< யாத்திராகமம் 2 >
1 லேவி வம்சத்திலுள்ள ஒரு மனிதன் ஒரு லேவியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான்.
௧லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான்.
2 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அவன் ஒரு அழகான குழந்தையென அவள் கண்டபோது, அவனை மூன்று மாதங்களாக ஒளித்து வைத்தாள்.
௨அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
3 ஆனால் அதற்கு மேலும் அவனை மறைத்துவைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் பெட்டியை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசினாள். குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
௩அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
4 அந்த குழந்தையின் சகோதரி அதற்கு என்ன நடக்குமென அறியும்படி, தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
௪அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
5 அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள்.
௫அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள்.
6 அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது, அவள் அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டாள். அவள், “இது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள்.
௬அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள்.
7 அந்நேரத்தில் அங்கு வந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பால்கொடுத்து வளர்க்க, எபிரெயப் பெண்களில் ஒருத்தியை போய்க்கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
௭அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள்.
8 அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அவள் உடனேபோய் குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
௮அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
9 பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் அவனைக் கொண்டுபோய்ப் பாலூட்டி வளர்த்தாள்.
௯பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
10 குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் ஒப்படைத்தாள்; அவன் அவளுடைய மகனானான். பார்வோனின் மகள் இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
௧0பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
11 மோசே வளர்ந்தபின் ஒரு நாள், தன் சொந்த எபிரெய மக்கள் இருக்கும் இடத்திற்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலைசெய்வதைப் பார்த்தான். அவன் தன் சொந்த மக்களில் ஒருவனான ஒரு எபிரெயனை ஒரு எகிப்தியன் அடிப்பதையும் கண்டான்.
௧௧மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
12 அவன் இங்கும் அங்கும் சுற்றி பார்த்துவிட்டு, ஒருவரையும் காணாததினால், அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்துவிட்டான்.
௧௨அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
13 மோசே மறுநாளும் வெளியே போனபோது, எபிரெயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டான். அப்பொழுது அவன் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனான எபிரெயனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான்.
௧௩அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான்.
14 அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல, என்னையும் கொல்ல நினைக்கிறாயோ?” என்று கேட்டான். மோசே, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று அறிந்து பயந்தான்.
௧௪அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
15 பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான்.
௧௫பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
16 மீதியானிலுள்ள ஒரு ஆசாரியருக்கு ஏழு மகள்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் தகப்பனின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி தண்ணீரை எடுத்துத் தொட்டிகளை நிரப்புவதற்காக அங்கே வந்தார்கள்.
௧௬மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.
17 அப்பொழுது சில மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோசே எழுந்துவந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுத்தான்.
௧௭அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18 அப்பெண்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுயேலிடம் வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான்.
௧௮அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான்.
19 அதற்கு அவர்கள், “எகிப்தியன் ஒருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றினான்; அவன் எங்களுக்காகத் தண்ணீரும் அள்ளி, எங்கள் மந்தைக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்றார்கள்.
௧௯அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
20 அப்பொழுது அவன் தன் மகள்களிடம், “அவன் எங்கே? ஏன் அவனை விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று கேட்டு, “ஏதாவது சாப்பிடும்படி அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான்.
௨0அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.
21 மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தான்; சிறிது காலத்தின்பின் அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்துகொடுத்தான்.
௨௧மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான்.
22 சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
௨௨அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
23 அந்த நீண்ட காலப்பகுதிக்குள் எகிப்திய அரசன் இறந்தான்; இஸ்ரயேலர் தங்கள் அடிமைத்தனத்தில் வேதனைப்பட்டுக் கதறினார்கள். தங்கள் அடிமைத்தனத்தின் நிமித்தம் உதவிவேண்டிய அவர்களுடைய அழுகுரல் இறைவனுக்கு எட்டியது.
௨௩சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24 இறைவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டார், ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
௨௪தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25 எனவே இறைவன் இஸ்ரயேலரின் பரிதாப நிலையைக் கண்டு, அவர்களைக் குறித்துக் கரிசனைகொண்டார்.
௨௫தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.