< எஸ்தர் 1 >
1 அகாஸ்வேரு அரசனின் காலத்தில் நிகழ்ந்தது இதுவே: இந்த அகாஸ்வேரு இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை பரந்திருந்த நூற்றிருபத்தேழு மாகாணங்களை ஆளுகை செய்தான்.
௧இந்திய தேசம் முதல் கூஷ் தேசம்வரையுள்ள 127 நாடுகளையும் அரசாட்சி செய்த அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
2 அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன் சூசான் கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான்.
௨ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரண்மனையில் இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்தின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்தான்.
3 அவன் தனது ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் தனது உயர்குடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்தொன்றைக் கொடுத்தான். அதற்கு பெர்சியா, மேதியா ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்களும், இளவரசர்களும், மாகாணங்களின் உயர்குடி மக்களும் வந்திருந்தார்கள்.
௩அவனுடைய அரசாட்சியின் மூன்றாம் வருடத்திலே தன்னுடைய அதிகாரிகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் விருந்தளித்தான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் ஆளுனர்களும், பிரபுக்களும், அவனுடைய சமுகத்தில் வந்திருந்தார்கள்.
4 நூற்றெண்பது நாட்களாக அவன் தனது அரசின் திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும் மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான்.
௪அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.
5 இந்த நாட்கள் முடிவடைந்தபின், அரச அரண்மனையில் சுற்றிலும் அடைக்கப்பட்ட தோட்டத்தில், ஒரு விருந்தைக் கொடுத்தான். அது ஏழுநாட்களுக்கு நீடித்தது. சூசான் கோட்டைப் பட்டணத்தில் இருந்த சிறியோர் பெரியோரான சகல மக்களையும் அதற்கு அழைத்திருந்தான்.
௫அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான்.
6 அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
௬அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
7 திராட்சை இரசம், பல்வேறு வகையான தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அரசனுடைய தாராள மனதின்படியே அரசருக்குரிய திராட்சை இரசம் நிறைவாயிருந்தது.
௭பொன்னால் செய்யப்பட்ட பலவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சைரசம் ராஜாவின் கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு பரிபூரணமாகப் பரிமாறப்பட்டது.
8 அரசனுடைய கட்டளைப்படியே எல்லா விருந்தாளிகளும் தாங்கள் விரும்பியபடி குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அரசன் தனது திராட்சை இரசப் பொறுப்பாளர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு மனிதனும் கேட்கும் அளவு திராட்சை இரசத்தைப் பரிமாறும்படி அறிவுறுத்தியிருந்தான்.
௮அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை.
9 அகாஸ்வேருவின் அரச அரண்மனையில் இருந்த பெண்களுக்கு அரசி வஸ்தி, தானும் ஒரு விருந்தைக் கொடுத்தாள்.
௯ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள்.
10 ஏழாம்நாளில் அகாஸ்வேரு அரசன் திராட்சை மதுவினால் களிப்புற்றிருக்கும் போது, தனக்குப் பணிசெய்த மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டு,
௧0ஏழாம் நாளிலே ராஜா திராட்சைரசத்தினால் சந்தோஷமாக இருக்கும்போது, பேரழகியாயிருந்த ராணியாகிய வஸ்தியின் அழகை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காண்பிப்பதற்காக, ராஜகிரீடம் அணிந்தவளாக, அவளைத் தனக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
11 “அரசி வஸ்தியின் அழகை மக்களுக்கும், உயர்குடி மனிதருக்கும் காண்பிக்கும்படி, அவளுக்கு அரச கிரீடமும் அணிவித்து எனக்குமுன் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். ஏனெனில் அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகுள்ளவளாக இருந்தாள்.
௧௧ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் பணிவிடை செய்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் ராஜா கட்டளையிட்டான்.
12 ஆனால், அந்த ஏவலாளர்கள் அரசனுடைய கட்டளையை அறிவித்தபோது, அரசி வஸ்தி வருவதற்கு மறுத்துவிட்டாள். இதனால் அரசன் சினங்கொண்டான். அவனுடைய கோபம் பற்றியெரிந்தது.
௧௨ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராணியாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே எரிச்சல் அடைந்தான்.
13 சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான்.
௧௩அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள்.
14 மேலும் அரசன் தனக்கு மிகவும் நெருங்கியவர்களாயிருந்த பெர்சிய, மேதிய நாடுகளின் ஏழு இளவரசர்களான மர்சேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோருடனும் பேசினான். இவர்கள் அரசனிடம் செல்வதற்கு விசேஷ அனுமதியுடையவர்களாகவும், அரசில் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
௧௪ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடம் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால செயல்பாடுகளை அறிந்த பண்டிதர்களை நோக்கி:
15 அகாஸ்வேரு அரசன், “அதிகாரிகள் அவளுக்கு அறிவித்திருந்த அரச கட்டளைக்கு அவள் கீழ்ப்படியவில்லை. ஆகவே சட்டத்தின்படி அரசி வஸ்திக்கு என்ன செய்யப்படவேண்டும்?” என்று கேட்டான்.
௧௫ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
16 அப்பொழுது மெமுகான் அரசனுக்கும், உயர்குடி மனிதருக்கும் முன்னிலையில், “அரசி வஸ்தி அரசனுக்கு மட்டுமல்ல, உயர்குடி மனிதருக்கும், அகாஸ்வேரு அரசனுடைய எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்கும் எதிராக அநியாயம் செய்திருக்கிறாள்.
௧௬அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள்.
17 அரசியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். எனவே அவர்கள் தங்கள் கணவர்களை உதாசீனம் செய்வார்கள். அதோடு, ‘அகாஸ்வேரு அரசன், அரசி வஸ்தியைத் தமக்கு முன்வரும்படி கட்டளையிட்டும் அவள் வரவில்லை’ என்றும் சொல்வார்கள்.
௧௭ராஜாவாகிய அகாஸ்வேரு ராணியாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டேன் என்று சொன்ன செய்தி எல்லாப் பெண்களுக்கும் தெரியவந்தால், அவர்களும் தங்களுடைய கணவன்களைத் தங்களுடைய பார்வையில் அற்பமாக நினைப்பார்கள்.
18 இந்த நாளிலேயே அரசியினுடைய நடத்தையைக் கேள்விப்பட்டிருக்கிற பெர்சிய, மேதிய நாட்டின் உயர்குலப் பெண்களும் இதேவிதமாகவே அரசனின் உயர்குடி மனிதர் எல்லோருடனும் நடந்துகொள்வார்கள். அவமதிப்புக்கும் எரிச்சலுக்கும் முடிவிருக்காது.
௧௮இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் பெண்கள் ராணியின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும்.
19 “ஆகவே அரசருக்கு விருப்பமானால், வஸ்தி இனியொருபோதும் அரசன் அகாஸ்வேருவின் முன்பாக வரக்கூடாது என்று அரச கட்டளையை அறிவிப்பாராக. அதை மாற்றப்பட முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களிலும் எழுதி வைப்பாராக. அத்துடன் அவளைவிட மேலான ஒருத்திக்கு அவளுடைய அரச பதவியைக் கொடுப்பாராக.
௧௯ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைவிட சிறந்த மற்றொரு பெண்ணுக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை அனுப்பி, அது மீறப்படாதபடி, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசத்தின் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்.
20 அவ்வாறு அரச கட்டளை அவருடைய பரந்த பிரதேசம் எங்கும் அறிவிக்கப்படும்போது, எல்லா பெண்களும், சிறியோரிலிருந்து பெரியோர்வரை தங்கள் கணவனை மதிப்பார்கள்” என்றான்.
௨0இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான்.
21 அரசனுக்கும், அவனுடைய உயர்குடி மனிதருக்கும் இந்த ஆலோசனை பிரியமாயிருந்தது. எனவே மெமுகான் சொன்ன ஆலோசனையின்படியே அரசன் செய்தான்.
௨௧இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
22 அப்படியே அவன் தனது அரசின் எல்லாப் பகுதிகளுக்கும், “ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தின்மேல் தலைவனாயிருக்க வேண்டும்” என்று கடிதங்களைத் துரிதமாய் அனுப்பினான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதற்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய சொந்த மொழியிலும் எழுதி அவர்களுக்கு அறிவித்தான்.
௨௨எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.