< ஆதியாகமம் 48 >

1 சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தகப்பன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான்.
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான்.
2 “உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கிறான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
“இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
3 யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே எல்லாம் வல்ல இறைவன் எனக்குமுன் தோன்றி, என்னை ஆசீர்வதித்தார்.
யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து:
4 அவர் என்னிடம், ‘நான் உன்னை இனவிருத்தியில் பெருகப்பண்ணி எண்ணிக்கையில் அதிகரிப்பேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார்.
நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார்.
5 “எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்திற்கு வருவதற்குமுன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் இப்பொழுதிலிருந்து என்னுடைய மகன்களாக எண்ணப்படுவார்கள்; ரூபனும், சிமியோனும் என் மகன்களாய் இருப்பதுபோல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்களாய் இருப்பார்கள்.
நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
6 அவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அந்த பிள்ளைகள் சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள், தங்கள் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் இடங்களிலிருந்தே கிடைக்கும்.
இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள்.
7 நான் பதானைவிட்டுத் திரும்பி வருகையில், எப்பிராத்தாவுக்குச் சற்று தூரத்தில், கானான் நாட்டில் நாங்கள் வழியில் இருக்கும்போதே, ராகேல் இறந்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியின் அருகே நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான்.
நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன்” என்றான்.
8 இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான்.
இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான்.
9 அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான்.
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான்.
10 வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான்.
௧0முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான்.
11 அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான்.
௧௧இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான்.
12 யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான்.
௧௨அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
13 பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான்.
௧௩பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.
14 ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான்.
௧௪அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
15 அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும்,
௧௫அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: “என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
16 எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.”
௧௬எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.
17 தனது தகப்பன் அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காகப் பிடித்தான்.
௧௭தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாததால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைப்பதற்காக எடுத்து:
18 யோசேப்பு தன் தகப்பனிடம், “அப்படியல்ல அப்பா, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான்.
௧௮“என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும்” என்றான்.
19 ஆனால் யாக்கோபோ அப்படிச் செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனுடைய சந்ததி பெருகி பல நாடுகளின் கூட்டமாகும்” என்றான்.
௧௯அவனுடைய தகப்பனோ தடுத்து: “அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாகப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான மக்களாவார்கள்” என்றான்.
20 அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான்.
௨0இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான்.
21 பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களின் நாட்டிற்குத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார்.
௨௧பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடு இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்திற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார் என்றும்,
22 உன் சகோதரருக்கு மேலானவனாக இருக்கிற உனக்கோ, எமோரியரிடமிருந்து நான் வாளினாலும் வில்லினாலும் கைப்பற்றிய மேட்டு நிலத்தைக் கொடுக்கிறேன்” என்றான்.
௨௨உன் சகோதரர்களுக்குக் கொடுத்ததைவிட, நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர்கள் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன்” என்றும் சொன்னான்.

< ஆதியாகமம் 48 >