< எசேக்கியேல் 27 >
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2 “மனுபுத்திரனே, நீ தீருவைக் குறித்து புலம்பு.
௨மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி,
3 கடலின் துறைமுகத்தில் அமைந்திருப்பதும், அநேக கடற்கரையில் வாழ்வோருடன் வியாபாரம் செய்வதுமான தீரு பட்டணத்திற்குச் சொல்லவேண்டியதாவது, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; “தீருவே, ‘அழகில் நான் பரிபூரணமானவள், “எனக் கூறுகிறாய்.”
௩கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய்.
4 உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது. உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.
௪கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
5 சேனீரின் தேவதாரு மரங்களால், அவர்கள் உன் மர வேலைகளை அமைத்தார்கள். உனக்குப் பாய்மரம் செய்வதற்காக லெபனோனின் கேதுருவை எடுத்தார்கள்.
௫சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
6 பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால், உனக்குத் துடுப்புகளைச் செய்தார்கள். சைப்பிரஸின் கடற்கரைகளிலிருந்து பெற்ற சவுக்கு மரங்களினால் அவர்கள் உன் கப்பல் தளத்தைக் கட்டி, யானைத் தந்தத்தினால் அதை அலங்கரித்தார்கள்.
௬பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.
7 எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலைப்பாடமைந்த மென்பட்டு, உனது பாயாகவும் கொடியாகவும் இருந்தது. எலீஷாவின் கரையோரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீலத் துணியும், கருஞ்சிவப்புத் துணியும் உனக்குக் கூடாரமாயின.
௭எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
8 சீதோன், அர்வாத் பட்டணத்தினர் உன் படகோட்டிகளானார்கள். தீருவே! உன் தொழில் வல்லுனர், உனது கப்பல்களில் மாலுமிகளானார்கள்.
௮சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள்.
9 கேபாவின் அனுபவமிக்க கைவினைஞர் உன் கப்பல்களைப் பழுது பார்ப்பவர்களாய் உன் கப்பல்களில் இருந்தார்கள். கடலிலுள்ள எல்லா கப்பல்களும் அவைகளின் மாலுமிகளும் உன்னுடைய பொருட்களை வாங்குவதற்கு உன்னிடம் வந்தார்கள்.
௯கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
10 “‘பெர்சியா, லீதியா, பூத்தியா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதர்கள் உன் இராணுவவீரர்களாய் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் மதில்களில் தொங்கவிட்டு, உனக்குச் சிறப்பைக் கொண்டுவந்தார்கள்.
௧0பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
11 அர்வாத், ஹேலேக் பட்டணங்களைச் சேர்ந்த மனிதர் உன் மதில்களின் ஒவ்வொரு புறங்களிலும் காவலிருந்தார்கள். கம்மாத் மனிதர் உன் கோபுரங்களில் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கேடயங்களை உன் மதில்களின்மேல் சுற்றிலும் தொங்கவிட்டார்கள். அவர்கள் உன் அழகை முழுநிறைவாக்கினார்கள்.
௧௧அர்வாத்திரர்கள் உன்னுடைய படைவீரர்களும் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர்கள் உன்னுடைய மதில்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும் தங்களுடைய கேடயங்களைத் தூக்கிவைத்து, உன்னுடைய வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
12 “‘உன் பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தம் தர்ஷீஸ் வர்த்தகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை மாற்றீடு செய்தார்கள்.
௧௨எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள்.
13 “‘கிரீஸ், தூபால், மேசேக் வர்த்தகர்களும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக அடிமைகளையும், வெண்கலப் பொருட்களையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
௧௩யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
14 “‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
௧௪தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
15 “‘தேதான் மனிதர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அநேக கடலோர நாடுகள் உன் வாடிக்கையாளர்களாய் இருந்தன. அவர்கள் யானைத்தந்தங்களையும், கருங்காலி மரங்களையும் உன்னிடம் மாற்றீடாய் தந்தார்கள்.
௧௫தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
16 “‘சீரியர் உன் அநேக உற்பத்திகளினிமித்தம் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் இளநீல இரத்தினங்களையும் ஊதாநிற துணிகளையும் வேலைப்பாடமைந்த உடைகளையும், மென்பட்டுத் துணிகளையும், பவளத்தையும், சிவப்பு இரத்தினத்தையும் உன்னிடம் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
௧௬சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள்.
17 “‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
௧௭யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
18 “‘தமஸ்கு, உனது பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தமும், உன் அநேக உற்பத்திப் பொருள்களினிமித்தமும் கெல்போனின் திராட்சை இரசத்தையும், ஷாகாரின் ஆட்டுமயிரையும் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தது.
௧௮தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.
19 வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள்.
௧௯தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள்.
20 “‘தேதான் சேணத்திற்குப் பயன்படுத்தும் கம்பளங்களை உனக்கு விற்றது.
௨0இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
21 “‘அரேபியாவும், கேதாரின் சகல இளவரசர்களும் உன் வாடிக்கையாளர்களாயிருந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றைக்கொண்டு உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
௨௧அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
22 “‘சேபா, ராமாவின் வணிகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் வியாபாரப் பொருள்களுக்காக எல்லாவித உயர்தர வாசனைத் திரவியங்களையும், விலை உயர்ந்த கற்களையும், தங்கத்தையும் மாற்றீடு செய்தார்கள்.
௨௨சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
23 “‘ஆரான், கன்னே, ஏதேன் ஆகியவற்றுடன் சேபா, அசீரியர், கில்மாத் வணிகரும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
௨௩ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
24 அவர்கள் உனது சந்தையில் அழகிய உடைகள், நீலப்பட்டுத் துணி, வேலைப்பாடமைந்த தையல் துணி, கயிறுகளால் பின்னப்பட்ட பலவர்ணக் கம்பளிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
௨௪இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
25 “‘உனது பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு தர்ஷீஸின் கப்பல்கள் பயன்பட்டன. அவை கடலின் நடுவில் பாரமான பொருள்களினால் நிரப்பப்பட்டுள்ளன.
௨௫உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்.
26 உன், படகோட்டிகள் உன்னைப் பெருங்கடலுக்குக் கொண்டுபோகிறார்கள். ஆனால், நடுக்கடலில் கீழ்க்காற்று உன்னைத் துண்டுகளாக உடைக்கும்.
௨௬துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
27 உன் செல்வமும், வர்த்தகப் பொருள்களும் மற்றும் பொருட்களும் நடுக்கடலில் கப்பல் விபத்துநாளிலே விழுந்துபோகும். அதனுடன் கப்பலாட்கள், மாலுமிகள், கப்பல் பழுதுபார்ப்போர், வர்த்தகர்கள், இராணுவவீரர், கப்பலிலுள்ள எல்லோருங்கூட நடுக்கடலிலே விழுவார்கள்.
௨௭நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள்.
28 உன் மாலுமிகள் ஓலமிடும் வேளையிலே, கடலோர நாடுகள் அதிரும்.
௨௮உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
29 தண்டு வலிப்போர் அனைவரும் தங்கள் கப்பல்களைக் கைவிட்டு விடுவார்கள். கப்பலாட்கள், மாலுமிகள் அனைவருமே கரையில் நிற்பார்கள்.
௨௯தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று,
30 அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.
௩0உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
31 அவர்கள் உன்னிமித்தம் துக்கித்து, தங்கள் தலைகளை மொட்டையடித்து, துக்கவுடைகளை உடுத்துவார்கள். அவர்கள் உனக்காக ஆத்தும வேதனையுடன் அழுது மனக்கசப்புடன் துக்கங்கொண்டாடுவார்கள்.
௩௧உனக்காக மொட்டையடித்து சணலாடையை உடுத்திக்கொண்டு, உனக்காக மனம்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
32 அவர்கள் உனக்காக துக்கங்கொண்டாடுகையில், “கடலால் சூழப்பட்ட தீருவைப்போல் எப்பொழுதாவது அமைதியாக்கப்பட்டது யார்?” என, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்.
௩௨அவர்கள் உனக்காகத் தங்களுடைய துக்கத்திலே ஓலமிட்டு, உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் இணையான நகரம் உண்டோ?
33 உன் வர்த்தகப் பொருள்கள் கடல்களுள் வழியாகச் சென்றபோது, நீ அநேக நாடுகளைத் திருப்திசெய்தாய்; உன் பெரும் செல்வத்தாலும் உனது பொருட்களாலும் பூமியின் அரசர்களைச் செல்வந்தராக்கினாய்.
௩௩உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய்.
34 இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில் கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய். உன் பொருட்களும், உனது கூட்டமும் உன்னோடு அமிழ்ந்து போயின!
௩௪நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
35 கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும், உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள், அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்! அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.
௩௫தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
36 நாடுகளின் வர்த்தகர்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கின்றார்கள்; உனக்கு ஒரு பயங்கர முடிவு வந்துவிட்டது! நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’”
௩௬எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.