< எசேக்கியேல் 12 >

1 யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது:
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 “மனுபுத்திரனே, நீ கலகம் செய்யும் குடும்பத்தாரின் மத்தியில் வாழ்கிறாய். அவர்களுக்கு பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் காண்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தார்.
மனிதகுமாரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கி இருக்கிறாய்; பார்க்கும்படி அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படி அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேட்காமற்போகிறார்கள்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.
3 “ஆகையால் மனுபுத்திரனே, நீ நாடுகடத்தப்படுவதற்காக உனது பயண பொருட்களை ஆயத்தப்படுத்து. அவர்கள் காணத்தக்கதாக பகல் வேளையிலே உன் இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு இடத்திற்குப் போ. அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராய் இருப்பினும் ஒருவேளை இதை விளங்கிக்கொள்வார்கள்.
இப்போதும் மனிதகுமாரனே, நீ வேறு தேசத்திற்கு போகும்படி பயண பொருட்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பயணப்படு; உன்னுடைய இடத்தைவிட்டு வேறே இடத்திற்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டார்களாக இருந்தாலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.
4 பகல் வேளையிலே அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், நாடுகடத்தப்படுவதற்காக நீ ஆயத்தப்படுத்திய உன் உடைமைகளை வெளியே எடுத்து வா. அதன்பின் மாலை வேளையிலே அவர்கள் முன்னிலையில் நாடுகடத்தப்பட்டுப் போகிறவர்கள்போலப் புறப்படு.
சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன்னுடைய பொருட்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ மாலையிலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.
5 அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே, சுவரில் ஒரு துளையிட்டு அதின் வழியாக உனது பயண பொருட்களை வெளியே கொண்டுபோக வேண்டும்.
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாக அவைகளை வெளியே கொண்டுபோகவேண்டும்.
6 இருள்சூழும் வேளையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவைகளை உன் தோள்மீது வைத்தபடி கொண்டுபோ. நாட்டைப் பார்க்க முடியாதபடி நீ உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் உன்னை ஒரு அடையாளமாக்கியிருக்கிறேன்” என்றார்.
அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன்னுடைய தோளின்மேல் எடுத்து, மாலை நேரத்தில் வெளியே கொண்டுபோகவேண்டும்; நீ தேசத்தைப் பார்க்காதபடி உன்னுடைய முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் மக்களுக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட எனது உடைமைகளை, பகல் வேளையிலே வெளியே கொண்டுவந்து வைத்தேன். பின்பு மாலைவேளையில் எனது கைகளினால் சுவரில் துவாரமிட்டேன். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் இருள்சூழும் வேளையிலே, அதை வெளியே எடுத்து என் தோள்மீது வைத்துக்கொண்டு போனேன்.
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என்னுடைய சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; மாலையிலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை நேரத்தில் அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.
8 காலையிலே யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
விடியற்காலத்திலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9 “மனுபுத்திரனே, அந்தக் கலகம் செய்பவர்களாகிய இஸ்ரயேல் குடும்பத்தார், ‘நீ என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார்கள் அல்லவா.
மனிதகுமாரனே, கலகம்செய்கிற மக்களாகிய இஸ்ரவேல் மக்கள் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?
10 “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, இது எருசலேமின் அரசனையும் அங்கிருக்கும் இஸ்ரயேலரின் முழுக் குடும்பத்தையும் குறித்த இறைவாக்கு ஆகும்.
௧0இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் மக்கள் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.
11 நான் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறேன்.’ “நான் செய்து காட்டியது போலவே உங்களுக்கும் செய்யப்படும், நீங்கள் சிறைக்கைதிகளாக நாடுகடத்தப்பட்டுப் போவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
௧௧நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாக இருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் வேறு தேசத்திற்கு போவார்கள்.
12 “அவர்கள் மத்தியிலிருக்கும் அரசன் இருள்சூழும் வேளையிலே தனது உடைமைகளைத் தன் தோளில் சுமந்தபடி புறப்படுவான். அவன் போவதற்காக சுவரிலே ஒரு துளை இடப்படும். அவன் நாட்டைப் பார்க்க முடியாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
௧௨அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமறையும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்களாலே அவன் தன்னுடைய தேசத்தைக் காணாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்.
13 நான் அவனுக்காக என் வலையை விரிப்பேன். அவன் எனது கண்ணியில் சிக்குவான். கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்கு அவனைக் கொண்டுசெல்வேன். ஆனால் அவன் அதைக் காணமாட்டான். அங்கேயே அவன் செத்துப்போவான்.
௧௩நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என்னுடைய கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர்கள் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் மரிப்பான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
14 அவனைச்சுற்றிலும் இருக்கும் உதவியாளர்களையும், இராணுவங்களையும் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். உருவிய வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
௧௪அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.
15 “நான் அவர்களை மக்கள் கூட்டத்திற்குள் கலைந்துபோகச் செய்து, நாடுகளுக்குள் சிதறடிக்கும்போது, நானே யெகோவா என அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
௧௫அப்படி நான் அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
16 ஆனால் நான் அவர்களில் சிலரை வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றிலிருந்து தப்புவிப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் நாடுகளுக்கிடையில் வெறுக்கத்தக்க தங்கள் பழக்கவழக்கங்களைத் தவறு என்று ஒத்துக்கொள்வார்கள்; அப்பொழுது நானே யெகோவா என்பதையும் அறிந்துகொள்வார்கள் என்று சொல்” என்றார்.
௧௬ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் தேசங்களுக்குள்ளே தங்களுடைய அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்திற்கும் பட்டயத்திற்கும் கொள்ளைநோய்க்கும் விலக்கி மீதியாக இருக்கச்செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
17 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
௧௭பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18 “மனுபுத்திரனே, நீ நடுக்கத்தோடே உன் உணவை சாப்பிடு. பயத்துடன் நடுங்கிக்கொண்டு தண்ணீரைக்குடி.
௧௮மனிதகுமாரனே, நீ உன்னுடைய அப்பத்தை நடுக்கத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய தண்ணீரைக் கலக்கத்தோடும் வருத்தத்தோடும் குடித்து,
19 பின்பு நாட்டின் குடிகளிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேல் நாட்டிலும் எருசலேமிலும் வாழும் மக்களைக் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அவர்கள் தங்கள் உணவை ஏக்கத்தோடு சாப்பிட்டு, மனச்சோர்வுடன் தண்ணீரைக் குடிப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய நாடு அங்கு குடியிருக்கும் அனைவரது கொடுமையினிமித்தம் அழித்துப் பாழாக்கப்படும்.
௧௯தேசத்திலுள்ள மக்ககளை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் மக்களைக் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்களுடைய அப்பத்தை வருத்தத்துடன் சாப்பிட்டு, தங்களுடைய தண்ணீரைப் பயத்துடன் குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் மக்களுடைய கொடுமையினால் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.
20 அவர்கள் குடியேறியிருக்கும் பட்டணங்கள் சீர்குலையும்; நாடு பாழாகும். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று சொல்’” என்றார்.
௨0குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்திரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
21 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
௨௧பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
22 “மனுபுத்திரனே, ‘நாட்களோ கடந்துபோய்க் கொண்டிருக்கின்றன; தரிசனம் ஒன்றும் நிறைவேறவில்லையே’ என்பதாக இஸ்ரயேல் நாட்டிலே உங்களுக்குள் வழங்கப்படும் இப்பழமொழி என்ன?
௨௨மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
23 ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் இப்பழமொழிக்கு ஒரு முடிவைக் கொண்டுவரப் போகிறேன். இஸ்ரயேலில் இனி அதைக் கூறமாட்டார்கள். எல்லாத் தரிசனங்களும் நிறைவுபெறும் காலம் நெருங்கிவிட்டது’ என்று அவர்களுக்குச் சொல்.
௨௩ஆகையால் நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடி நான் அதை ஒழியச்செய்வேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் அருகில் வந்தன என்று அவர்களுடன் சொல்லு.
24 பொய்த் தரிசனங்களோ அல்லது சாதகமாய்க் குறிசொல்லுதலோ இனி ஒருபோதும் இஸ்ரயேலரிடம் இருப்பதில்லை.
௨௪இஸ்ரவேல் மக்களின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இல்லாமற்போகும்.
25 ஆகவே யெகோவாவாகிய நான், திட்டமிட்டதையே பேசுவேன். அது தாமதமின்றி நிறைவேறும். கலகக்கார வீட்டாரே, ‘நான் கூறியது எதுவோ அதை உங்கள் நாட்களிலேயே நிறைவேற்றுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’”
௨௫நான் யெகோவா, நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகமக்களே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
26 மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
௨௬பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
27 “மனுபுத்திரனே, ‘இவன் காணும் தரிசனம் நிறைவேற இப்பொழுதிலிருந்து அநேக வருடங்கள் செல்லும் அநேக காலங்களுக்குப்பின் வரப்போகும் எதிர்காலம் பற்றியே இவன் இறைவாக்கு உரைக்கின்றான்’ என்று இஸ்ரயேல் குடும்பத்தார் கூறுகின்றார்கள்.
௨௭மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
28 “ஆகையால் நீ அவர்களிடம், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘இனி ஒருபோதும் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் தாமதிப்பதில்லை. நான் சொல்வது எதுவோ அது நிறைவேற்றப்படும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்’” என்றார்.
௨௮ஆகையால் என்னுடைய வார்த்தைகளில் ஒன்றுகூட இனித் தாமதிப்பதில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களுடன் சொல் என்றார்.

< எசேக்கியேல் 12 >