< ஓசியா 5 >

1 “ஆசாரியர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்; இஸ்ரயேல் வீட்டாரே கவனியுங்கள்; அரச குடும்பத்தாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயத்தீர்ப்பு உங்களுக்கெதிரானதே. ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே கண்ணியாகவும், தாபோரிலே விரிக்கப்பட்ட வலையாகவும் இருக்கிறீர்கள்.
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
2 கலகக்காரர்கள் கொலைசெய்வதில் வேரூன்றி இருக்கிறார்கள். நான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துத் திருத்துவேன்.
நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன்.
3 எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்; இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை. ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்பொழுது வேசித்தனத்திற்கு திரும்பிவிட்டாய்; இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
4 “அவர்களுடைய செயல்கள் அவர்களை அவர்களுடைய இறைவனிடம் திரும்புவதற்கு விடாதிருக்கிறது. வேசித்தன ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கிறது; யெகோவாவைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள்.
5 இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது; இஸ்ரயேலும் எப்பிராயீமும் தங்கள் பாவத்தில் இடறி விழுகிறார்கள்; அவர்களுடன் யூதாவுங்கூட இடறி விழுகிறது.
இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான்.
6 அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும் யெகோவாவை தேடிப் பலியிட வருவார்கள்; ஆனால் அவர்கள் அவரைக் காணமாட்டார்கள்; ஏனெனில் அவர் அவர்களைவிட்டு விலகினார்.
அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
7 அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகளும் எனக்குரியவர்களல்ல. இப்பொழுதும் அவர்களுடைய அமாவாசைப் போலிக் கொண்டாட்டங்கள் அவர்களையும் அவர்களுடைய வயல்களையும் விழுங்கிப்போடும்.
யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள்.
8 “கிபியாவில் எக்காளத்தையும், ராமாவிலே கொம்பு வாத்தியத்தையும் ஊதுங்கள். பெத் ஆவெனில் போர் முழக்கமிடுங்கள்; பென்யமீனே, நீ முன்னேசெல்.
கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
9 தண்டனையின் நாளில் எப்பிராயீம் பாழாய் விடப்படும். நிச்சயமாய் நடக்கப் போகிறதையே, நான் இஸ்ரயேல் கோத்திரங்கள் மத்தியில் பிரசித்தப்படுத்துகிறேன்.
தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
10 யூதாவின் தலைவர்கள் எல்லைக் கற்களை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். என் கோபத்தை வெள்ளத்தைப்போல் அவர்கள்மேல் ஊற்றுவேன்.
௧0யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பில் நசுக்கப்படுவான். ஏனெனில் அவன் விக்கிரகங்களைப் பின்பற்றுவதையே நோக்கமாய் கொண்டிருக்கிறான்.
௧௧எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
12 அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப் பூச்சியைப்போலவும், யூதாவின் வீட்டாருக்கு அழுகல் நோய்போலவும் இருப்பேன்.
௧௨நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
13 “எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் புண்களையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி, அதன் பெரிய அரசனிடம் உதவி கேட்டனுப்பினான். ஆனால் உனக்கு சுகமாக்கவும், உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.
௧௩எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது.
14 ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கம் போலவும், யூதாவுக்கு பெருஞ்சிங்கம் போலவும் இருப்பேன். நான் அவர்களை துண்டுகளாய் கிழித்து தூக்கிக்கொண்டு போவேன்; ஒருவரும் அவர்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.
௧௪நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
15 எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிப் போவேன். அவர்கள் தங்கள் அவலத்தில் என்னை வாஞ்சையாய்த் தேடுவார்கள்.”
௧௫அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.

< ஓசியா 5 >