< எசேக்கியேல் 43 >
1 பின்பு அந்த மனிதன் என்னை கிழக்கு முகமாயிருந்த வாசலுக்கு அழைத்து வந்தான்.
௧பின்பு அவர் என்னை கிழக்கு திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.
2 அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனது மகிமை கிழக்கேயிருந்து வருவதை நான் கண்டேன். அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சல்போலிருந்தது. நாடு அவருடைய மகிமையினால் பிரகாசித்தது.
௨இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கிழக்கு திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.
3 நான் கண்ட தரிசனமானது, அவர் நகரத்தை அழிப்பதற்கு வந்தபோது நான் கண்டதைப்போன்று இருந்தது. நான் கேபார் நதியண்டையில் கண்ட தரிசனங்கள்போன்றும் இருந்தது. உடனே நான் முகங்குப்புற விழுந்தேன்.
௩நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியின் அருகிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
4 யெகோவாவின் மகிமை கிழக்குவாசல் வழியாக ஆலயத்திற்குள் வந்தது.
௪யெகோவாவுடைய மகிமை கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக ஆலயத்திற்குள் நுழைந்தது.
5 பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி உள்முற்றத்தினுள் கொண்டுவந்தார். யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
௫அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உள்முற்றத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, யெகோவாவுடைய மகிமை ஆலயத்தை நிரப்பினது.
6 அந்த மனிதன் என் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போதே, யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து என்னுடன் பேசுவதை நான் கேட்டேன்.
௬அவர் ஆலயத்திலிருந்து என்னுடன் பேசுகிறதைக் கேட்டேன்; அந்த மனிதன் என்னுடைய அருகில் நின்றிருந்தார்.
7 அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எனது அரியணையை வைக்கும் இடமும், என் பாதங்களை வைக்கும் இடமும் இதுவே. நான் இங்கேயே இஸ்ரயேலரின் மத்தியில் என்றென்றும் இருப்பேன். இனியொருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தார் என் பெயரைத் தூய்மைக்கேடாக்க மாட்டார்கள். அவர்களோ, அவர்களுடைய அரசர்களோ தங்களுடைய விபசாரத்தினாலும், மேடைகளிலுள்ள தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலும் என் பெயரைத் தூய்மைக் கேடாக்குவதில்லை.
௭அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இது நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே என்றென்றைக்கும் வாழ்ந்திருக்கும் என்னுடைய சிங்காசனமும் என்னுடைய பாதபீடத்தின் இடமுமாக இருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என்னுடைய பரிசுத்தப் பெயரிலே தங்களுடைய மேடைகளில் தங்களுடைய வேசித்தனத்தினாலும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
8 இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாசற்படியை எனது பரிசுத்த வாயிற்படியை அடுத்தும், தங்களது கதவு நிலைகளை எனது கதவு நிலைகளையடுத்தும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் மட்டுமே இருந்தது. இவ்வாறு தங்களுடைய அருவருக்கத்தக்க செயல்களினால் எனது பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்கினார்கள். எனவே எனது கோபத்தில் நான் அவர்களை அழித்தேன்.
௮அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்களுடைய வாசற்படியை என்னுடைய வாசற்படி அருகிலும், தங்கவாசல் நிலைகளை என்னுடைய வாசல்நிலைகள் அருகிலும் சேர்த்து, என்னுடைய பரிசுத்தப் பெயரை தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என்னுடைய கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
9 இப்பொழுது அவர்கள் தங்கள் விபசாரத்தையும் தங்கள் அரசனுடைய உயிரற்ற சிலைகளையும் என்னைவிட்டு அப்புறப்படுத்தட்டும். அப்பொழுது நான் என்றென்றும் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
௯இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய வேசித்தனத்தையும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களையும் என்னுடைய சமுகத்திலிருந்து அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாழ்ந்திருப்பேன்.
10 “மனுபுத்திரனே, இஸ்ரயேலர் தங்கள் பாவத்தினிமித்தம் வெட்கப்படும்படியாக, ஆலயத்தைப்பற்றி அவர்களுக்கு விபரித்துச் சொல். அதன் அமைப்பு வரைபடத்தை அவர்கள் கவனமாய் அறியட்டும்.
௧0மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் வெட்கப்படும்படி, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.
11 அவர்கள் தாம் செய்த எல்லாவற்றையும் குறித்து வெட்கப்படுவார்களாயின், ஆலயத்தின் அமைப்பு முறையை அவர்கள் அறிந்துகொள்ளும்படி சொல். அதன் ஒழுங்குகளையும், அதன் புகுமுக வாசல்களையும், வெளியேறும் வாசல்களையும், அதன் முழு உருவத்தையும், அதன் ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும் சொல்லிக்கொடு. பின் அவற்றை அவர்களுக்கு முன்பாக எழுதிவை. அப்பொழுது அவர்கள் அதன் உருவமைப்பின்படி கட்டுவதில் உண்மையாயிருந்து, அதன் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
௧௧அவர்கள் செய்த எல்லாவற்றிற்காக வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், முன்வாசல்களையும், பின் வாசல்களையும், எல்லா ஒழுங்குகளையும், எல்லாக் கட்டளைகளையும், எல்லா நியமங்களையும், எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை.
12 “ஆலயத்திற்கான சட்டம் இதுவே. மலையுச்சியைச் சூழ இருக்கும் எல்லா பகுதிகளும் மகா பரிசுத்தமாயிருக்கும். ஆலயத்தின் சட்டம் இப்படிப்பட்டதே.
௧௨ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையின் உயரத்தின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
13 “அந்த மனிதன் சொன்னதாவது, நீள் முழங்களின்படி பலிபீடத்தின் அளவுகளாவன: நீண்ட முழம் என்பது ஒரு முழமும் நான்கு விரற்கடையளவும் உடையது. பலிபீடத்தின் அடியில் சுற்றிலும் ஒரு கால்வாய் இருந்தது. அது ஒருமுழ ஆழமும் ஒருமுழ அகலமும் கொண்டது. அதன் ஓரத்தில் ஒரு சாண் அளவு விளிம்பு இருந்தது. பலிபீடத்தின் உயரமாவது;
௧௩முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நான்கு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாக இருக்கும்; இது பலிபீடத்தின் மேல்பக்கம்.
14 தரையிலிருக்கும் கால்வாயிலிலிருந்து அதன் கீழ்விளிம்புமட்டும் இரண்டு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாய் இருந்தது. சிறிய விளிம்பிலிருந்து பெரிய விளிம்புவரை நான்கு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாயிருந்தது.
௧௪தரையில் இருக்கிற ஆதாரம் துவங்கிக் கீழ்நிலைவரை இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவங்கிப் பெரிய நிலைவரை நான்குமுழமும், அகலம் ஒருமுழமுமாக இருக்கும்.
15 பலிபீட அடுப்பு நான்கு முழ உயரமாயிருந்தது. அடுப்பிலிருந்து நான்கு கொம்புகள் மேல்நோக்கி உயர்ந்திருந்தன.
௧௫பலிபீடத்தின் சிகரம் நான்குமுழ உயரமுமாக இருக்கும்; பலிபீடத்தின் உச்சிக்குமேலே நான்கு கொம்புகள் இருக்கும்.
16 பலிபீட அடுப்பு பன்னிரண்டு முழ நீளமும் பன்னிரண்டு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது.
௧௬பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன்னுடைய நான்கு பக்கங்களிலும் நான்கும் சதுரமுமாக இருக்கும்.
17 மேல் விளிம்பு பதினான்கு முழ நீளமும் பதினான்கு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது. சுற்றிலும் அரைமுழ அளவான விளிம்பும் ஒருமுழ அளவான கால்வாயும் அமைந்திருந்தன. பலிபீடத்தின் படிகள் கிழக்கு நோக்கியிருந்தன.”
௧௭அதின் நான்கு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதினான்கு முழமும், அகலம் பதினான்கு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாக இருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராக இருக்கும் என்றார்.
18 பின்பு அந்த மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. பலிபீடம் கட்டப்படும்போது ஒழுங்குவிதிகள் இவையே. தகன காணிக்கைகளைச் செலுத்தும்போதும் பலிபீடத்தின்மேல் இரத்தம் தெளிக்கும்போதும் இவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.
௧௮பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டாக்கும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிப்பதற்குமான கட்டளைகள்:
19 எனக்கு முன்னே என்னருகில் வந்து, ஆராதனை செய்யும் சாதோக்கின் குடும்பத்தாரான, லேவிய ஆசாரியர்களின் பாவநிவாரண காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். நீங்கள் அதற்காக அவர்களுக்கு ஒரு இளங்காளையைக் கொடுக்கவேண்டும் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௧௯எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் சந்ததியாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
20 அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், வளைவிளிம்பைச் சுற்றிலும் தெளிக்கவேண்டும். அவ்வாறு பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
௨0அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதின் நான்கு கொம்புகளிலும், சட்டத்தின் நான்கு முனைகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து,
21 பாவநிவாரண காணிக்கையான காளையை, பரிசுத்த ஆலயத்துக்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்தில் எரித்துவிடவேண்டும்.
௨௧பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.
22 “இரண்டாம் நாள் பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றைப் பாவநிவாரண பலியாகச் செலுத்தவேண்டும். காளையினால் பலிபீடம் தூய்மையாக்கப்பட்டது போலவே, தூய்மையாக்கப்படுதல் வேண்டும்.
௨௨இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச் சுத்திகரிப்பு செய்ததுபோலப் பாவநிவாரணம் செய்யவேண்டும்.
23 அதைத் தூய்மைப்படுத்தி முடிந்ததும், இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் உங்கள் மந்தையிலிருந்து நீங்கள் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவையிரண்டும் பழுதற்றவைகளாயிருக்க வேண்டும்.
௨௩நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.
24 நீங்கள் அவற்றை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தவேண்டும். ஆசாரியர்கள் அதன்மீது உப்புத்தூவி யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
௨௪அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்பு தூவி, அவைகளைக் யெகோவாவுக்கு தகனபலியாக இடவேண்டும்.
25 “நீங்கள் தினந்தோறும் ஏழுநாட்களுக்குப் பாவநிவாரண காணிக்கையாக ஆட்டுக்கடா ஒன்றைச் செலுத்தவேண்டும். அதோடு உங்கள் மந்தையிலிருந்து, இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் நீங்கள் செலுத்தவேண்டும். அவை இரண்டும் பழுதற்றவையாயிருக்க வேண்டும்.
௨௫ஏழுநாள்வரைக்கும் அனுதினமும் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்து எடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.
26 அவர்கள் ஏழு நாட்கள் பலிபீடத்துக்காகப் பாவநிவிர்த்தி செய்து, அதைச் சுத்திகரிக்கவேண்டும். இவ்வாறாக அவர்கள் பலிபீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும்.
௨௬ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டை செய்யவேண்டும்.
27 அந்த நாட்களின் முடிவில், எட்டாம் நாளிலிருந்து ஆசாரியர்கள் உங்களுடைய தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலிபீடத்தில் செலுத்தவேண்டும். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
௨௭அந்த நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்களுடைய தகனபலிகளையும் உங்களுடைய நன்றிபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.