< ஆதியாகமம் 24 >
1 ஆபிரகாம் இப்பொழுது வயது முதிர்ந்தவன் ஆனான்; யெகோவா எல்லாவிதத்திலும் அவனை ஆசீர்வதித்தார்.
2 ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின்கீழ் உன் கையை வைத்து,
3 பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய யெகோவாவின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் கானானியர் மத்தியில் வாழ்வதால் அவர்களுடைய மகள்களில் ஒருத்தியையும் என் மகனுக்கு மனைவியாக நீ எடுக்கமாட்டாய் என்றும்,
4 என் நாட்டிற்கும், என் உறவினரிடத்திற்கும் போய், என் மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியை எடுப்பாய் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றான்.
5 அப்பொழுது அவ்வேலைக்காரன், “நான் தெரிந்தெடுக்கும் பெண் என்னுடன் வர விரும்பவில்லையென்றால், உம்முடைய மகன் ஈசாக்கை நீர் விட்டுவந்த நாட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமோ?” என்று கேட்டான்.
6 அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு.
7 என் தகப்பன் வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா, என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்களித்திருக்கிறார். ஆதலால் அவர், நீ அங்கிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர உனக்கு முன்பாக தமது தூதனை அனுப்புவார்.
8 அந்தப் பெண் இவ்விடம் வர விரும்பவில்லையென்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதே” என்றான்.
9 அப்படியே அவ்வேலைக்காரன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, அவன் இந்தக் காரியத்தைக்குறித்து ஆணையிட்டுச் சத்தியம் செய்தான்.
10 பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான்.
11 அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது.
12 அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
13 இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள்.
14 நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான்.
15 அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள்.
16 அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள்.
17 வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான்.
18 உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
19 அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள்.
20 அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள்.
21 யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான்.
22 ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல் நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான்.
23 பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.
24 அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள்.
25 மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள்.
26 உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு,
27 “என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான்.
28 அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள்.
29 ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான்.
30 லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான்.
31 அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான்.
32 இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
33 அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
34 அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.”
35 யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
36 என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார்.
37 என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது.
38 ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார்.
39 “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன்.
40 “அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய்.
41 நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார்.
42 “இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும்.
43 இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன்.
44 அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன்.
45 “இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன்.
46 “அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள்.
47 “அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன்.
48 பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன்.
49 ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான்.
50 அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது.
51 ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள்.
52 ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான்.
53 அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான்.
54 பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
55 ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள்.
56 அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
57 அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள்.
58 பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள்.
59 எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள்.
60 அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: “எங்கள் சகோதரியே, நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்வார்களாக.”
61 பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
62 அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான்.
63 ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான்.
64 ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள்.
65 அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.
66 வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான்.
67 ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது.