< ஏசாயா 23 >

1 தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு: தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்! தீரு அழிந்துபோனது; அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது. சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2 தீவின் மக்களே, கப்பலோட்டிகளில் செல்வந்தரான சீதோனின் வணிகர்களே, மவுனமாயிருங்கள்.
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.
3 சீகோரின் பெருவெள்ளத்தினால் விளையும் தானியமும், நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது. தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.
4 ஆகையால் சீதோனே, வெட்கப்படு; “நான் பிரசவ வேதனைப்படவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; நான் இளைஞர்களைப் பராமரிக்கவோ, கன்னிகைகளை வளர்க்கவோ இல்லை” என்று கடல் சொல்கின்றது; கடற்கோட்டை பேசுகின்றது.
சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.
5 செய்தி எகிப்திற்கு எட்டியதும், அங்குள்ளவர்கள் தீருவிலிருந்து வந்த அந்தச் செய்தியின் நிமித்தம் வேதனைப்படுவார்கள்.
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
6 தீவுகளின் மக்களே, தர்ஷீசுக்குக் கடந்துசென்று அழுது புலம்புங்கள்.
கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
7 அந்தப் பழைய பட்டணம் இதுதானா? களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா? தூர நாடுகளில் குடியிருக்கும்படி, தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
8 தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்? அது மகுடங்களை வழங்கியதே, தீருவின் வர்த்தகர்கள் இளவரசர்களாயும், அதன் வியாபாரிகள் பூமியில் பெயர் பெற்றவர்களாயும் இருந்தனரே!
கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
9 சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்; எல்லாச் சிறப்பின் பெருமையையும் சிறுமைப்படுத்துவதற்கும், பூமியில் புகழ்ப்பெற்ற அனைவரையும் தாழ்த்துவதற்குமே இவ்வாறு செய்தார்.
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
10 தர்ஷீசின் மகளே, நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ; ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.
௧0தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
11 யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி, அதன் அரசுகளை நடுங்கச் செய்துள்ளார். கானானின் கோட்டைகளை அழிக்கும்படி அவர் கட்டளையிட்டிருக்கிறார்.
௧௧யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:
12 மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே, இப்போது நசுக்கப்பட்டுக் கிடக்கிறாயே! இனி உனக்கு ஒருபோதும் களியாட்டம் இல்லை. “நீ எழுந்து சைப்பிரஸுக்குப் போ, அங்கேயும் நீ ஆறுதலைக் காணமாட்டாய்” என்றார்.
௧௨ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
13 கல்தேயரின் நாட்டைப் பார், அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே! இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப் பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள். முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி, அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப் பாழிடமாக்கி விட்டார்கள்.
௧௩கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
14 தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!
௧௪தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
15 அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:
௧௫அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
16 “மறக்கப்பட்ட வேசியே, வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட; உன்னை நினைவுகூரும்படியாக வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”
௧௬மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
17 யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள்.
௧௭எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும்.
18 ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.
௧௮அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

< ஏசாயா 23 >