< எசேக்கியேல் 18 >

1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது,
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 “‘தந்தையர் திராட்சைக் காய்களைத் தின்ன பிள்ளைகளின் பற்கள் கூசியது: என்று இஸ்ரயேல் நாட்டைக்குறித்து, நீங்கள் சொல்லும் பழமொழியின் அர்த்தம் என்ன’?
பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
3 “நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் இனிமேல் இப்பழமொழியை இஸ்ரயேலில் சொல்லப்போவதில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.
இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
4 ஏனெனில் வாழ்கின்ற ஆத்துமா ஒவ்வொன்றும் என்னுடையதே, தகப்பனும், மகனும் இருவரும் ஒரேவிதமாய் எனக்குரியவர்களே; பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.
5 “நீதியையும் நியாயத்தையும் செய்யும் நீதியுள்ள மனிதனொருவன் இருப்பானாகில்,
ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
6 அவன் மலைகளிலுள்ள சிறு கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் விக்கிரகங்களை நம்பாமலும் இருப்பான். அவன் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்தாமலும், மாதவிடாய்க் காலங்களில் பெண்ணுடன் உறவுகொள்ளாமலும் இருப்பான்.
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும்,
7 அவன் ஒருவரையும் ஒடுக்காமல் கடனுக்காய்ப் பெற்ற அடைமானத்தைத் திரும்பக்கொடுப்பான். அவன் கொள்ளையிடமாட்டான். ஆனால் அவன் பசியுடையோருக்கு உணவும், உடையில்லாதோருக்கு உடையும் கொடுப்பான்.
ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
8 அவன் பணத்தை அதிக வட்டிக்குக் கொடுக்கமாட்டான். அவன் அதிக இலாபம் பெறவும் மாட்டான். தனது கையைத் தவறு செய்வதிலிருந்து விலக்கி, இரண்டு குழுக்களுக்கு இடையில் நீதியாய் நியாயந்தீர்ப்பான்.
வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து,
9 அவன் என்னுடைய கட்டளைகளைப் பின்பற்றி, என்னுடைய சட்டங்களை உண்மையாய்க் கடைப்பிடிப்பான். அப்படிப்பட்ட மனிதனே நேர்மையானவன். அவன் நிச்சயமாய் வாழ்வான் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
10 “ஆனால் அவனுக்கு வன்முறை செய்யும் ஒரு மகன் இருந்து, அவன் இரத்தம் சிந்துகிறவனாயோ, நல்லதல்லாத காரியங்களில் எதிலாவது ஈடுபடுகிறவனாயோ,
௧0ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல்,
11 அவனுடைய தகப்பன் செய்யாத எதையாவது செய்கிறவனாயோ இருந்தால், “அவன் மலைக்கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறவன். அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறவன்.
௧௧இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
12 அவன் ஏழையையும் வறியோரையும் ஒடுக்குகிறவன். அவன் கொள்ளையடிக்கிறவன். அவன் அடைமானமாக வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதில்லை. விக்கிரகங்களில் நம்பிக்கை வைக்கிறவன். அவன் அருவருப்பானவைகளைச் செய்கிறவன்.
௧௨சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
13 அவன் அதிக வட்டிக்குக் கடன்கொடுத்து, அப்படிப்பட்ட மனிதன் உயிர்வாழ்வானோ? அவன் வாழவேமாட்டான். ஏனெனில் இந்த அருவருப்புகளையெல்லாம் அவன் செய்கிறான் அல்லவா? நிச்சயமாக அவன் கொல்லப்படுவான். அவனுடைய இரத்தப்பழி அவன் தலையிலேயே இருக்கும்.
௧௩வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
14 “ஆனால் இந்த மகனுக்கும் ஒரு மகன் இருந்து, அவன் தன் தகப்பன் செய்யும் பாவங்களையெல்லாம் கண்டு, தான் அத்தகைய காரியங்களைச் செய்யாமல் இருப்பானாகில், அதாவது:
௧௪பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து,
15 “அவன் மலைக்கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடுவதோ, இஸ்ரயேல் வீட்டாரின் விக்கிரகங்களை நம்புவதோ இல்லை. அவன் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துவதுமில்லை.
௧௫மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
16 அவன் ஒருவனையும் ஒடுக்குவதும், கடனுக்காய் அடைமானம் கேட்பதும் இல்லை. அவன் கொள்ளையிடுவதில்லை. ஆனால் பசியாயிருப்போருக்கு உணவும், உடையற்றோருக்கு உடையும் கொடுக்கிறான்.
௧௬ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
17 சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தனது கையை, விலக்கிக்கொள்கிறான். அவன் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்காமலும், அதிக இலாபத்தை வாங்காமலும் இருக்கிறான். அவன் என் சட்டங்களைக் கைக்கொண்டு, என் விதிமுறைகளைப் பின்பற்றுகிறான். அவன் தன் தகப்பனின் பாவத்திற்காகச் சாகமாட்டான்; நிச்சயமாக உயிர்வாழ்வான்.
௧௭சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
18 ஆனால் அவன் தகப்பனோ தன் சொந்தப் பாவங்களின் நிமித்தம் மரிப்பான். ஏனெனில் அவன் நீதியற்ற வழியில் சம்பாதித்து, தன் சகோதரரைக் கொள்ளையிட்டு தன் மக்கள் மத்தியில் நல்லதல்லாத காரியங்களைச் செய்தானே.
௧௮அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்.
19 “என்றாலும் நீங்கள், ‘தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமப்பதில்லை?’ என்று கேட்கிறீர்கள், அந்த மகனோ நீதியான, நியாயமானவற்றைச் செய்து என் கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொள்ள கவனமாயிருந்தபடியால், நிச்சயமாக வாழ்வான்.
௧௯இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
20 பாவம் செய்த ஆத்துமாவே சாகும். தந்தையின் குற்றத்தில் மகன் பங்குபெறமாட்டான். மகனின் குற்றத்தில் தகப்பனும் பங்குபெறமாட்டான். நீதியானவனுடைய நீதி அவனுக்குரியதாக எண்ணப்படும். கொடியவர்களின் கொடுமையோ அவர்களுக்கு விரோதமான குற்றமாக எண்ணப்படும்.
௨0பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
21 “ஆனாலும் கொடியவன் தான் செய்த எல்லா பாவங்களிலிருந்தும் திரும்பி, என்னுடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொண்டு, நீதியானதையும் சரியானதையும் செய்வானேயாகில் நிச்சயமாக அவன் வாழ்வான், அவன் சாகமாட்டான்.
௨௧துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
22 அவன் செய்த குற்றங்களில் ஒன்றாகிலும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த நீதியான காரியங்களின் நிமித்தம் அவன் வாழ்வான்.
௨௨அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
23 கொடியவர்களின் மரணத்தில் நான் மகிழ்ச்சியடைகிறவரோ? அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பி வாழும் போதல்லவா நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௨௩துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
24 “ஆனால் நீதிமான் ஒருவன் தன் நீதியிலிருந்து விலகி, பாவம் செய்து, கொடியவன் செய்வது போன்ற அருவருப்பான அதே காரியங்களையும் செய்வானேயாகில் அவன் பிழைப்பானோ? அவன் செய்த நீதியான காரியங்கள் எதுவுமே நினைக்கப்படுவதில்லை. உண்மையற்றவனாய் இருப்பதன் நிமித்தம் அவன் குற்றவாளியாயிருக்கிறான். அவன் தான் செய்த பாவங்களினிமித்தம் மரிப்பான்.
௨௪நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான்.
25 “என்றாலும் நீங்கள், ‘யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறீர்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே கேளுங்கள்; எனது வழி நீதியற்றதோ? உங்கள் வழிகள் அல்லவோ நீதியற்றவை.
௨௫நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது.
26 நீதிமான் ஒருவன் தன் நீதியைவிட்டு விலகி பாவம் செய்வானாகில், அதன் நிமித்தம் அவன் மரிப்பான். அவன் செய்த பாவத்திற்காகவே அவன் மரிப்பான்.
௨௬நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான்.
27 ஆனால், கொடியவனொருவன் தான் செய்த கொடுமையை விட்டு விலகி, நீதியானதையும் செய்வானாகில் அவன் தன் உயிரைக் காத்துக்கொள்வான்.
௨௭துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான்.
28 அவன் தான் செய்த எல்லா குற்றங்களையும் சிந்தித்து அவைகளை விட்டுத் திரும்புவதால் நிச்சயமாக அவன் பிழைப்பான். அவன் சாகமாட்டான்.
௨௮அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
29 அப்படியிருந்தபோதிலும், ‘யெகோவாவின் வழி நீதியற்றது என்று இஸ்ரயேல் குடும்பத்தார் கூறுகிறார்களே,’ என் வழிகள் நீதியற்றவைகளோ? இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் வழிகள் அல்லவோ நீதியற்றவை.
௨௯இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது.
30 “ஆகையால், இஸ்ரயேல் குடும்பத்தாரே, நான் உங்கள் ஒவ்வொருவரையும் அவரவர் வழிகளுக்குத்தக்கபடி நியாயந்தீர்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார். மனந்திரும்புங்கள்! உங்கள் குற்றங்கள் எல்லாவற்றிலிருந்தும் திரும்புங்கள். அப்பொழுது பாவம் உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாயிராது.
௩0ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை.
31 நீங்கள் செய்த குற்றங்கள் அனைத்தையும் உங்களைவிட்டு அகற்றிவிட்டு புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?
௩௧நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?
32 யாருடைய மரணத்திலும் நான் மகிழ்ச்சியடைவதில்லை. மனந்திரும்பி வாழுங்கள் என்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.
௩௨மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

< எசேக்கியேல் 18 >