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஒரு சாதுவான செம்மறியாட்டுக் குட்டியைப்போல் இருந்தேன். அவர்கள் எனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டியிருந்ததை நான் அறியாதிருந்தேன். அவர்கள், “இந்த மரத்தையும் அதன் பழத்தையும் அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை வெட்டிவிடுவோம். அவனுடைய பெயர் இனி ஒருபோதும் நினைக்கப்படாதே போகட்டும்” என்று சொல்லியிருந்ததையும் நான் அறிந்திருக்கவில்லை.
௧௯மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
20 சேனைகளின் யெகோவாவே, இருதயத்தையும், மனதையும் நீதியாய் நியாயம் தீர்த்து சோதித்தறிகிறவரே! அவர்கள்மேல் உமது பழிவாங்குதல் வருவதை நான் காணவேண்டும். ஏனெனில் என் வழக்கை நானே உம்மிடம் ஒப்புவித்துவிட்டேன்.
௨0சேனைகளின் யெகோவாவே, உள்ளத்தின் எண்ணங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதி செய்கிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
21 ஆகவே உன் உயிரை வாங்கத்தேடும் ஆனதோத் மனிதரைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: அவர்களோ, “யெகோவாவினுடைய பெயரில் இறைவாக்கு உரைக்காதே! அப்படிச் செய்தால் எங்கள் கைகளால் நீ சாவாய்” என்று சொல்கிறார்கள்.
௨௧ஆதலால் நீ எங்கள் கையினால் இறக்காமல் இருக்க யெகோவாவுடைய பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் உயிரை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனிதரைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறார்:
22 ஆகவே சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்களை நான் தண்டிப்பேன். அவர்களுடைய வாலிபர்கள் வாளால் வெட்டுண்டு சாவார்கள். அவர்களுடைய மகன்களும், மகள்களும் பஞ்சத்தால் சாவார்கள்.
௨௨இதோ, இதற்காக உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தால் இறப்பார்கள்; அவர்கள் மகன்களும் அவர்கள் மகள்களும் பஞ்சத்தால் இறப்பார்கள்.
23 அவர்களுக்கு ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நான் தண்டிக்கும் வருடத்தில், ஆனதோத் மனிதர்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.”
௨௩அவர்களில் மீதியாய் இருப்பவர்கள் இல்லை; நான் ஆனதோத்தின் மனிதரை விசாரிக்கும் வருடத்தில் அவர்கள்மேல் ஆபத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

< எரேமியா 11 >