< எசேக்கியேல் 40 >
1 நாங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில், முதலாம் மாதத்தின் பத்தாம் நாளில், யெகோவாவினுடைய கரம் என்மீது இருந்தது. அந்த நாள் எருசலேம் வீழ்ச்சியடைந்த பதினான்காம் வருடம் முடிந்த நாளாயிருந்தது. அவர் அங்கு என்னை கொண்டுபோனார்.
௧நாங்கள் பாபிலோனில் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாம் நாளாகிய அன்றே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினான்கு வருடங்களானது.
2 இறைவன் கொடுத்த தரிசனங்களில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுபோய், மிக உயர்ந்த மலையொன்றின் மீது நிற்கச்செய்தார். அதன் தென்புறத்தில் சில கட்டடங்கள் இருந்தன. அது ஒரு பட்டணம்போல் காணப்பட்டது.
௨தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்திற்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.
3 அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார். அங்கே வெண்கலம் போன்ற தோற்றமுள்ள ஒரு மனிதனை நான் கண்டேன். அவன் தன் கையில் ஒரு சணல் கயிற்றையும் ஒரு அளவுகோலையும் பிடித்தபடி வாசலில் நின்றான்.
௩அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு மனிதன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாக இருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலும் இருந்தது; அவர் வாசலிலே நின்றார்.
4 அவன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ உன் கண்களால் பார்த்து, உன் காதுகளால் கேட்டு, நான் உனக்குக் காண்பிக்கப்போகும் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொள். அதற்காகவே நீ இங்கு கொண்டுவரப்பட்டாய். நீ காணும் ஒவ்வொன்றையும் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் சொல் என்றான்.”
௪அந்த மனிதன் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன்னுடைய மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிப்பதற்காக நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவி என்றார்.
5 ஆலயப் பகுதியை முற்றிலும் சூழ்ந்திருந்த ஒரு சுவரை நான் கண்டேன். அந்த மனிதனின் கையிலிருந்த அளவுகோலின் நீளம், ஆறு நீள முழங்களாய் இருந்தன. அந்த முழ அளவோ ஒரு முழத்தைவிட நான்கு விரற்கடையளவு அதிகமாயிருந்தது. அவன் சுவரை அளந்தான். அது ஒரு அளவுகோல் தடிப்பும், ஒரு அளவுகோல் உயரமுமாயிருந்தது.
௫இதோ, ஆலயத்திற்குப் வெளியே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்த மனிதன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நான்கு விரற்கடை அளவு அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
6 பின்பு அவன் கிழக்கு நோக்கியுள்ள வாசலுக்குப் போனான். அவன் அதன் படிகளில் ஏறி வாயிற்படிக்கல்லை அளந்தான். அதன் குத்தளவு ஒரு கோல் அளவாய் இருந்தது.
௬பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.
7 காவலர்களின் அறைகள் ஒரு அளவுகோல் நீளமும் ஒரு அளவுகோல் அகலமுமாயிருந்தது. அறைகளுக்கு இடையே தொடுத்துநின்ற சுவர்கள் ஐந்து முழத் தடிப்புடையனவாயிருந்தன. ஆலயத்தை நோக்கியிருந்த வாசலின் மண்டபத்தை அடுத்திருந்த வாசற்படிக்கல் ஒரு அளவுகோல் குத்தளவாய் இருந்தது.
௭ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாக இருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாக இருந்தது.
8 பின்பு அவன் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்தை அளந்தான்.
௮வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
9 அதன் குத்தளவு எட்டு முழமாயும், ஆதாரங்கள் இரண்டு முழ தடிப்பாயும் இருந்தன. நுழைவு வாசலின் புகுமுக மண்டபம் ஆலயத்தை நோக்கியிருந்தது.
௯பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
10 கிழக்கு வாசலின் உட்புறத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று காவலறைகள் இருந்தன. அவை மூன்றும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன. தொடுத்துநின்ற சுவர்களின் முகப்புகள் ஒவ்வொரு பக்கமும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன.
௧0கிழக்குதிசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்பக்கத்தில் மூன்றும் அந்தப்பக்கத்தில் மூன்றுமாக இருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
11 பின்பு அவன் நுழைவு வாசலுக்குப்போகும் புகுமுக வாசலின் அகலத்தை அளந்தான். அது பத்து முழங்களாய் இருந்தது. நீளம் பதின்மூன்று முழங்களாய் இருந்தன.
௧௧பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.
12 ஒவ்வொரு காவலறைகள் முன்னும் ஒருமுழ உயரமான சுவரொன்று இருந்தது. காவலறைகள் ஆறுமுழ சதுர அளவுள்ளதாய் இருந்தன.
௧௨அறைகளுக்குமுன்னே இந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்பக்கத்தில் ஆறு முழமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழமுமாக இருந்தது.
13 பின்பு அவன் ஒரு காவலறையின் பின்சுவர் உச்சி தொடக்கம் எதிரேயிருந்த காவலறையின் உச்சிமட்டும், வாசலின் நுழைவு வாசலை அளந்தான். கைப்பிடிச்சுவர் ஒன்றின் இடைவெளியில் இருந்து எதிரே இருந்த இடைவெளிவரை உள்ள நீளம் இருபத்தைந்து முழங்களாக இருந்தன.
௧௩பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையிலிருந்து மற்ற அறையின் மெத்தைவரை இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராக இருந்தது.
14 நுழைவு வாசலின் உள்ளே சூழ இருந்த தொடுத்துநின்ற சுவர்களின் முகப்புக்களை அவன் அளந்தான். அவை அறுபது முழங்களாக இருந்தன. அது வெளிமுற்றத்தை நோக்கியிருந்த வாசலின் மண்டபம்வரை கணக்கிடப்பட்ட அளவாகும்.
௧௪தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
15 நுழைவு வாசலின் புகுமுக வாயிலிலிருந்து அதன் புகுமுக மண்டபத்தின் முனை வரையுள்ள நீளம் ஐம்பது முழங்களாயிருந்தன.
௧௫நுழைவு வாசலின் முகப்புத் துவங்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புவரை ஐம்பது முழமாக இருந்தது.
16 நுழைவு வாசலுக்கு உட்புறமாயிருந்த காவலறைகளுக்கும் தொடுத்துநின்ற சுவர்களுக்கும் மேலாக, சுற்றிலும் இடைவெளிகளைக்கொண்ட ஒடுக்கமான கைப்பிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. உட்புகு மண்டபத்திலும் அவ்வாறே இருந்தன. சுற்றிலுமிருந்த இடைவெளிகள் உட்புறத்தை நோக்கியிருந்தன. தொடுத்துநின்ற சுவர்களின் முன்பக்கத்திலே பேரீச்சமர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
௧௬வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உள்பக்கமாகச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.
17 பின்பு அவன் என்னை ஆலயத்தின் வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்தான். அங்கு முற்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில அறைகளையும், நடைபாதைத் தளத்தையும் நான் கண்டேன். அந்த நடைபாதைத் தளத்தின் நெடுகிலும் முப்பது அறைகள் இருந்தன.
௧௭பின்பு என்னை வெளிமுற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், முற்றத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.
18 அந்த நடைபாதை நுழைவு வாசலின் ஓரமாக நீண்டுகொண்டு போனது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவாய் இருந்தது. அது கீழ் நடைபாதையாயிருந்தது.
௧௮வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்திற்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாக இருந்தது.
19 பின்பு அவன் தாழ்ந்த நுழைவு வாசலின் உட்புறத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்புறம்வரையுள்ள தூரத்தை அளந்தான். அது கிழக்குப்புறத்திலும் வடக்குப் புறத்திலும் நூறு முழங்களாய் இருந்தன.
௧௯பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவங்கி, உள்முற்றத்துப் புறமுகப்புவரையுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாக இருந்தது.
20 பின்பு அவன் வடக்கை நோக்கியிருந்த வெளிமுற்றத்துக்குச் செல்லும் வாசலின் நீள அகலங்களை அளந்தான்.
௨0வெளிமுற்றத்திற்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21 ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த அதன் மூன்று காவல் அறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், அதன் புகுமுக மண்டபமும் முதலாவது நுழைவு வாசலின் அளவுகளைக் கொண்டனவாகவே இருந்தன. அது ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது.
௨௧அதற்கு இந்த பக்கத்தில் மூன்று அறைகளும் அந்த பக்கத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாக இருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
22 அதன் இடைவெளிகளும் புகுமுக மண்டபமும் பேரீச்சமர அலங்காரங்களும் கிழக்கு வாசலின் அளவுகளையே கொண்டிருந்தன. அவ்வடக்கு வாசலுக்குச் செல்ல ஏழு படிகள் இருந்தன. அதன் புகுமுக மண்டபம் அவற்றிற்கு எதிராக இருந்தது.
௨௨அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும், கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாக இருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகள் இருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.
23 வடக்கு வாசலை நோக்கியிருக்கும் ஆலய உள்முற்றத்துக்குப் போவதற்குக் கிழக்கில் இருந்ததைப்போல ஒரு வாசல் இருந்தது. அவன் ஒரு வாசலில் இருந்து அதன் எதிரேயிருந்த வாசல்வரை அளந்தான். அது நூறுமுழ நீளமாயிருந்தது.
௨௩வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உள்முற்றத்திற்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவங்கி மற்ற வாசல்வரை நூறு முழமாக அளந்தார்.
24 பின் அவன் என்னைத் தென்திசைக்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் தெற்கு நோக்கியிருந்த ஒரு வாசலைக் கண்டேன். அவன் அதன் ஆதாரங்களையும், புகுமுக மண்டபத்தையும் அளந்தான். அவைகளும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன.
௨௪பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.
25 நுழைவு வாசலும், அதன் புகுமுக மண்டபமும் மற்றவைகளின் இடைவெளிகளைப்போலவே சுற்றிலும் ஒடுங்கிய இடைவெளிகளைக் கொண்டிருந்தன. அது ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டனவாயிருந்தது.
௨௫அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
26 தெற்கு வாசலுக்குச் செல்ல ஏழு படிகள் இருந்தன. அவற்றுக்கு எதிரே புகுமுக மண்டபம் இருந்தது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தொடுத்துநிற்கும் சுவர்களின் முன்பக்கங்களில் பேரீச்சமர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
௨௬அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகள் இருந்தது; அதற்கு முன்பாக அதின் மண்டபங்களும் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் பக்கத்தில் ஒன்றும் அந்தப் பக்கத்தில் ஒன்றுமாக இருந்தது.
27 உள்முற்றமும் தெற்கு நோக்கியிருக்கும் ஒரு வாசலைக் கொண்டிருந்தது. அவன் வாசலிலிருந்து தெற்கு பக்கத்திலிருந்த வெளிவாசல்வரை அளந்தான். அதன் நீளம் நூறு முழங்களாயிருந்தன.
௨௭உள்முற்றத்திற்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல் துவங்கி மற்றவாசல்வரை நூறுமுழமாக அளந்தார்.
28 பின்பு அவன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உள்முற்றத்துக்குக் கொண்டுவந்தான். அவன் தெற்கு வாசலை அளந்தான். அதுவும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது.
௨௮பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.
29 அதன் காவலறைகளும், தொடுத்துநிற்கும் சுவர்களும், புகுமுக மண்டபமும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. நுழைவாசலும் அதன் புகுமுக மண்டபமும், சுற்றிலும் இடைவெளிகளைக் கொண்டிருந்தன. நுழைவாசலிலிருந்து போகும் வழி ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாய் இருந்தன.
௨௯அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
30 உள்முற்றத்தைச் சுற்றியிருந்த நுழைவு வாசல்களின் புகுமுக மண்டபங்கள் இருபத்தைந்து முழ அகலமும், ஐந்துமுழ குத்தளவாயுமிருந்தன.
௩0இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது.
31 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் ஆதாரங்களைப் பேரீச்சமர அலங்காரங்கள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
௩௧அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
32 பின்பு அவன் என்னைக் கிழக்குப் பக்கத்திலுள்ள உள்முற்றத்துக்குக் கொண்டுவந்தான். அவன் நுழைவு வாசலை அளந்தான். அது மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது.
௩௨பின்பு அவர் கிழக்குத்திசை வழியாக என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
33 அதன் காவலறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், அதன் புகுமுக மண்டபமும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. நுழைவு வாசலும் அதன் புகுமுக மண்டபமும் சுற்றிலும் இடைவெளிகளைக் கொண்டிருந்தன. நுழைவாசலிருந்து போகும் வழி ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது.
௩௩அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
34 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இருபுறம் இருந்த ஆதாரங்களை பேரீச்சமர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
௩௪அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
35 பின்பு அவன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்துவந்து அதை அளந்தான். அதுவும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது.
௩௫பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அதின் வாசலை அளந்தார்.
36 அதன் காவலறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், புகுமுக மண்டபமும் அதே அளவுகளையே கொண்டிருந்தன. அதைச் சுற்றிலும் இடைவெளிகள் இருந்தன. அதுவும் ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது.
௩௬அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
37 அதன் வாசலின் மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இருபுறமும் இருந்த ஆதாரங்களை பேரீச்சமர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டுப் படிகள் இருந்தன.
௩௭அதின் தூணாதாரங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுவதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
38 ஒவ்வொரு உள் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்திற்கு அருகிலும் ஒரு கடை வாசலைக்கொண்ட அறையொன்று இருந்தது. அங்கே தகனபலிகள் கழுவப்பட்டன.
௩௮அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.
39 நுழைவு வாசலின் மண்டபத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேஜைகள் இருந்தன. அவற்றில் தகன காணிக்கைகள், பாவநிவாரண காணிக்கைகள், குற்றநிவாரண காணிக்கைகளுக்கான மிருகங்கள் ஆகியன வெட்டப்பட்டன.
௩௯வாசலின் மண்டபத்திலே இந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் அந்தப் பக்கத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள்.
40 நுழைவு வாசலின் புகுமுக மண்டபச்சுவரின் வெளிப்புறத்தில் வடக்கு நுழைவு வாசலுக்குப்போகும் புகுமுக வாசலின் படிகளுக்கருகே இரண்டு மேஜைகள் இருந்தன. படிகளின் மற்றப் பக்கத்தில் இன்னும் இரண்டு மேஜைகள் இருந்தன.
௪0வடக்குவாசலுக்குள் நுழைகிறதற்கு ஏறிப்போகிற வெளிப்பக்கத்திலே இரண்டு பீடங்களும், வாசலின் மண்டபத்திலுள்ள மறுபக்கத்திலே இரண்டு பீடங்களும் இருந்தது.
41 எனவே நான்கு மேஜைகள் நுழைவு வாசலின் ஒரு புறத்திலும் நான்கு மேஜைகள் நுழைவு வாசலின் மறுபுறத்திலுமாக எல்லாமாக எட்டு மேஜைகள் அங்கு இருந்தன. அவற்றில் பலிக்கான மிருகங்கள் வெட்டப்பட்டன.
௪௧வாசலின் அருகே இந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், அந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.
42 மேலும் வெட்டப்பட்ட கற்களினாலான நான்கு மேஜைகள் தகன பலிப்பொருட்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒன்றரைமுழ நீளமும், ஒன்றரைமுழ அகலமும், ஒருமுழ உயரமுமாய் இருந்தன. அவற்றின்மேல் தகன காணிக்கைகளையும், மற்றும் பலிகளையும் வெட்டுவதற்கான பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
௪௨தகனபலிக்குரிய நான்கு பீடங்கள் வெட்டின கல்லாக இருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாக இருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
43 இரு கூர்முனைகளுள்ள கொக்கிகள் சுற்றிலுமுள்ள சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் நான்கு விரற்கடை அளவுள்ளதாயிருந்தன. பலியிடப்படும் இறைச்சிக்காகவே அந்த மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன.
௪௩நான்கு விரற்கடை அளவான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாக அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் இறைச்சி பீடங்களின்மேல் வைக்கப்படும்.
44 உள் நுழைவு வாசலுக்கு வெளியே, உள்முற்றத்துக்குள் இரண்டு அறைகள் இருந்தன. வடக்கு வாசலின் பக்கம் இருந்த அறை தெற்கு நோக்கியும் மற்ற அறை தெற்கு வாசலின் பக்கத்தில் வடக்கு நோக்கியும் இருந்தன.
௪௪உள்முற்றத்திலே உள்வாசலுக்கு வெளியே பாடகர்களின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
45 அவன் என்னிடம், “தெற்கு நோக்கியிருக்கும் அறை ஆலயத்துக்குப் பொறுப்பாயிருக்கும் ஆசாரியருக்கானது;
௪௫பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராக இருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.
46 வடக்கு நோக்கியிருக்கும் அறை பலிபீடத்துக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசாரியருக்கானது. அவர்கள் சாதோக்கின் மகன்களாவர். அவர்கள் மட்டுமே யெகோவாவுக்கு முன்பாக அவரருகில் வந்து அவருக்குப் பணிசெய்யக்கூடிய லேவியர்கள்” என்றான்.
௪௬வடதிசைக்கு எதிராக இருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் மகன்களில் யெகோவாவுக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் மகன் என்றார்.
47 பின்பு அவன் முற்றத்தை அளந்தான். அது நூறுமுழ நீளமும், நூறுமுழ அகலமும்கொண்ட சதுரமாய் இருந்தது. பலிபீடமே ஆலயத்தின் முன் இருந்தது.
௪௭அவர் முற்றத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாக இருந்தது; பலிபீடமோ ஆலயத்திற்கு முன்பாக இருந்தது.
48 அவன் என்னை ஆலயத்தின் வாசலின் மண்டபத்திற்கு கொண்டுவந்து, அதன் ஆதாரங்களை அளந்தான். அவை ஒவ்வொரு பக்கமும் ஐந்துமுழ அகலமாய் இருந்தன. புகுமுக வாசலின் அகலம் பதினான்கு முழமும் அதைத் தொடுத்துநிற்கும் சுவர்கள் ஒவ்வொருபுறமும் மூன்றுமுழ அகலமும் கொண்டனவாயிருந்தன.
௪௮பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்பக்கம் மூன்று முழமுமாக இருந்தது.
49 புகுமுக மண்டபம் இருபதுமுழ அகலமும் முன்பக்கமிருந்து பின்பக்கம்வரை பன்னிரண்டு முழங்களுமாயிருந்தன. அதை அடைவதற்கு ஒருபடி வரிசை இருந்தது. ஆதாரங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் தூண்கள் இருந்தன.
௪௯மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாக இருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களில் இந்தப்பக்கத்தில் ஒரு தூணும் அந்தப்பக்கத்தில் ஒரு தூணும் இருந்தது.