< ஆதியாகமம் 6 >

1 பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்;
மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
2 இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.
தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
3 அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார்.
அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
4 அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள்.
அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
5 பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார்.
மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,
6 அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது.
தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
7 அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
8 ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது.
நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
9 நோவாவின் வம்சவரலாறு இதுவே: நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்.
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
10 நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.
௧0நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
11 பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது.
௧௧பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12 பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார்.
௧௨தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
13 எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன்.
௧௩அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
14 ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு.
௧௪நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15 அந்தப் பேழையைச் செய்யவேண்டிய விதம்: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும், உயரம் முப்பது முழமாகவும் இருக்கவேண்டும்.
௧௫நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும்.
16 பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம் உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள்.
௧௬நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
17 வானத்தின் கீழுள்ள எல்லா உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு, நான் பூமியின்மேல் பெருவெள்ளத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதனால் பூமியிலுள்ள எல்லாமே அழிந்துபோகும்.
௧௭வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
18 ஆனால், நான் என் உடன்படிக்கையை உன்னுடன் நிலைநிறுத்துவேன்; நீ பேழைக்குள் செல்வாய்; உன்னுடன் உன் மகன்கள், உன் மனைவி, உன் மகன்களின் மனைவிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு பேழைக்குள் செல்.
௧௮ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
19 உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு வகையிலும், ஒரு ஜோடியை உன்னுடன் சேர்ந்து உயிர்வாழும்படி பேழைக்குள் அழைத்துச் செல்.
௧௯அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.
20 பறவைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், விலங்குகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும் உயிருடன் வாழும்படி உன்னுடன் வரும்.
௨0வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும்.
21 சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுப் பொருட்களையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படி இவற்றைச் சேமித்து வை” என்றார்.
௨௧உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார்.
22 இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தான்.
௨௨நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

< ஆதியாகமம் 6 >

The World is Destroyed by Water
The World is Destroyed by Water