< ஓசியா 14 >
1 இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.
௧இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
2 நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் யெகோவாவிடம் திரும்புங்கள்; நீங்கள் அவரிடம், “எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.
௨வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம்.
3 அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை ‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.”
௩அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
4 “நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
௪நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது.
5 நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லில்லியைப்போல் பூப்பான். லெபனோனின் கேதுருபோல் வேரூன்றி நிற்பான்.
௫நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
6 அவனுடைய இளந்தளிர்கள் வளரும். அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும்.
௬அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
7 திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; அவன் தானியத்தைப்போல் செழிப்பான். திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்; அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும்.
௭அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
8 எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன். நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன். அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.”
௮இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான்.
9 ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.
௯இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.