< பிரசங்கி 9 >

1 ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான்.
இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான்.
2 நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடக்கும்; நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், நல்லகுணமும் சுத்தமும் உள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாக நடக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாக நடக்கும்.
3 சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள்.
எல்லோருக்கும் ஒரேவிதமாக நடக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீமை ஆகும்; ஆதலால் மனுமக்களின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாள்வரை அவர்களுடைய இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் மரித்து, இறந்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.
4 உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது!
இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது.
5 உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும்.
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது.
6 அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை.
அவர்களுடைய அன்பும், அவர்களுடைய பகையும், அவர்களுடைய பொறாமையும் ஒழிந்துபோனது; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறது ஒன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கு இல்லை.
7 நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார்.
நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார்.
8 எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு.
உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக.
9 சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே.
சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.
10 செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol h7585)
௧0செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol h7585)
11 சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன.
௧௧நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
12 அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன.
௧௨தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
13 சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன்.
௧௩சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது.
14 ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான்.
௧௪ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான்.
15 அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை.
௧௫அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.
16 ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன்.
௧௬ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன்.
17 மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும்.
௧௭மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள்.
18 போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.
௧௮யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

< பிரசங்கி 9 >