< எஸ்தர் 6 >

1 அன்று இரவு அரசனால் நித்திரை செய்ய முடியவில்லை, எனவே அவன் தனது அரசாட்சியின் நிகழ்வுகளின் பதிவேடாகிய வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டுவந்து தனக்கு வாசித்துக் காட்டும்படி கட்டளையிட்டான்.
அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
2 அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
3 அப்பொழுது அரசன், “இதற்காக என்ன கனமும், மதிப்பும் மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுடைய பணிவிடைக்காரர், “அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை” என்று சொன்னார்கள்.
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
4 அரசன், “முற்றத்தில் நிற்பது யார்?” என்று கேட்டான். அதேவேளையில் ஆமான் தான் நிறுத்தியிருந்த தூக்கு மரத்தில் மொர்தெகாயைத் தூக்கிலிடுவது பற்றிப் பேசுவதற்கு அரண்மனையின் வெளிமுற்றத்திற்குள் வந்திருந்தான்.
ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடம் பேசும்படி ராஜஅரண்மனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
5 அரசனின் ஏவலாட்கள், “முற்றத்தில் ஆமான் நின்று கொண்டிருக்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
6 ஆமான் வந்தபோது, அரசன் அவனிடம், “அரசன் கனம்பண்ண விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யப்படவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது ஆமான், “என்னைத்தவிர வேறு யாரை அரசன் கனம்பண்ண விரும்புவான்” என தனக்குள்ளே நினைத்தான்.
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனப்படுத்த விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து,
7 அதனால் ஆமான் அரசனிடம், “அரசன் கனம்பண்ண விரும்பும் மனிதனுக்கு செய்யப்பட வேண்டியதாவது:
ராஜாவை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு செய்யவேண்டியது என்னவென்றால்,
8 உமது பணிவிடைக்காரர் அரசர் அணியும் அரச உடையையும், தலையில் வைக்கப்பட்டிருக்கும் அரச கிரீடமும், அரசர் சவாரி செய்யும் குதிரையையும் கொண்டுவரட்டும்.
ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும்.
9 பின்பு அந்த உடையும், குதிரையும் மிக உயர்ந்த பிரபுக்களில் ஒருவருடைய கையில் கொடுக்கப்படட்டும். அரசர் கனம்பண்ணுகிற மனிதனுக்கு அவர்கள் அந்த உடையை அணிவித்து, அவனைக் குதிரையின்மேல் அமர்த்தி, பட்டணத்துத் தெருக்கள் எங்கும் வழிநடத்தட்டும். அப்பொழுது, ‘அரசர் கனம்பண்ணும் மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே’ என்று அவனுக்கு முன்பாகப் பிரசித்தப்படுத்தட்டும்” என்றான்.
அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
10 அப்பொழுது அரசன், “உடனடியாகப்போய் உடையையும், குதிரையையும் கொண்டுவந்து, நீ கூறியபடியே அரச வாசலில் இருக்கிற யூதனான மொர்தெகாய்க்குச் செய். நீ சிபாரிசு செய்த எதையும் செய்யாமல் விடவேண்டாம்” என்று ஆமானுக்குக் கட்டளையிட்டான்.
௧0அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
11 எனவே ஆமான் உடையையும், குதிரையையும் பெற்றுக்கொண்டு, மொர்தெகாய்க்கு உடையை உடுத்தி அவனைக் குதிரையில் அமர்த்தி, பட்டணத்தின் தெருக்களெங்கும் நடத்திக் கொண்டுபோனான். அவன், “அரசன் கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே” என்று அவனுக்கு முன்பாக அறிவித்தான்.
௧௧அப்படியே ஆமான் ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படிச்செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
12 அதன்பின் மொர்தெகாய் அரசனின் வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆமானோ துக்கத்துடன் தலை கவிழ்ந்து கொண்டு தன் வீட்டுக்கு விரைந்து சென்றான்.
௧௨பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான்.
13 ஆமான் தன் மனைவி சிரேஷிடமும், தன் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னான். அவனுடைய ஆலோசகர்களும், அவனுடைய மனைவி சிரேஷும் அவனிடம், “மொர்தெகாய்க்கு முன்பாக உமது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அவன் ஒரு யூத நாட்டைச் சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு விரோதமாக உம்மால் நிற்கமுடியாது. நீர் நிச்சயமாகவே வீழ்ச்சியடைவீர்” என்றார்கள்.
௧௩ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்.
14 அவர்கள் இன்னும் அவனுடன் பேசிக்கொண்டு நிற்கையில் அரசனின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் ஆயத்தப்படுத்தியிருந்த விருந்துக்கு ஆமானை விரைவாய் அழைத்துச் சென்றார்கள்.
௧௪அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்திற்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

< எஸ்தர் 6 >