< ஆதியாகமம் 50 >

1 அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனது உடலின்மேல் விழுந்து அழுது, அவனை முத்தமிட்டான்.
அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான்.
2 பின்பு யோசேப்பு தன் தகப்பனான இஸ்ரயேலின் உடலை நறுமணமிட்டுப் பக்குவப்படுத்தும்படி, தன் சேவையிலிருந்த வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான். வைத்தியர்கள் அப்படியே செய்தார்கள்.
பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள்.
3 இவ்வாறு நறுமணமிட்டு உடலைப் பதப்படுத்துவதற்கு நாற்பது நாட்கள்வரை செல்லும். எகிப்தியர் யாக்கோபுக்காக எழுபது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள்.
பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.
4 துக்ககாலம் முடிந்தபின் யோசேப்பு பார்வோனின் அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம், “உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நீங்கள் பார்வோனிடம் எனக்காக ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும்.
துக்கம் அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: “உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால்,
5 என் தகப்பன் என்னிடம், ‘நான் சாகப்போகிறேன். கானானில் நான் வெட்டி வைத்திருக்கும் என்னுடைய கல்லறையிலேயே என்னை அடக்கம்பண்ணவேண்டும்’ என்று சத்தியம் வாங்கியிருந்தார். ஆகவே, இப்பொழுது நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ணித் திரும்பிவர எனக்கு அனுமதி கொடுக்கும்படி கேளுங்கள்” என்றான்.
என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.
6 பார்வோன், “உன் தகப்பன் உன்னிடம் சத்தியம் வாங்கியபடி, நீ போய் உன் தகப்பனை அடக்கம் செய்” என்றான்.
அதற்குப் பார்வோன்: “உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா” என்றான்.
7 எனவே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்யப்போனான். அவனுடன் பார்வோனுடைய அரண்மனைப் பெரியவர்களும், எகிப்திலுள்ள பெரியோர்களுமான எல்லா அலுவலர்களும் போனார்கள்.
அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர் அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும்,
8 அவர்களோடு யோசேப்பின் வீட்டாரும், அவனுடைய சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் போனார்கள். அவர்களுடைய பிள்ளைகளையும், ஆட்டுமந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் மாத்திரம் கோசேனிலே விட்டுச் சென்றார்கள்.
யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.
9 தேர்களுடன் குதிரைவீரர்களும் அவர்களோடு போனார்கள். அது மிகப்பெரிய ஒரு கூட்டமாய் இருந்தது.
இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.
10 அவர்கள் யோர்தானுக்கு அப்பாலுள்ள ஆதாத் என்னும் சூடடிக்கும் களத்தை அடைந்தபோது, மனங்கசந்து சத்தமிட்டு அழுதார்கள். அங்கே யோசேப்பு தன் தகப்பனுக்காக ஏழு நாட்கள் துக்கங்கொண்டாடினான்.
௧0அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம் அனுசரித்தான்.
11 ஆதாத்தின் சூடடிக்கும் களத்தில் அவர்கள் துக்கங்கொண்டாடுவதை அங்கு வாழ்ந்த கானானியர் கண்டபோது, “இங்கே எகிப்தியர் பெரிய துக்கங்கொண்டாடலை நடத்துகிறார்கள்” என்றார்கள். அதினாலேயே யோர்தானுக்கு அருகிலுள்ள அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயீம் என்ற பெயர் உண்டாயிற்று.
௧௧ஆத்தாத்தின் களத்திலே துக்கம் அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: “இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம் அனுசரித்தல்” என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது.
12 யாக்கோபு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவனுடைய மகன்கள் செய்தார்கள்:
௧௨யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
13 அவனுடைய உடலைக் கானான் நாட்டிற்குக் கொண்டுபோய், அங்கே மம்ரேக்கு அருகிலிருக்கும் மக்பேலா வெளியிலுள்ள குகையிலே அடக்கம் செய்தார்கள்; ஆபிரகாம் அந்த நிலத்தை வயலுடன் சேர்த்து, ஏத்தியனான எப்ரோனிடமிருந்து கல்லறை நிலமாக வாங்கியிருந்தான்.
௧௩அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக ஏத்தியனான எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
14 யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்தபின், தன் சகோதரரோடும், தன் தகப்பனை அடக்கம் செய்வதற்காக அவனுடன் வந்திருந்த மற்ற எல்லாரோடும் எகிப்திற்குத் திரும்பிப்போனான்.
௧௪யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்தபின்பு, அவனும் அவனுடைய சகோதரர்களும், அவனுடைய தகப்பனை அடக்கம்செய்வதற்கு அவனோடுகூடப் போனவர்கள் அனைவரும் எகிப்திற்குத் திரும்பினார்கள்.
15 தங்கள் தகப்பன் மரணமடைந்தபின் யோசேப்பின் சகோதரர், “யோசேப்பு எங்கள்மேல் பழிவாங்க எண்ணங்கொண்டு, முன்பு நாம் யோசேப்புக்குச் செய்த எல்லாத் தீமைகளுக்காக தீங்கு செய்தால் என்ன செய்வது?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
௧௫தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: “ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான்” என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,
16 அதனால் அவர்கள் யோசேப்பிடம், “உம்முடைய தகப்பன் இறப்பதற்குமுன் இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்.
௧௬“உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
17 அதாவது, நீங்கள் யோசேப்பிடம் போய் நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள். உன் சகோதரரின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் அவர்கள் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிக்க வேண்டும் என, நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்” என்றார்கள். “உமது தகப்பனுடைய இறைவனின் அடியாராகிய நாங்கள் செய்த பாவங்களை இப்பொழுது எங்களுக்குத் தயவாய் மன்னியும்” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான்.
௧௭ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும்” என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
18 யோசேப்பின் சகோதரர் அவனிடம் வந்து, அவனுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “நாங்கள் உமது அடிமைகள்” என்றார்கள்.
௧௮பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: “இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள்” என்றார்கள்.
19 யோசேப்பு அவர்களிடம், “பயப்படவேண்டாம்; நான் என்ன இறைவனா?
௧௯யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; “நான் தேவனா;
20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டீர்கள். ஆனால், இறைவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, பல உயிர்களைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அதை நன்மையாக மாற்றினார்.
௨0நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார்.
21 ஆகையால் பயப்படவேண்டாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையானவற்றை எல்லாம் நான் கொடுப்பேன்” என உறுதியளித்துத் தயவாகப் பேசினான்.
௨௧ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.
22 யோசேப்பு தன் தகப்பனின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயதுவரை உயிர் வாழ்ந்தான்.
௨௨யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான்.
23 யோசேப்பு, எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் கண்டான். அப்பிள்ளைகள் எல்லோரும், மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியிலே வளர்ந்தார்கள்.
௨௩யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
24 பின்பு யோசேப்பு தன் சகோதரரிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் உங்களுக்கு நிச்சயமாய் உதவி செய்வார்; ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நாட்டுக்கு அவர் உங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவார்” என்றான்.
௨௪யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: “நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்;
25 பின்னும் யோசேப்பு அவர்களிடம், “நிச்சயமாய் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். அப்பொழுது நீங்கள் என்னுடைய எலும்புகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான்.
௨௫தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.
26 யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.
௨௬யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

< ஆதியாகமம் 50 >