< ஓசியா 8 >
1 “உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான். ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி, எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.
௧உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.
2 ‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.
௨எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள்.
3 ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்; அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.
௩ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான்.
4 என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்; இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.
௪அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு சிலைகளைச் செய்தார்கள்.
5 யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு; எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது. எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
௫சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்?
6 அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது; அது இறைவனல்ல, அதை ஒரு கைவினைஞன் செய்தான், எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும்.
௬அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும்.
7 “ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து, சுழல்காற்றை அறுவடை செய்கிறார்கள். பயிரின் தண்டில் கதிர் இல்லை; அதிலிருந்து மாவும் கிடைக்காது. அது தானியத்தைக் கொடுக்குமானால் அவற்றை அந்நியர் விழுங்குவார்கள்.
௭அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர்கள் அதை விழுங்குவார்கள்.
8 இஸ்ரயேல் விழுங்கப்பட்டது; இப்பொழுது அவர்கள் நாடுகளுக்குள்ளே ஒருவருக்கும் பயனற்ற பானையைப்போல் இருக்கிறார்கள்.
௮இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
9 அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல் அசீரியாவுக்குப் போய்விட்டார்கள். எப்பிராயீமர் தன்னை தன் காதலர்களுக்கு விற்றுப் போட்டார்கள்.
௯அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
10 அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும், இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன். வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ், அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.
௧0அவர்கள் அன்னியமக்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்திற்குள்ளே அகப்படுவார்கள்.
11 “எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும், இவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின.
௧௧எப்பிராயீம் பாவம் செய்வதற்கேதுவாக பலிபீடங்களைப் பெருகச்செய்தார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவம்செய்வதற்கு ஏதுவாகும்.
12 நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.
௧௨என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்.
13 அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி, அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்; ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை. இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு, அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள்.
௧௩எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள்.
14 ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து, அரண்மனைகளைக் கட்டுகிறது; யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது. ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்; அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”
௧௪இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின தேவனை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா பாதுகாப்பான பட்டணங்களைப் பெருகச்செய்கிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரச்செய்வேன்; அது அவைகளின் கோவில்களைச் சுட்டெரிக்கும்.