< எசேக்கியேல் 11 >
1 பின்பு ஆவியானவர் என்னை உயரத்தூக்கி, யெகோவாவின் ஆலயத்தில் கிழக்கு முகமாயிருக்கும் வாசலுக்குக் கொண்டுவந்தார். வாசலிலே இருபத்தைந்து மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியிலே மக்கள் தலைவர்களான ஆசூரின் மகன் யசனியாவையும், பெனாயாவின் மகன் பெலத்தியாவையும் கண்டேன்.
௧பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2 யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, இப்பட்டணத்தில் தீயவற்றைத் திட்டமிட்டு தீய ஆலோசனைகளைக் கொடுப்பவர்கள் இவர்களே.
௨அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.
3 அவர்களோ, ‘இது வீடுகளைக் கட்டுவதற்கேற்ற காலமல்லவோ? என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியே என்றும்’ சொல்லுகிறார்கள்.
௩இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4 ஆகையால் அவர்களுக்கு விரோதமாக இறைவாக்கு சொல்; மனுபுத்திரனே, இறைவாக்கு சொல்” என்றார்.
௪ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார்.
5 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் என்மேல் அமர்ந்தார். அவர் சொல்லச் சொன்னதாவது: “யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் அப்படித்தான் சொல்கிறீர்கள்! ஆனாலும் உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை நான் அறிவேன்.”
௫அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6 இந்நகரத்தில் அநேக மக்களை நீங்கள் கொலைசெய்து, அதன் வீதிகளைப் பிரேதங்களால் நிரப்பியிருக்கிறீர்கள்.
௬இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 “ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் வீதிகளில் வீசியெறிந்த உடல்களே அந்த இறைச்சியும், இந்த நகரமே பானையுமாய் இருக்கின்றன. ஆனாலும் நான் உங்களை அங்கிருந்து துரத்திவிடுவேன்.”
௭ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8 நீங்கள் வாளுக்குப் பயப்படுகிறீர்கள். அவ்வாளையே உங்களுக்கு விரோதமாகக் கொண்டுவருவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
௮பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 நான் உங்களைப் பட்டணத்திலிருந்து வெளியே துரத்தி, அந்நியர்களின் கைகளில் ஒப்புவித்து, உங்கள்மீது தண்டனையை வரப்பண்ணுவேன்.
௯நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10 நீங்கள் வாளால் மடிவீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
௧0பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
11 இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை. நீங்களும் அதிலுள்ள இறைச்சியாய் இருக்கமாட்டீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள்மீது நான் என் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன்.
௧௧இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12 அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ஏனெனில் நீங்கள் என் கட்டளைகளின்படி நடக்கவோ, என் சட்டங்களைப் பின்பற்றவோ இல்லை. ஆனால் உங்களைச் சுற்றிலும் இருக்கிற மற்ற நாடுகளின் வழக்கத்தின்படியே நடந்தீர்கள், என்று சொல்” என்றார்.
௧௨என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13 அவ்வாறே நான் இறைவாக்கு உரைக்கும்போது, பெனாயாவின் மகன் பெலத்தியா இறந்தான். உடனே நான் முகங்குப்புற விழுந்து, “ஆ, ஆண்டவராகிய யெகோவாவே! இஸ்ரயேலில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழித்துப்போடுவீரோ?” என உரத்த குரலில் அழுதேன்.
௧௩நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன்.
14 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
௧௪அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15 “மனுபுத்திரனே, நாடுகடத்தப்பட்டு உன்னோடு இருக்கிறவர்களே உனது இரத்த உறவினரும் இஸ்ரயேல் முழுக் குடும்பமுமான உனது சகோதரர். அவர்களைக் குறித்தே, ‘அவர்கள் யெகோவாவை விட்டுத் தூரமாய் இருக்கிறார்கள்; இந்நாடு எங்களுக்கே உரிமையாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எருசலேம் மக்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
௧௫மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள்.
16 “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களை நான் நாடுகளுக்குள் தூரமாய்த் துரத்தி, நாடுகளுக்குள்ளே சிதறடித்தேன். ஆனாலும் அவர்கள் சென்ற நாடுகளில் அந்தக் கொஞ்சக் காலத்துக்கு நானே அவர்களுக்கு பரிசுத்த இடமாயிருந்தேன்.’
௧௬ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.
17 “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்களை நான் மக்கள் கூட்டத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து உங்களை திரும்பவும் கொண்டுவந்து, மறுபடியும் இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்.’
௧௭ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
18 “அவர்கள் அங்கு திரும்பிவந்து இழிவான எல்லா உருவச்சிலைகளையும், வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அங்கிருந்து அகற்றிவிடுவார்கள்.
௧௮அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19 நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட உள்ளத்தைக் கொடுத்து, புதிய ஆவியையும் கொடுப்பேன். நான் அவர்களுடைய கல்லான இருதயத்தை நீக்கி, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.
௧௯அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20 அப்பொழுது அவர்கள் என் நீதிச்சட்டங்களைப் பின்பற்றி என் கட்டளைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
௨0அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.
21 ஆனால் இழிவான உருவச்சிலைகளையும் வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் பற்றியிருக்கிற இருதயம் உடையவர்களையோ, அவர்களுடைய நடத்தையின் பலனை, அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
௨௧ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் அருகிலிருந்த சக்கரங்களோடு இறகுகளை விரித்தன. இஸ்ரயேலின் இறைவனின் மகிமை அவற்றிற்கு மேலாக இருந்தது.
௨௨அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23 யெகோவாவினுடைய மகிமை பட்டணத்திலிருந்து எழும்பி பட்டணத்தின் கிழக்கே இருந்த மலையில் போய் நின்றது.
௨௩யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24 இறைவனின் ஆவியானவர் எனக்களித்த தரிசனத்திலே, அவர் என்னை உயரத்தூக்கி, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் திருப்பிக் கொண்டுபோய்விட்டார். பின்பு நான் கண்ட தரிசனம் என்னைவிட்டு மேலே போய்விட்டது.
௨௪பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுக்கப்பட்டுப்போனது.
25 எனக்கு யெகோவா காட்டிய அனைத்தையும் நான், நாடுகடத்தப்பட்டிருந்தவர்களுக்குக் கூறினேன்.
௨௫யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.