< எசேக்கியேல் 43 >
1 பின்பு அந்த மனிதன் என்னை கிழக்கு முகமாயிருந்த வாசலுக்கு அழைத்து வந்தான்.
2 அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனது மகிமை கிழக்கேயிருந்து வருவதை நான் கண்டேன். அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சல்போலிருந்தது. நாடு அவருடைய மகிமையினால் பிரகாசித்தது.
3 நான் கண்ட தரிசனமானது, அவர் நகரத்தை அழிப்பதற்கு வந்தபோது நான் கண்டதைப்போன்று இருந்தது. நான் கேபார் நதியண்டையில் கண்ட தரிசனங்கள்போன்றும் இருந்தது. உடனே நான் முகங்குப்புற விழுந்தேன்.
4 யெகோவாவின் மகிமை கிழக்குவாசல் வழியாக ஆலயத்திற்குள் வந்தது.
5 பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி உள்முற்றத்தினுள் கொண்டுவந்தார். யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
6 அந்த மனிதன் என் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போதே, யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து என்னுடன் பேசுவதை நான் கேட்டேன்.
7 அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எனது அரியணையை வைக்கும் இடமும், என் பாதங்களை வைக்கும் இடமும் இதுவே. நான் இங்கேயே இஸ்ரயேலரின் மத்தியில் என்றென்றும் இருப்பேன். இனியொருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தார் என் பெயரைத் தூய்மைக்கேடாக்க மாட்டார்கள். அவர்களோ, அவர்களுடைய அரசர்களோ தங்களுடைய விபசாரத்தினாலும், மேடைகளிலுள்ள தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலும் என் பெயரைத் தூய்மைக் கேடாக்குவதில்லை.
8 இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாசற்படியை எனது பரிசுத்த வாயிற்படியை அடுத்தும், தங்களது கதவு நிலைகளை எனது கதவு நிலைகளையடுத்தும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் மட்டுமே இருந்தது. இவ்வாறு தங்களுடைய அருவருக்கத்தக்க செயல்களினால் எனது பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்கினார்கள். எனவே எனது கோபத்தில் நான் அவர்களை அழித்தேன்.
9 இப்பொழுது அவர்கள் தங்கள் விபசாரத்தையும் தங்கள் அரசனுடைய உயிரற்ற சிலைகளையும் என்னைவிட்டு அப்புறப்படுத்தட்டும். அப்பொழுது நான் என்றென்றும் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
10 “மனுபுத்திரனே, இஸ்ரயேலர் தங்கள் பாவத்தினிமித்தம் வெட்கப்படும்படியாக, ஆலயத்தைப்பற்றி அவர்களுக்கு விபரித்துச் சொல். அதன் அமைப்பு வரைபடத்தை அவர்கள் கவனமாய் அறியட்டும்.
11 அவர்கள் தாம் செய்த எல்லாவற்றையும் குறித்து வெட்கப்படுவார்களாயின், ஆலயத்தின் அமைப்பு முறையை அவர்கள் அறிந்துகொள்ளும்படி சொல். அதன் ஒழுங்குகளையும், அதன் புகுமுக வாசல்களையும், வெளியேறும் வாசல்களையும், அதன் முழு உருவத்தையும், அதன் ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும் சொல்லிக்கொடு. பின் அவற்றை அவர்களுக்கு முன்பாக எழுதிவை. அப்பொழுது அவர்கள் அதன் உருவமைப்பின்படி கட்டுவதில் உண்மையாயிருந்து, அதன் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
12 “ஆலயத்திற்கான சட்டம் இதுவே. மலையுச்சியைச் சூழ இருக்கும் எல்லா பகுதிகளும் மகா பரிசுத்தமாயிருக்கும். ஆலயத்தின் சட்டம் இப்படிப்பட்டதே.
13 “அந்த மனிதன் சொன்னதாவது, நீள் முழங்களின்படி பலிபீடத்தின் அளவுகளாவன: நீண்ட முழம் என்பது ஒரு முழமும் நான்கு விரற்கடையளவும் உடையது. பலிபீடத்தின் அடியில் சுற்றிலும் ஒரு கால்வாய் இருந்தது. அது ஒருமுழ ஆழமும் ஒருமுழ அகலமும் கொண்டது. அதன் ஓரத்தில் ஒரு சாண் அளவு விளிம்பு இருந்தது. பலிபீடத்தின் உயரமாவது;
14 தரையிலிருக்கும் கால்வாயிலிலிருந்து அதன் கீழ்விளிம்புமட்டும் இரண்டு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாய் இருந்தது. சிறிய விளிம்பிலிருந்து பெரிய விளிம்புவரை நான்கு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாயிருந்தது.
15 பலிபீட அடுப்பு நான்கு முழ உயரமாயிருந்தது. அடுப்பிலிருந்து நான்கு கொம்புகள் மேல்நோக்கி உயர்ந்திருந்தன.
16 பலிபீட அடுப்பு பன்னிரண்டு முழ நீளமும் பன்னிரண்டு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது.
17 மேல் விளிம்பு பதினான்கு முழ நீளமும் பதினான்கு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது. சுற்றிலும் அரைமுழ அளவான விளிம்பும் ஒருமுழ அளவான கால்வாயும் அமைந்திருந்தன. பலிபீடத்தின் படிகள் கிழக்கு நோக்கியிருந்தன.”
18 பின்பு அந்த மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. பலிபீடம் கட்டப்படும்போது ஒழுங்குவிதிகள் இவையே. தகன காணிக்கைகளைச் செலுத்தும்போதும் பலிபீடத்தின்மேல் இரத்தம் தெளிக்கும்போதும் இவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.
19 எனக்கு முன்னே என்னருகில் வந்து, ஆராதனை செய்யும் சாதோக்கின் குடும்பத்தாரான, லேவிய ஆசாரியர்களின் பாவநிவாரண காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். நீங்கள் அதற்காக அவர்களுக்கு ஒரு இளங்காளையைக் கொடுக்கவேண்டும் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
20 அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், வளைவிளிம்பைச் சுற்றிலும் தெளிக்கவேண்டும். அவ்வாறு பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
21 பாவநிவாரண காணிக்கையான காளையை, பரிசுத்த ஆலயத்துக்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்தில் எரித்துவிடவேண்டும்.
22 “இரண்டாம் நாள் பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றைப் பாவநிவாரண பலியாகச் செலுத்தவேண்டும். காளையினால் பலிபீடம் தூய்மையாக்கப்பட்டது போலவே, தூய்மையாக்கப்படுதல் வேண்டும்.
23 அதைத் தூய்மைப்படுத்தி முடிந்ததும், இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் உங்கள் மந்தையிலிருந்து நீங்கள் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவையிரண்டும் பழுதற்றவைகளாயிருக்க வேண்டும்.
24 நீங்கள் அவற்றை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தவேண்டும். ஆசாரியர்கள் அதன்மீது உப்புத்தூவி யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
25 “நீங்கள் தினந்தோறும் ஏழுநாட்களுக்குப் பாவநிவாரண காணிக்கையாக ஆட்டுக்கடா ஒன்றைச் செலுத்தவேண்டும். அதோடு உங்கள் மந்தையிலிருந்து, இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் நீங்கள் செலுத்தவேண்டும். அவை இரண்டும் பழுதற்றவையாயிருக்க வேண்டும்.
26 அவர்கள் ஏழு நாட்கள் பலிபீடத்துக்காகப் பாவநிவிர்த்தி செய்து, அதைச் சுத்திகரிக்கவேண்டும். இவ்வாறாக அவர்கள் பலிபீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும்.
27 அந்த நாட்களின் முடிவில், எட்டாம் நாளிலிருந்து ஆசாரியர்கள் உங்களுடைய தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலிபீடத்தில் செலுத்தவேண்டும். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”