< ஏசாயா 6 >
1 உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது.
௧உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய ஆடையின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
2 அவருக்கு மேலாக சேராபீன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவை இரு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் தங்கள் பாதங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் பறந்துகொண்டும் இருந்தன.
௨சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து;
3 அவை ஒன்றையொன்று அழைத்து இவ்வாறு கூறியது: “எல்லாம் வல்ல யெகோவா, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கிறது.”
௩ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.
4 அவைகளுடைய குரல்களின் சத்தத்தினால் ஆலயக் கதவு நிலைகளும், வாசற்படிகளும் அதிர்ந்தன, ஆலயம் புகையினாலும் நிரம்பியது.
௪சொன்னவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைக்கால்கள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.
5 அப்பொழுது நான், “எனக்கு ஐயோ, நான் அழிந்தேன்! நானோ அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாழ்கிறேன். என் கண்கள், எல்லாம் வல்ல யெகோவாவாகிய அரசரைக் கண்டுவிட்டனவே” என்று சொன்னேன்.
௫அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவன், பலிபீடத்திலிருந்து எரியும் நெருப்புத் தணலொன்றைக் குறட்டினால் எடுத்து, அதைத் தன் கையில் பிடித்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தான்.
௬அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து,
7 அவன் எனது வாயை அதனால் தொட்டு, “பார், இது உனது உதடுகளைத் தொட்டுள்ளது; உனது குற்றம் நீங்கி, உனது பாவம் நிவிர்த்தியாக்கப்பட்டது” என்றான்.
௭அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
8 பின்பு நான், யெகோவாவின் குரலைக் கேட்டேன், அவர், “யாரை நான் அனுப்புவேன்? யார் நமக்காகப் போவான்?” என்றார். அதற்கு நான், “இதோ, நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்!” என்றேன்.
௮பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
9 அப்பொழுது அவர், “நீ இந்த மக்களிடம்போய் சொல்லவேண்டியது: “‘நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டும் ஒருபோதும் உணராமலும், எப்பொழுதும் பார்த்துக்கொண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும் இருங்கள்.’
௯அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
10 இந்த மக்களின் இருதயத்தைக் கடினமாக்கு, அவர்களின் காதுகளை மந்தமாக்கு, அவர்கள் கண்களை மூடிவிடு. ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், இருதயங்களினால் உணர்ந்து, மனமாறி, குணமடையாமலும் இருக்கச் செய்.”
௧0இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார்.
11 அப்பொழுது நான், “யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு?” என்றேன். அதற்கு அவர் சொன்னதாவது: “பட்டணங்கள் குடியிருப்பாரின்றிப் பாழாக்கப்பட்டு, வீடுகள் கைவிடப்பட்டு, வயல்கள் பாழாகி சூறையாடப்பட்டு,
௧௧அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி,
12 யெகோவா ஒவ்வொருவரையும் வெகுதூரத்துக்கு அனுப்பி நாடு முற்றிலும் கைவிடப்படும் வரைக்குமே அது அப்படியிருக்கும்.
௧௨யெகோவா மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார்.
13 நாட்டின் பத்தில் ஒரு பங்கு மிஞ்சியிருந்த போதிலும் மீண்டும் அதுவும் அழிக்கப்படும். ஆனால் தேவதாரு மரமும், கர்வாலி மரமும் வெட்டப்படும்போது, அடிமரம் விடப்படுவதுபோல் பரிசுத்த விதை நாட்டில் அடிமரமாக இருக்கும்.”
௧௩ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளில் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.