< யாத்திராகமம் 34 >

1 மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன்.
யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
2 நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில்.
அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில்.
3 உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார்.
உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார்.
4 மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான்.
அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
5 அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார்.
யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார்.
6 அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர்.
யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.
7 ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார்.
ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.
8 உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான்.
மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
9 அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
10 அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள்.
௧0அதற்கு அவர்: “இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும்.
11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன்.
௧௧இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
12 நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள்.
௧௨நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும்.
13 நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி அழித்துவிடவேண்டும்.
௧௩அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
14 நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன்.
௧௪யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
15 “நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள்.
௧௫அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்;
16 நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள்.
௧௬அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.
17 “வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம்.
௧௭வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
18 “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்.
௧௮புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
19 “கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை.
௧௯கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
20 ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.
௨0கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
21 “ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும்.
௨௧ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.
22 “கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள்.
௨௨கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
23 ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும்.
௨௩வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்.
24 நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான்.
௨௪நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை.
25 “புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம்.
௨௫எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம்.
26 “உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
௨௬உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
27 அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார்.
௨௭பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார்.
28 அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார்.
௨௮அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
29 மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான்.
௨௯மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான்.
30 ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள்.
௩0ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள்.
31 ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான்.
௩௧மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான்.
32 அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான்.
௩௨பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
33 மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான்.
௩௩மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
34 ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது,
௩௪மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது,
35 இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.
௩௫இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

< யாத்திராகமம் 34 >