< ஏசாயா 20 >
1 அசீரிய அரசன் சர்கோன், தனது தர்த்தான் படைத்தளபதியை அஸ்தோத் பட்டணத்திற்கு அனுப்பினான். அவன் வந்து அதைத் தாக்கிக் கைப்பற்றிய வருடத்தில்,
௧சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
2 யெகோவா ஆமோஸின் மகன் ஏசாயா மூலம் பேசினார்: அந்த வேளையில் அவர் ஏசாயாவிடம், “உனது இடுப்பில் இருக்கும் துக்கவுடையையும், உனது செருப்பையும் கழற்றிவிடு” என்றார். அவனும் அப்படியே செய்து உடையின்றி வெறுங்காலுடன் திரிந்தான்.
௨யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான்.
3 பின்பு யெகோவா சொன்னதாவது: “எனது அடியவன் ஏசாயா உடையின்றியும், வெறுங்காலுடனும் மூன்று வருடங்கள் திரிந்திருக்கிறான். இது எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் விரோதமான முன்னெச்சரிப்பும் அடையாளமுமாகும்.
௩அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
4 இதேபோல் அசீரிய அரசன், எகிப்திய கைதிகளையும், நாடுகடத்தப்பட்ட எத்தியோப்பிய முதியோரையும் இளையோரையும் உடையின்றியும், வெறுங்காலுடனும், பின்பக்கம் மூடப்படாதவர்களாயும் கடத்திச் செல்வான். இவ்விதம் எகிப்து வெட்கமடையும்.
௪அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
5 அப்பொழுது எத்தியோப்பியாவில் நம்பிக்கை வைத்து, எகிப்தைக் குறித்து பெருமை பாராட்டியவர்கள், பயந்து வெட்கத்துக்குள்ளாவார்கள்.
௫அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
6 அந்த நாளிலே, இந்தக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ‘நாம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது பாருங்கள். அசீரிய அரசனிடமிருந்து விடுதலை பெறும்படி உதவிக்காக இவர்களிடமல்லவா ஓடினோம். அப்படியானால் நாம் எப்படித் தப்புவோம்?’” என்பார்கள்.
௬இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.