< ஏசாயா 50 >
1 யெகோவா சொல்வது இதுவே: “உங்கள் தாயை நான் விவாகரத்துச் செய்து அனுப்பியபோது, அவளுக்குக் கொடுத்த விவாகரத்துச் சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்தவர்களில் யாருக்காவது நான் உங்களை விற்றேனா? உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள் விற்கப்பட்டீர்கள். உங்கள் மீறுதல்களின் காரணமாகவே உங்களுடைய தாயும் துரத்திவிடப்பட்டாள்.
௧யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
2 நான் வந்தபோது ஒருவரும் இருக்கவில்லையே; அது ஏன்? நான் கூப்பிட்டபோது, ஒருவரும் பதில் கூறவில்லையே; அது ஏன்? உங்களை மீட்க முடியாதபடி என் கை மிகக் குறுகியதாயிருந்ததோ? அல்லது உங்களை விடுவிக்க எனக்கு வலிமையில்லையோ? நான் சிறு அதட்டலினால் கடலை வற்றப்பண்ணுகிறேன்; நான் ஆறுகளைப் பாலைவனமாக மாற்றுகிறேன். தண்ணீர் இல்லாததால், அவர்களுடைய மீன்கள் நாறுகின்றன; தாகத்தால் அவை சாகின்றன.
௨நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது.
3 நான் ஆகாயத்தை இருளால் உடுத்தி, துக்கவுடையை அதன் போர்வையாக்குகிறேன்.”
௩நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன்.
4 இளைத்துப்போனவனை உற்சாகப்படுத்தும்படி, என்ன வார்த்தையை சொல்ல நான் அறிந்திட ஆண்டவராகிய யெகோவா போதிக்கும் நாவை எனக்குக் கொடுத்திருக்கிறார்; காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார், ஒரு சீடனைப்போல் நான் கவனமாய் கேட்கும்படி அவர் எனது செவிப் புலனைத் தட்டி எழுப்புகிறார்.
௪இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
5 ஆண்டவராகிய யெகோவா எனது செவியைத் திறந்திருக்கிறார்; நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை, அவரைவிட்டு நான் விலகவுமில்லை.
௫யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
6 என்னை அடிக்கிறவர்களுக்கு எனது முதுகைக் கொடுத்தேன், எனது தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என்னுடைய தாடைகளைக் கொடுத்தேன்; அவர்கள் ஏளனம் செய்தபோதும், உமிழ்நீரைத் துப்பியபோதும் அதற்கு என் முகத்தை நான் மறைக்கவில்லை.
௬அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
7 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்கு உதவி செய்கிறபடியால், நான் அவமானம் அடையமாட்டேன். ஆகையால் என் முகத்தைக் கற்பாறையைப்போல் வைத்துக்கொள்கிறேன்; நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
௭யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
8 எனக்கு நீதி அளிக்கும் இறைவன் என் அருகில் இருக்கிறார். அப்படியிருக்க, எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவருபவன் யார்? நேருக்குநேர் சந்திப்போம்! என்னைக் குற்றம் சாட்டுபவன் யார்? அவன் எனக்கு முன்னே வரட்டும்.
௮என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
9 ஆண்டவராகிய யெகோவாவே எனக்கு உதவி செய்கிறார். என்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவர்கள் யார்? அவர்கள் எல்லோரும் பொலிவிழந்து பூச்சிகள் அரித்த உடையைப்போல் இத்துப்போவார்கள்.
௯இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
10 உங்களுக்குள் யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவரது பணியாளனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவன் யார்? வெளிச்சம் இல்லாதவனாய் இருளில் நடக்கிறவன், யெகோவாவின் பெயரில் நம்பிக்கை வைத்து, தன் இறைவனில் சார்ந்திருக்கட்டும்.
௧0உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக.
11 ஆனால் இப்பொழுதோ, நெருப்பை மூட்டி உங்களுக்கென்று எரிகின்ற பந்தங்களை உண்டாக்கிக்கொள்கிற பாவிகளே! நீங்கள் எல்லோரும் போய், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலே நடவுங்கள். நீங்கள் பற்றவைத்த பந்தங்களின் வெளிச்சத்திலே நடவுங்கள். அப்பொழுது என்னுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்வது இதுவே, நீங்கள் வேதனையிலே கிடப்பீர்கள்.
௧௧இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.