< எஸ்தர் 5 >
1 மூன்றாம் நாளிலே எஸ்தர் தனது அரச உடைகளை உடுத்திக்கொண்டு அரசனின் மண்டபத்துக்கு முன்பாக அரண்மனையின் உள்முற்றத்தில் நின்றாள். அரசன் வாசலை நோக்கியபடி மண்டபத்திலுள்ள அரச அரியணையில் அமர்ந்திருந்தான்.
௧மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான்.
2 அரசி எஸ்தர் உள்முற்றத்தில் நிற்பதை அவன் கண்டபோது, அவள்மேல் மகிழ்ச்சிகொண்டு தன்னுடைய கையிலிருந்த தங்கச் செங்கோலை அவளை நோக்கி நீட்டினான். எனவே எஸ்தர் கிட்டப்போய் அந்த செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
௨ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
3 அப்பொழுது அரசன் அவளிடம், “எஸ்தர் அரசியே, என்ன வேண்டும்? உனது வேண்டுகோள் என்ன? அரசில் பாதியாயிருந்தாலுங்கூட அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.
௩ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
4 அதற்கு எஸ்தர், “அரசருக்கு அது பிரியமாயிருந்தால், நான் அரசருக்காக ஆயத்தம் செய்திருக்கிற விருந்துக்கு அரசர் இன்று ஆமானையும் கூட்டிக்கொண்டு வருவாராக” என்றாள்.
௪அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
5 அப்பொழுது அரசன், “எஸ்தர் கேட்டதை நாம் செய்யும்படி, ஆமானை உடனடியாக அழைத்து வாருங்கள்” என்றான். அப்படியே, எஸ்தர் ஆயத்தப்படுத்தியிருந்த விருந்துக்கு, அரசனும் ஆமானும் போனார்கள்.
௫அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
6 அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அரசன் திரும்பவும் எஸ்தரிடம், “இப்பொழுது உன் விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உன் வேண்டுகோள் என்ன? அது அரசின் பாதியாயிருந்தாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.
௬விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
7 அப்பொழுது எஸ்தர், “எனது விண்ணப்பமும், எனது வேண்டுகோளும் இதுதான்:
௭அதற்கு எஸ்தர் மறுமொழியாக:
8 அரசர் எனக்குத் தயவு காண்பித்து, எனது விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கும், எனது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கும் விருப்பமுடையவராக இருந்தால், அரசரும் ஆமானும் நான் நாளைக்கும் ஆயத்தம் செய்யப்போகிற விருந்துக்கு வருவார்களாக. அப்பொழுது நான் அரசனின் கேள்விக்குப் பதிலளிப்பேன்” என்றாள்.
௮ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்திற்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
9 அந்த நாளில் ஆமான் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் புறப்பட்டுப் போனான். ஆனால் அரசரின் வாசலில் இருந்த மொர்தெகாயைக் கண்டு, மொர்தெகாய் தனக்கு முன்பாக எழுந்திராமலும், தனக்குப் பயப்படாமலும் இருந்ததை கவனித்தபோது, அவன் மொர்தெகாய்க்கு விரோதமாக கடுங்கோபம் கொண்டான்.
௯அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான்.
10 ஆயினும், ஆமான் தன்னை அடக்கிக்கொண்டு, வீட்டுக்குப் போனான். அவன் தனது நண்பர்களையும், தன் மனைவி சிரேஷையும் கூடிவரச் செய்தான்.
௧0ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
11 ஆமான் அவர்களிடம் தனது மிகுந்த செல்வத்தைக் குறித்தும், தனது மகன்களைக் குறித்தும், அரசன் தன்னைக் கனப்படுத்திய எல்லா விதங்களைப் பற்றியும், அவர் எவ்விதமாய் தன்னை மற்ற உயர்குடி மனிதருக்கும் அதிகாரிகளுக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறார் என்பது பற்றியும் பெருமையாய் பேசினான்.
௧௧தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
12 ஆமான் தொடர்ந்து, “இதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் கொடுத்த விருந்துக்கு அரசனுடன் சேர்ந்து போவதற்கு அவள் அழைத்த ஒரே ஆள் நான் மட்டுமே. அவள் நாளைக்கும் அரசருடன் என்னை அழைத்திருக்கிறாள்.
௧௨பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்திற்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
13 ஆயினும் அரச வாசலில் இருக்கும் யூதனான அந்த மொர்தெகாயைக் காணும்போது, இது எல்லாம் எனக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை” என்றான்.
௧௩ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
14 அவனுடைய மனைவி சிரேஷும், அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரத்தைச் செய்து, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கிலிடும்படி, அரசனிடம் கேட்டுக்கொள்ளும். பின்பு அரசனுடன் விருந்துக்குப் போய் சந்தோஷமாய் இரும்” என்றார்கள். இந்த யோசனை ஆமானுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் தூக்கு மரத்தைச் செய்துவைத்தான்.
௧௪அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான்.