< பிரசங்கி 5 >
1 இறைவனின் ஆலயத்திற்குச் செல்லும்போது, உன் நடையில் கவனமாய் இரு. மூடரைப் போல பலி செலுத்துவதைவிட, செவிகொடுத்துக் கேட்க அங்கு போ; ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்கிறது தவறு என்று அறியாதிருக்கிறார்கள்.
௧நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள்.
2 இறைவனுக்குமுன் எதையாவது சொல்வதற்கு உன் இருதயத்தில் அவசரப்பட்டு, உன் வாயை விரைவாய்த் திறவாதே. இறைவன் பரலோகத்தில் இருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்; எனவே உன் வார்த்தைகள் அளவாய் இருக்கட்டும்.
௨தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக.
3 அதிக கவலைகள் மிகுதியாகும்போது, கனவு வருவதுபோல, சொற்கள் மிகுதியானால் மூடத்தனம் வெளிப்படும்.
௩தொல்லையின் மிகுதியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் மிகுதியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
4 இறைவனுக்கு நீ நேர்ந்ததை நிறைவேற்றத் தாமதியாதே. இறைவன் மூடரில் பிரியமாயிருப்பதில்லை; உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று.
௪நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்.
5 நேர்த்திக்கடனைச் செய்து, அதை நிறைவேற்றாமல் விடுவதைவிட, நேர்த்திக்கடன் செய்யாமல் இருப்பது மிக நல்லது.
௫நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம்.
6 உன்னை பாவத்திற்குள் வழிநடத்த உன் வாய்க்கு இடங்கொடாதே. ஆலய தூதனுக்கு முன்பாக, “எனது நேர்த்திக்கடன் தவறுதலாகச் செய்யப்பட்டது” என்று மறுத்துச் சொல்லாதே. இறைவன் நீ சொல்வதைக் கேட்டு கோபப்பட்டு, அவர் உன் கையின் வேலையை ஏன் அழித்துப் போடவேண்டும்?
௬உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்?
7 அதிக கனவும், அதிக வார்த்தைகளும் அர்த்தமற்றவை. எனவே இறைவனுக்குமுன் பயந்திரு.
௭அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
8 எந்த மாகாணத்திலாவது ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நீதியும் உரிமைகளும் மறுக்கப்படுவதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; ஏனெனில் ஒரு அதிகாரியை ஒடுக்கி ஆதாயம் பெற அவனுக்கு மேற்பட்ட அதிகாரி காத்திருக்கிறான். அவர்கள் இருவருக்கும் மேலாக இன்னும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
௮ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாக இருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.
9 நிலத்திலிருந்து பெறப்படும் இவர்களுடைய விளைச்சலை எல்லோரும் எடுத்துக்கொள்கிறார்கள்; அரசனுங்கூட வயல்வெளிகளிலிருந்தே ஆதாயம் பெறுகிறான்.
௯பூமியில் விளையும் பலன் எல்லோருக்கும் உரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.
10 பணத்தில் ஆசைகொள்கிற எவனுக்கும் தனக்கு இருக்கும் பணம் ஒருபோதும் போதுமானதாயிராது; செல்வத்தில் ஆசைகொள்கிற எவனும் தன் வருமானத்தில் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை; இதுவும்கூட அர்த்தமற்றதே.
௧0பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
11 பொருள்கள் அதிகரிக்கிறபோது, அதைப் பயன்படுத்துவோரும் அதிகரிக்கிறார்கள். அவற்றைத் தமது கண்களால் பார்த்து மகிழ்வதைத் தவிர, எஜமானனுக்கு வேறு என்ன பயன்?
௧௧பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன?
12 தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும், அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும். ஆனால் பணக்காரனின் நிறைவோ அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை.
௧௨வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது.
13 சூரியனுக்குக் கீழே பெருந்தீமை ஒன்றை நான் கண்டேன்: அதாவது, செல்வம் தன் எஜமானனுக்கே கேடுண்டாகும்படி சேர்த்து வைக்கப்படுவதும்,
௧௩சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
14 அவல நிகழ்வினால் அந்தச் செல்வம் தொலைந்துபோகிறதுமே. அதினால் அந்த எஜமானனுக்கு ஒரு மகன் இருந்தும் அவனுக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமிருப்பதில்லை.
௧௪அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை.
15 மனிதன் தன் தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணியாய் வருகிறான்; வருவதுபோலவே போகிறான். அவன் தன் உழைப்பிலிருந்து தன் கைகளில் ஒன்றும் எடுத்துக் கொண்டுபோவதில்லை.
௧௫தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
16 இதுவும் ஒரு கொடுமையான தீமையே: மனிதன் தான் வருவதுபோலவே புறப்பட்டுப் போகிறான்; இதினால் அவன் பெறுவது என்ன? அவனுடைய கஷ்ட உழைப்பும் வீணே.
௧௬அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன?
17 அவன் தனது வாழ்நாட்களில் விரக்தியுடனும், நோயுடனும், கோபத்துடனும், இருளில் சாப்பிடுகிறான்.
௧௭அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான்.
18 ஆகவே ஒரு மனிதன் சாப்பிட்டுக் குடித்து சூரியனுக்குக் கீழே தனது கடும் உழைப்பில் திருப்தி காண்பதே நல்லது என நான் கண்டேன்; இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் குறுகிய வாழ்நாள் காலத்தில் இது தகுதியானது. ஏனெனில் இதுவே அவன் பங்கு.
௧௮இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
19 மேலும் இறைவன் எவனுக்காவது செல்வத்தையும், சொத்தையும் கொடுத்து, அத்துடன் அவற்றை அனுபவிக்கவும், தன் பங்கை ஏற்றுக்கொண்டு தன் உழைப்பில் மகிழ்ச்சியாய் இருக்கவும் செய்வது இறைவனின் ஒரு கொடையே.
௧௯தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.
20 இறைவன் அவனுடைய இருதயத்தை மகிழ்ச்சியின் எண்ணங்களால் நிரப்பியிருப்பதினால், அவன் தனது வாழ்நாட்கள் கடந்துபோவதைக் குறித்து நினைப்பதில்லை.
௨0அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.