< ஏசாயா 40 >
1 என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், என உங்கள் இறைவன் சொல்கிறார்.
௧என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
2 எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது; அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது; அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும் இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
௨எருசலேமுடன் ஆதரவாகப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியானது என்றும், அது தன் சகல பாவங்களுக்காக யெகோவாவின் கையில் இரட்டிப்பாக அடைந்து முடிந்தது என்றும், அதற்குச் சொல்லுங்கள் என்று உங்கள் தேவன் சொல்கிறார்.
3 ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: “பாலைவனத்தில் யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
௩யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும்,
4 ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
௪பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,
5 யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
௫யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது.
6 “உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
௬பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
7 யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, பூக்களும் உதிர்கின்றன; நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.
௭யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல்.
8 புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
௮புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
9 சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு. எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு. பயப்படாதே, குரலை எழுப்பு; “இதோ உங்கள் இறைவன்!” என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.
௯சீயோனுக்கு சுவிசேஷம் கொண்டுவருகிறவளே, நீ உயர்ந்த மலையில் ஏறு; எருசலேமுக்கு வரும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.
10 இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும். அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது, அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
௧0இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்திற்கு முன்பாகச் செல்கிறது.
11 அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்; அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
௧௧மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாக நடத்துவார்.
12 கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து, வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்? பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்? அல்லது மலைகளை நிறைகோலாலும், குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்?
௧௨தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் கணக்கிட்டு, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, மலைகளை அளவுகோலாலும், தராசாலும் நிறுத்தவர் யார்?
13 யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு, அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்?
௧௩யெகோவாவுடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
14 யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்? சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்? அவருக்கு அறிவைக் போதித்து, விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?
௧௪தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாருடன் ஆலோசனை செய்தார்?
15 உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும் தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன; அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்; அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.
௧௫இதோ, தேசங்கள் வாளியில் வடியும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், கருதப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
16 லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது. அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது.
௧௬லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
17 எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர். அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும், பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
௧௭சகல தேசங்களும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் கருதப்படுகிறார்கள்.
18 இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்?
௧௮இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
19 விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான், கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி, அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான்.
௧௯உலோக வேலைசெய்பவன் ஒரு சிலையை வார்க்கிறான், கொல்லன் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருத்துகிறான்.
20 அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான். அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.
௨0அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சிலையைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.
21 நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ? பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ?
௨௧நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
22 அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார், அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து, அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார்.
௨௨அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
23 அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்; உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார்.
௨௩அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
24 அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே, அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே, அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத, அவர்கள் வாடிப்போகிறார்கள். சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.
௨௪அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதும்போது பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும்.
25 “நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார்.
௨௫இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை சமமாக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிறார்.
26 கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: இவைகளையெல்லாம் படைத்தவர் யார்? நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து, அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே. அவருடைய மிக வல்லமையாலும், மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.
௨௬உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
27 “என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது; இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்” என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்? இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்?
௨௭யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி யெகோவாவுக்கு மறைவானது என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ ஏன் சொல்லவேண்டும்?
28 நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? யெகோவாவே நித்திய இறைவன், பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே. அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை. அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.
௨௮பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
29 அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.
௨௯சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.
30 இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், வாலிபர் இடறி விழுவார்கள்.
௩0இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபர்களும் இடறிவிழுவார்கள்.
31 ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர் தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்; அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்; அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
௩௧யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள்.