< யாக்கோபு 4 >
1 உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கிற, உங்கள் ஆசைகளில் இருந்தல்லவா அவை வருகின்றன?
2 நீங்கள் ஏதோ ஒன்றைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதில்லை. நீங்கள் கொலைசெய்தும் பொறாமைகொண்டும் அபகரிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை உங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்பதில்லை, அதனாலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
3 நீங்கள் கேட்கும்போதும் கூட, அவற்றைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் தவறான நோக்கத்துடனேயே கேட்கிறீர்கள். உங்கள் சொந்த இன்பங்களை நிறைவேற்றவே அவைகளைக் கேட்கிறீர்கள்.
4 விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான்.
5 அல்லது, நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், நாம் தமக்குரியவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று வைராக்கிய வாஞ்சையுடையவராய் இருக்கிறார் என்ற வேதவசனம் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
6 ஆனால் இறைவனோ நமக்கு அதிக கிருபையைக் கொடுக்கிறார். அதனால்தான் வேதவசனம்: “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்” என்று சொல்லுகிறது.
7 எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
8 இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.
9 துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் நகைப்பு அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.
10 கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
11 பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாய் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால், அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகிறவனாகவும், இறைவனுடைய சட்டத்தை குற்றப்படுத்துகிறவனாகவும் இருக்கிறான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகிறபோது, நீங்கள் அதைக் கைக்கொள்கிறவர்களாய் இல்லாமல், மோசேயின் சட்டத்தை நியாயந்தீர்க்க, அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள்.
12 இறைவன் ஒருவரே சட்டத்தைக் கொடுத்தவரும், நியாயந்தீர்ப்பவருமாய் இருக்கிறார். அவரே நம்மை இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவராய் இருக்கிறார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?
13 “இன்று அல்லது நாளை இந்தப் பட்டணத்திற்கு அல்லது அந்தப் பட்டணத்திற்கு போவோம். அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து, வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
14 நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? அது சற்று நேரத்திற்குத் தோன்றி மறைகின்ற மூடுபனியைப்போல் இருக்கின்றதே.
15 எனவே, “கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் உயிரோடிருந்து இதையோ, அதையோ செய்வோம்” என்றே நீங்கள் சொல்லவேண்டும்.
16 இப்பொழுதோ நீங்கள் அகந்தைகொண்டு, பெருமையாகப் பேசுகிறீர்கள். இவ்விதம் பெருமையாக பேசுவது யாவும் தீமையானது.
17 ஆகவே நன்மைசெய்ய ஒருவருக்கு, அறிந்திருந்தும், அதைச் செய்யாவிட்டால் அது பாவம்.