< எஸ்றா 6 >
1 தரியு அரசனின் உத்தரவின்படி பாபிலோனிலுள்ள களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டுச் சுவடிகளை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள்.
௧அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள பத்திர அறையை சோதித்தார்கள்.
2 மேதியா நாட்டில் அக்மேதா என்னும் அரச அரண்மனையில் ஒரு பிரதி கண்டெடுக்கப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ஞாபகக் குறிப்பு:
௨மேதிய நாட்டிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரண்மனையிலே ஒரு சுருள் கிடைத்தது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
3 கோரேஸின் முதலாம் வருட அரசாட்சியில், அரசன் எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்தைக்குறித்துப் பிறப்பித்த கட்டளையாவது: எருசலேமில் பலிகளைச் செலுத்தும் ஒரு இடமாக ஆலயம் திரும்பக் கட்டப்படட்டும். அதற்கு அஸ்திபாரம் போடப்படட்டும். அதன் உயரம் அறுபது முழமும், அகலம் அறுபது முழமுமாயிருக்க வேண்டும்.
௩ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்து இட்ட கட்டளை என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்திவந்த இடத்திலே கட்டவேண்டும்; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருக்கவேண்டும்; அது அறுபதுமுழ உயரமும், அறுபதுமுழ அகலமுமாக இருக்கவேண்டும்.
4 அது மூன்று வரிசை பெரிய கற்களினாலும், ஒரு வரிசை மரத்தினாலும் கட்டப்பட வேண்டும். அதன் செலவுகளெல்லாம் அரச திரவிய களஞ்சியத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும்.
௪அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மாடிவரிசை புது நீண்டகற்களாக கட்டவேண்டும்; அதற்காக ஆகும் செலவு ராஜாவின் அரண்மனையிலிருந்து கொடுக்கப்படவேண்டும்.
5 அத்துடன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த இறைவனின் ஆலயத்துக்குரிய தங்க, வெள்ளிப் பொருட்கள் திரும்பவும் அதற்குரிய இடமான எருசலேம் ஆலயத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அவை இறைவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட வேண்டும் என எழுதியிருந்தது.
௫அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்திற்குரிய பொன் வெள்ளிப் பொருட்கள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்களுடைய இடத்திற்குப் போய்சேருவதற்குத் திரும்பக் கொடுக்கவேண்டும்; அவைகளை தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
6 ஆகவே அரசன் தரியு இந்தச் செய்தியை அனுப்பினான், ஐபிராத்து நதியின் மறுகரையில் ஆளுநராய் இருக்கின்ற தக்னா ஆகிய நீயும், சேத்தார்பொஸ்னாய் ஆகிய நீயும், அந்த மாகாணத்தில் அதிகாரிகளாயிருக்கிற உங்களுடைய நண்பர்களுமான நீங்களும் அங்கிருந்து விலகியிருங்கள்.
௬அப்பொழுது தரியு ராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும் சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிகாரிகளான உங்களுடைய கூட்டாளிகளான அனைவரும் அந்த இடத்தைவிட்டு விலகியிருங்கள்.
7 இறைவனின் ஆலயத்தில் நடக்கும் இந்த வேலையில் தலையிட வேண்டாம். யூதரின் ஆளுநனும், யூதரின் முதியவர்களும் இறைவனின் ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டட்டும்.
௭தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், மூப்பர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் இடத்திலே கட்டுவார்களாக.
8 மேலும் எனது ஆணையாவது: இறைவனுடைய ஆலயத்தின் கட்டட வேலையில் யூதர்களின் முதியவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதை நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருந்து பெறப்படுகின்ற வரிப்பணத்தை அரச திரவிய களஞ்சியத்திலிருந்து, இந்த வேலை நின்றுபோகாதபடி முழுவதையும் அந்த மனிதர்களின் செலவுகளுக்குக் கொடுக்கவேண்டும்.
௮தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும்.
9 அத்துடன் எருசலேமில் இருக்கின்ற ஆசாரியர்கள் கேட்கின்றபடி, பரலோகத்தின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளுக்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவை எதுவானாலும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கப்படவேண்டும்.
௯பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சைரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும்.
10 அவர்கள் பரலோகத்தின் இறைவனை மகிழ்விக்கும்படி இந்த பலிகளைச் செலுத்தி, அரசனுடைய நலனுக்காகவும், அவனுடைய மகன்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டுதல் செய்யும்படி இப்படிச் செய்யவேண்டும்.
௧0எருசலேமில் இருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுதல் செய்ய இப்படிச் செய்யவேண்டும்.
11 மேலும், இதையும் நான் உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை யாராவது மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு வளை மரம் களற்றப்பட்டு, அவன் அதில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும். இந்த குற்றத்திற்காக அவனுடைய வீடு இடிபாடுகளின் குவியலாக ஆக்கப்பட வேண்டும்.
௧௧பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு நீண்ட கல் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினால் அவனுடைய வீடு குப்பைமேடாவதாக.
12 இக்கட்டளையை மாற்றி, எருசலேமில் உள்ள ஆலயத்தை அழிக்கும்படி, தன் கையை உயர்த்துகிற எந்த அரசனையும், மனிதனையும் தனது பெயரை அங்கு நிலைநிறுத்திய இறைவன் கவிழ்த்துப் போடுவாராக. தரியு ஆகிய நானே இதைக் கட்டளையிட்டிருக்கிறேன். இது கவனத்துடன் செயல்படுத்தப்படட்டும்.
௧௨ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும், அனைத்து மக்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கச் செய்த தேவன் அழிப்பாராக; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று எழுதியனுப்பினான்.
13 அப்பொழுது ஐபிராத்து மறுகரைக்கு ஆளுநனாக இருந்த தக்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களோடுகூட இருந்தவர்களும் தரியு அரசனின் உத்தரவின் நிமித்தம் அதைக் கவனத்துடன் செயல்படுத்தினார்கள்.
௧௩அப்பொழுது நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களின் கூட்டாளிகளும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாக செய்தார்கள்.
14 அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள்.
௧௪அப்படியே யூதரின் மூப்பர்கள் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் மகனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளையின்படியும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளையின்படியும் அதைக் கட்டி முடித்தார்கள்.
15 தரியு அரசனுடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில் ஆதார் மாதம் மூன்றாம் நாளில் ஆலயம் கட்டிமுடிந்தது.
௧௫ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருடம் ஆதார் என்னும் மாதத்தின் மூன்றாம் தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
16 அதன்பின்பு இஸ்ரயேல் மக்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களான மீதியானவர்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
௧௬அப்பொழுது இஸ்ரவேல் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையை சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.
17 இறைவனின் ஆலய அர்ப்பணத்திற்கு அவர்கள் நூறு காளைகள், இருநூறு ஆட்டுக்கடாக்கள், நானூறு ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றைப் பலியாகச் செலுத்தினார்கள். எல்லா இஸ்ரயேலரினதும் பாவநிவாரணக் காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒன்றாக அவற்றைச் செலுத்தினார்கள்.
௧௭தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
18 பின்பு மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி எருசலேமிலுள்ள இறைவனின் பணிக்காக ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவின்படியும் லேவியர்களை அவர்களுடைய குழுக்களின்படியும் நியமித்தார்கள்.
௧௮மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
19 அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
௧௯சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள்.
20 ஆசாரியரும், லேவியர்களும் ஒன்றாக சேர்ந்து தங்களைச் சுத்திகரித்து எல்லோரும் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருந்தனர். லேவியர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த அனைவருக்காகவும், தங்கள் சகோதரர்களான ஆசாரியருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
௨0ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
21 நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த இஸ்ரயேலர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி, மற்ற அயலவர்களுடைய அசுத்தமான நடைமுறைகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டிருந்த அனைவருடனும் அதைச் சாப்பிட்டார்கள்.
௨௧அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைச் சாப்பிட்டு,
22 அவர்கள் ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனின் தேவாலயத்தின் வேலையில் அசீரியா அரசன் அவர்களுக்கு உதவி செய்தான். யெகோவா அசீரிய அரசனின் மனதை மாற்றியதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியால் நிறைத்திருந்தார்.
௨௨புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார்.