< யாக்கோபு 3 >

1 என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
என் சகோதரர்களே, அதிக தண்டனையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகர்களாகாதிருங்கள்.
2 நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான்.
3 குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
4 அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாக இருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அந்த இடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்புகிறான்.
5 அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
அப்படியே, நாக்கானதும் சிறிய உறுப்பாக இருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
6 நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna g1067)
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna g1067)
7 எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு.
8 ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
நாக்கை அடக்க ஒரு மனிதனாலும் முடியாது; அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும், மரணத்திற்கு ஏதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது.
9 நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனிதர்களை அதினாலேயே சபிக்கிறோம்.
10 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
௧0துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது.
11 ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
௧௧ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
12 எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
௧௨என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது.
13 உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
௧௩உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.
14 ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
௧௪உங்களுடைய இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம்; சத்தியத்திற்கு விரோதமாகப் பொய் சொல்லாமலிருங்கள்.
15 அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
௧௫இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாக இல்லாமல், உலக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதாகவும், பேய்த்தனத்திற்குரியதுமாகவும் இருக்கிறது.
16 ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
௧௬வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு.
17 ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
௧௭பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.
18 சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.
௧௮நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

< யாக்கோபு 3 >