< யாத்திராகமம் 21 >
1 “நீ அவர்களுக்கு முன்பாக வைக்கவேண்டிய சட்டங்கள் இவையே:
௧மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டளைகள்:
2 “ஒரு எபிரெய அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கினால், அவன் ஆறு வருடங்கள் மட்டுமே உங்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஏழாம் வருடத்திலோ, எந்தவித பணத்தையும் கொடுக்காமல் அவன் விடுதலையாகிப் போகவேண்டும்.
௨“எபிரெயர்களில் ஒரு அடிமையை வாங்கினால், அவன் ஆறுவருடங்கள் வேலைசெய்து, ஏழாம் வருடத்திலே ஒன்றும் தராமல் விடுதலைப்பெற்றுப் போகவேண்டும்.
3 அவன் தனிமையாய் வந்திருந்தால், தனிமையாகவே விடுதலையாகிப் போகவேண்டும். அவன் வருகிறபோது அவனுக்கு ஒரு மனைவியிருந்தால், அவளும் அவனோடுகூடப் போகவேண்டும்.
௩தனியாக வந்திருந்தால், தனியாகப்போகவேண்டும்; திருமணம் செய்தவனாக வந்திருந்தால், அவன் மனைவி அவனுடன் போகவேண்டும்.
4 ஒரு எஜமான் தனது அடிமைக்கு ஒரு பெண்ணை மனைவியாகக் கொடுத்து, அவள் அவனுக்கு மகன்களையும் மகள்களையும் பெற்றிருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கே சொந்தம். அந்த மனிதன் மட்டுமே விடுதலையாகிப் போகவேண்டும்.
௪அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும்.
5 “ஆனால் அந்த அடிமையோ, ‘நான் என் எஜமானையும் என் மனைவியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். அதனால் விடுதலையாகிப்போக நான் விரும்பவில்லை’ என்று அறிவித்தால்,
௫அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால்,
6 அவனுடைய எஜமான் அவனை நீதிபதிகளின் முன்பாக கொண்டுபோக வேண்டும். அவன் இவனை கதவின் அருகேயோ அல்லது கதவு நிலையின் அருகேயோ கொண்டுபோய் ஒரு குத்தூசியினால் அவன் காதைத் துளையிடவேண்டும். அதன்பின் அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
௬அவனுடைய எஜமான் அவனை நியாயாதிபதிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகிலாவது கதவுநிலையின் அருகிலாவது சேரச்செய்து, அங்கே அவனுடைய எஜமான் அவனுடைய காதைக் கம்பியினால் குத்தவேண்டும்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடம் வேலைசெய்துகொண்டிருக்கவேண்டும்.
7 “ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஆண் அடிமைகள் போவதுபோல் அவள் போகக்கூடாது.
௭“ஒருவன் தன்னுடைய மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
8 எஜமான் அவளை தனக்காக தெரிந்தெடுத்திருந்து, அவள் அவனைப் பிரியப்படுத்தாதவளாய்க் காணப்பட்டால், அவள் மீட்கப்பட அவன் அனுமதிக்கவேண்டும். அவளை பிறநாட்டினனுக்கு விற்பதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் அவன் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளான்.
௮அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாகப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்செய்து, அவளை அந்நியர்கள் கையில் விற்க அவனுக்கு அதிகாரம் இல்லை.
9 அவன் அவளைத் தன் மகனுக்குத் தெரிந்தெடுத்திருந்தால், அவளுக்கு ஒரு மகளுக்குரிய உரிமைகளைக் கொடுக்கவேண்டும்.
௯அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும்.
10 எஜமான் இன்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால், முதல் பெண்ணுக்கும் உரிய உடை, உணவு, திருமண உரிமைகள் ஆகியவற்றைக் கொடுக்காமல் விடக்கூடாது.
௧0அவன் வேறொரு பெண்ணைத் தனக்கென்று நியமித்தால், இவளுக்குரிய உணவு, உடை, திருமண உரிமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருக்கவேண்டும்.
11 அம்மூன்றையும் எஜமான் அவளுக்குக் கொடுக்காவிட்டால், அவள் அவனுக்குப் பணம் ஒன்றும் கொடுக்காமல் விடுதலையாகிப்போகலாம்.
௧௧இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும்.
12 “ஒரு மனிதனை அடித்துக் கொலை செய்கிறவன் நிச்சயமாக கொலைசெய்யப்பட வேண்டும்.
௧௨“ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும்.
13 ஆனாலும், அவன் அதைத் திட்டமிட்டுச் செய்யாமல், அது நடைபெற இறைவன் இடங்கொடுத்திருந்தால், நான் நியமிக்கப்போகிற ஒரு இடத்திற்கு அவன் ஓடிப்போய் தப்பித்துக்கொள்ளவேண்டும்.
௧௩ஒருவன் மறைந்திருந்து கொல்லாமல், தேவசெயலாகத் தன்னுடைய கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை உனக்கு நியமிப்பேன்.
14 ஒருவன் சதிசெய்து இன்னொருவனைக் கொலை செய்தால், அவன் என் பலிபீடத்திலிருந்தாலும் அவனைக் கொண்டுபோய் கொலைசெய்யவேண்டும்.
௧௪ஒருவன் பிறனுக்கு விரோதமாக சதிமோசம்செய்து, அவனைத் துணிகரமாகக் கொன்றுபோட்டால், அவனை என்னுடைய பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
15 “தன் தகப்பனையோ தாயையோ தாக்குகிறவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
௧௫“தன்னுடைய தகப்பனையாவது தன்னுடைய தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
16 “ஒருவன் இன்னொருவனைக் கடத்திச்சென்று அவனை விற்றாலோ அல்லது அவனைத் தன்னுடன் வைத்திருந்ததாலோ, கடத்திச்சென்றவன் பிடிக்கப்படும்பொழுது கொல்லப்படவேண்டும்.
௧௬“ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
17 “தன் தகப்பனையோ, தன் தாயையோ சபிப்பவன் கொல்லப்படவேண்டும்.
௧௭“தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
18 “மனிதர் வாக்குவாதம் செய்து, ஒருவன் மற்றவனைக் கல்லாலோ அல்லது தன் கருவியினாலோ அடித்ததினால் அவன் சாகாமல் படுக்கையாகவே இருந்து,
௧௮“மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததினாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து,
19 பின்பு எழுந்திருந்து ஒரு கோலை ஊன்றியாவது நடமாடமுடியுமானால், அவனை அடித்தவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான். ஆனாலும் அவன், காயப்பட்டவனுக்கு வேலைசெய்ய முடியாத காலத்திற்குரிய இழந்துபோன கூலியைச் செலுத்தவேண்டும். அவன் முற்றிலும் குணப்படும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
௧௯திரும்ப எழுந்து வெளியிலே தன்னுடைய ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் தண்டனைக்கு விலகியிருப்பான்; ஆனாலும் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து, அவனை நன்றாகக் குணமாக்கவேண்டும்.
20 “ஒரு மனிதன் தன் ஆண் அடிமையை அல்லது பெண் அடிமையை கோலினால் அடித்து, அதனால் அந்த அடிமை இறந்தால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.
௨0“ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
21 ஆனால் அடிபட்ட அடிமை ஓரிரு நாட்களில் எழுந்திருந்தால், எஜமான் தண்டிக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அடிமை எஜமானின் உடைமை.
௨௧ஒரு நாளாவது இரண்டு நாட்களாவது உயிரோடு இருந்தால், அவர்கள் அவனுக்கு உரியவனாக இருப்பதால், பழிவாங்கவேண்டியதில்லை.
22 “மனிதர் சண்டையிடுகிறபொழுது கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததினால், பெரியகாயமேதுமில்லாமல் அவளுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டால், அடித்தவனிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். அவளுடைய கணவன் கேட்கும் பணத்தைக் கருத்திற்கொண்டு, நீதிமன்றம் அனுமதிப்பதை அபராதமாகச் செலுத்தவேண்டும்.
௨௨“மனிதர்கள் சண்டையிட்டு, கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததால், அவளுக்கு வேறு சேதமில்லாமல் கர்ப்பம் கலைந்துபோனால், அடிபட்ட பெண்ணின் கணவன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தகுந்தபடியும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் அபராதம் கொடுக்கவேண்டும்.
23 அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும்.
௨௩வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
௨௪கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
25 சூட்டுக்குப் பதில் சூடும், காயத்துக்குப்பதில் காயமும், தழும்புக்குப்பதில் தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.
௨௫சூட்டுக்குச் சூடு, காயத்திற்குக் காயம், தழும்புக்குத் தழும்பு கொடுக்கவேண்டும்.
26 “ஒரு மனிதன் தன் ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ கண்ணில் அடித்து அழித்துப்போட்டால், அக்கண்ணின் இழப்பை ஈடுசெய்வதற்கு அவர்களை அவன் விடுதலை செய்யவேண்டும்.
௨௬“ஒருவன் தன்னுடைய அடிமையின் கண்ணையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் கண்ணையோ அடித்து அதைக் கெடுத்தால், அவனுடைய கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்யவேண்டும்.
27 ஆண் அடிமையின் பல்லையோ அல்லது பெண் அடிமையின் பல்லையோ அவன் அடித்து உடைத்தால், பல்லுக்கு இழப்பீடாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
௨௭அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும்.
28 “ஒரு மனிதனையோ அல்லது ஒரு பெண்ணையோ, ஒரு எருது தன் கொம்பினால் குத்திக்கொன்றால், அந்த எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். அதன் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. எருதின் உரிமையாளன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான்.
௨௮“ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான்.
29 ஆனாலும் அந்த எருது வழக்கமாக முட்டுகிறதாயிருந்து, அவனுக்கு அதைக்குறித்து எச்சரித்திருந்தும், அவன் அதைக் கட்டிவைக்காததினால் அது ஒரு மனிதனையோ, பெண்ணையோ முட்டிக்கொன்றால், எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். எருதின் உரிமையாளனும் கொல்லப்படவேண்டும்.
௨௯தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.
30 ஆனாலும் அபராதம் கொடுக்கும்படி அவன் கேட்கப்பட்டால், கேட்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தித் தன் உயிரை மீட்டுக்கொள்ளலாம்.
௩0அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும்.
31 ஒருவனுடைய மகனையோ, மகளையோ எருது குத்திக்கொன்றால் அதற்குரிய சட்டமும் இதுவே:
௩௧அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
32 அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ குத்தினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்.
௩௨அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
33 “ஒரு மனிதன் ஒரு குழியைத் திறந்துவைத்ததாலோ அல்லது ஒரு குழியைவெட்டி அதை மூடுவதற்கு தவறியதாலோ, ஒரு எருது அல்லது கழுதை அதற்குள் விழுந்தால்,
௩௩“ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததாலோ, ஒரு குழியை வெட்டி அதை மூடாமல் போனதாலோ, அதிலே ஒரு மாடோ ஒரு கழுதையோ விழுந்தால்,
34 குழிக்குரியவன் செத்தப்போன மிருகத்துக்கு இழப்பீட்டை, அந்த மிருகத்தின் உரிமையாளனுக்கு கொடுக்கவேண்டும். செத்தப்போன மிருகமோ குழிக்குரியவனுடையதாகும்.
௩௪குழிக்கு உரியவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தினுடைய எஜமானுக்குக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
35 “ஒரு மனிதனுடைய எருது, மற்றவனுடைய எருதைக் காயப்படுத்துவதினால் அது இறந்தால், உயிரோடிருக்கிற எருதை விற்று, பணத்தை இருவரும் பங்கிடவேண்டும். செத்தப்போன எருதையும் சமமாகப் பங்கிடவேண்டும்.
௩௫“ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.
36 ஆனாலும் அது வழக்கமாக முட்டுகிற எருது என்று உரிமையாளன் அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்ததால், உரிமையாளன் எருதுக்கு எருது கொடுக்கவேண்டும். செத்தப்போன எருதோ தண்டம் செலுத்தியவனுக்குரியதாகும்.
௩௬அந்த மாடு முன்பே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்தும், அதைக் கட்டிவைக்காமல் இருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.