< எசேக்கியேல் 32 >
1 அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பன்னிரண்டாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
௧பாபிலோனின் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 “நீ எகிப்தின் அரசனான பார்வோனைப் பற்றி ஒரு புலம்பலை எடுத்து அவனிடம் சொல்லுங்கள்: “‘பல நாடுகளின் மத்தியில் நீ ஒரு சிங்கத்தைப் போலிருக்கிறாய்! நீ கடல்களில் இருக்கும் ஒரு இராட்சதப் பாம்பைப்போல் இருக்கிறாய். நீரோடைகளை அங்குமிங்கும் அடித்து, கால்களால் தண்ணீரைக் கலக்கி, நீரோடைகளைச் சேறாக்குகிறாய்.
௨மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: தேசங்களுக்குள்ளே நீ பாலசிங்கத்திற்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன்னுடைய நதிகளில் எழும்பி, உன்னுடைய கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
3 “‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “‘ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைக்கொண்டு நான் என் வலையை உன்மேல் வீசுவேன். என்னுடைய வலையினால் அவர்கள் உன்னை மேலே இழுத்துக்கொள்வார்கள்.
௩ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
4 நான் உன்னைத் தரையிலே எறிந்து திறந்தவெளியில் உன்னை வீசிவிடுவேன். ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மீது தங்கச்செய்து, பூமியின் மிருகங்களெல்லாம் உன்னைத் தின்று திருப்தியுறச் செய்வேன்.
௪உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கச்செய்து, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
5 நான் உன் சதையை மலைகளில் சிதறச்செய்து, பள்ளத்தாக்குகளை உன் மீதியான சதைகளால் நிரப்புவேன்.
௫உன்னுடைய சதையை மலைகளின்மேல் போட்டு, உன்னுடைய உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
6 வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள் வரைக்கும் நிலத்தையெல்லாம் ஈரமாக்குவேன். மலை இடுக்குகள் உன் சதையினால் நிரப்பப்படும்.
௬நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
7 நான் உன்னை அழிக்கும்போது, வானத்தை மூடி, அதன் நட்சத்திரங்களை இருளடையச் செய்வேன். சூரியனை மேகத்தால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
௭உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.
8 உனக்கு மேலாக வானங்களில் ஒளிதரும் சுடர்களையெல்லாம் இருளடையச் செய்வேன். உன் நாட்டின்மீதும் நான் இருளை வரச்செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௮நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 நாடுகளுக்கு மத்தியிலும் நீ அறியாத நாடுகள் மத்தியிலும் நான் அழிவை உன்மேல் கொண்டுவரும்போது, திரளான மக்களின் இருதயத்தைக் கலங்கப்பண்ணுவேன்.
௯உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.
10 உன்னைக் கண்டு அநேக மக்களைத் அதிர்ச்சியுறச் செய்வேன். அவர்களுடைய அரசர்களுக்கு முன்பாக என் வாளை நான் சுழற்றும்போது, அவர்கள் உன் நிமித்தம் பேரச்சத்தால் நடுங்குவார்கள். உனது விழுகையின் நாளில், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உயிருக்காக ஒவ்வொரு வினாடியும் நடுங்குவார்கள்.
௧0அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.
11 “‘ஏனெனில் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “‘பாபிலோன் அரசனுடைய வாள் உனக்கு விரோதமாய் வரும்.
௧௧யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.
12 நாடுகளுக்குள் மிகக் கொடிய வலியோரின் வாள்களினால், உன் மக்கள் கூட்டங்களை விழச்செய்வேன்; எகிப்தின் பெருமையை அவர்கள் ஒழியச்செய்வார்கள். அவளுடைய மக்கள் கூட்டங்களெல்லாம் அழிக்கப்படும்.
௧௨பராக்கிரமசாலிகளின் வாள்களால் உன்னுடைய மக்கள்கூட்டத்தை விழச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் தேசங்களில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
13 நிறைவான நீர்நிலைகளருகில் இருக்கும் அவளுடைய மந்தைகளையெல்லாம் அழிப்பேன். அந்த நீர்நிலைகள் இனியொருபோதும் மனித காலினால் குழப்பப்படவோ, அல்லது மந்தைகளின் குழம்புகளால் சேறாக்கப்படவோ மாட்டாது.
௧௩திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகங்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனிதனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
14 பின்பு நான் எகிப்தின் நீர்நிலைகளை அமைதலடையச் செய்து, அவளுடைய நீரூற்றுக்களை எண்ணெய்போல் வழிந்தோடச்செய்வேன் என, ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௧௪அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 நான் எகிப்தைப் பாழாக்கி, நாட்டிலுள்ள அனைத்தையும் நீக்கி, அதை வெறுமையாக்கி, அங்கு வாழும் எல்லோரையும் அழிக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
௧௫நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன்னுடைய நிறைவை இழந்து வெறுமையாகக் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் அழிக்கும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
16 “அவர்கள் அவளுக்காகப் பாடும் புலம்பல் இதுவே. பல நாடுகளின் மகள்களும் அதைப் பாடுவார்கள். எகிப்திற்காகவும் அவளுடைய எல்லா மக்கள் கூட்டங்களுக்காகவும் அவர்கள் அதைப் பாடுவார்கள்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௧௬இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி தேசத்தின் மகள்கள் புலம்புவார்கள்; இப்படி எகிப்திற்காகவும், அதினுடைய எல்லாத் திரளான மக்களுக்காகவும் புலம்புவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
17 பன்னிரண்டாம் வருடம், முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
௧௭பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18 “மனுபுத்திரனே, நீ எகிப்தின் மக்கள் கூட்டங்களுக்காகப் புலம்பி, அவனையும் பலத்த நாடுகளின் மகள்களையும் குழியில் இறங்குகிறவர்களோடு பூமிக்குக் கீழே ஒப்படைத்துவிடு.
௧௮மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
19 நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் தயவு பெற்றவர்களோ? ‘கீழேபோய் விருத்தசேதனமற்றவர்கள் மத்தியில் கிடவுங்கள்’ என நீ அவர்களுக்குச் சொல்.
௧௯மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு.
20 வாளினால் கொல்லப்பட்டவர்களின் மத்தியில் அவர்கள் விழுவார்கள். வாள் உருவப்பட்டு விட்டது. அவளுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றோடும் அவள் வாரிக்கொள்ளப்படட்டும்.
௨0அவர்களுடைய வாளால் வெட்டுப்பட்டவர்களின் நடுவிலே விழுவார்கள், வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய மக்கள்கூட்டம் யாவையும் பிடித்திழுங்கள்.
21 வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள். (Sheol )
௨௧பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol )
22 “அசீரியா தனது எல்லா இராணுவத்தோடும் அங்கே இருக்கிறது. வாளினால் மடிந்தோருடைய கல்லறைகளினால் அது சூழப்பட்டிருக்கிறது.
௨௨அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
23 அவர்களுடைய கல்லறைகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கின்றன. அவளுடைய இராணுவம் அதன் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றது. வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய அனைவருமே வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள்.
௨௩பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
24 “ஏலாம் அங்கே இருக்கிறது. அவள் மக்கள் கூட்டங்கள் எல்லாமே அதன் கல்லறையைச் சுற்றி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே, வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். வாழ்வோரின் நாட்டில் திகிலைப் பரப்பிய அனைவருமே, விருத்தசேதனமற்றவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள். அவர்கள் குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
௨௪அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
25 அவளுடைய மக்கள் கூட்டங்கள் அவளுடைய கல்லறைகளைச் சூழ்ந்துகிடக்க, வெட்டுண்டவர்களின் மத்தியில் அவளுக்கு ஒரு படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோருமே வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்கள். வாழ்வோரின் நாட்டில் அவர்கள் திகிலைப் பரப்பியபடியால், குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள். வெட்டுண்டவர்களின் நடுவில் அவர்கள் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
௨௫வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
26 “மேசேக்கும், தூபாலும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாம் அவர்களுடைய கல்லறைகளைச் சுற்றிக்கிடக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமற்றவர்கள். அவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய காரணத்தால் வாளினால் கொல்லப்பட்டார்கள்.
௨௬அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய உயிருள்ளோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்களெல்லோரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள்; வாளால் வெட்ட்டப்பட்டு விழுவார்கள்.
27 விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று. (Sheol )
௨௭உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol )
28 “பார்வோனே, நீயும் நொறுங்குண்டு, வாளினால் கொலையுண்ட விருத்தசேதனமற்றவர்களின் மத்தியிலே கிடப்பாய்.
௨௮நீயும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் இருப்பாய்.
29 “ஏதோம் அங்கே இருக்கிறாள். அவளுடைய அரசர்களும், எல்லா இளவரசர்களும் அங்கே இருக்கிறார்கள். அதிகாரமுடையவர்களாய் இருந்தும், வாளினால் செத்தவர்களுடன் கிடத்தப்பட்டார்கள். அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களோடும், குழியில் இறங்குகிறவர்களோடும் கிடக்கிறார்கள்.
௨௯அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள்.
30 “வடதிசை இளவரசர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரமுடையவர்களாய் இருந்து, அச்சத்தை விளைவித்த போதிலும், கொலையுண்டவர்களோடு அவமானத்துடன் கீழே போனார்கள். வாளினால் வெட்டப்பட்ட விருத்தசேதனமற்றவர்களாகவே அவர்கள் கிடந்து, குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
௩0அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
31 “பார்வோனும் அவனுடைய இராணுவத்தினர் எல்லோரும் அவர்களைக் காண்பார்கள். அப்பொழுது பார்வோன் வாளினால் கொல்லப்பட்ட தன் மக்கள் கூட்டங்கள் எல்லோரின் நிமித்தமும் தேற்றப்படுவான் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௩௧பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32 வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பும்படி நானே பார்வோனை ஏவினேன். ஆயினும், பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும், வாளினால் கொல்லப்பட்டவர்களோடு விருத்தசேதனமற்றோர் மத்தியிலே கிடத்தப்படுவார்கள், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
௩௨என்னைப்பற்றிய பயத்தை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டாக்குகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான மக்களும் வாளால் வெட்டுபட்டவர்களிடத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.