< ஏசாயா 17 >
1 தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: “பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது; அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
௧தமஸ்குவைக் குறித்த அறிவிப்பு. இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
2 அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு, மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்; அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
௨ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தை வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
3 எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்; தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும். இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே, சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
௩பாதுகாப்பு எப்பிராயீமையும், அரசாட்சி தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் மக்களுடைய மகிமைக்கு சம்பவித்ததுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் சம்பவிக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
4 “அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்; அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.
௪அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோகும், அவனுடைய கொழுத்த உடல் மெலிந்துபோகும்.
5 அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து, தன் கையால் அறுவடை செய்வதுபோலவும், ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”
௫ஒருவன் ஓங்கின பயிரை அறுவடைசெய்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
6 ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின், அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும், பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள் விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”
௬ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நான்கோ அல்லது ஐந்தோ காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார்.
7 அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்; அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.
௭அக்காலத்திலே மனிதன் தன் கைகளின் செயல்களாகிய பீடங்களை பார்க்காமலும், தன் விரல்கள் உண்டாக்கின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் பார்க்காமலும்,
8 தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்; அசேரா தேவதைகளின் தூண்களுக்கும், தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும் மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள்.
௮தன்னை உண்டாக்கினவரையே பாரப்பான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே பார்த்துக் கொண்டிருக்கும்.
9 இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.
௯அக்காலத்திலே அவர்களுடைய பாதுகாப்பான பட்டணங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு மீதியாக வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க்கிடக்கும்.
10 நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து, உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள். ஆதலால் சிறந்த தாவரங்களையும், வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும் ஒழுங்காய் நாட்டினாலும்,
௧0உன் பெலமாகிய கன்மலையை நீ நினைக்காமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆகவே நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,
11 நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும், விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும் அறுவடையில் ஒன்றும் இராது; வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.
௧௧பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் செய்தாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
12 அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்; அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள். மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்; பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.
௧௨ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது.
13 பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும், அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள். அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும், புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
௧௩மக்கள் கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாக ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறந்துபோகிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
14 மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்; விடியுமுன் அழிவு; நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே; நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே.
௧௪இதோ, மாலை நேரத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்திற்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையிடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.