< பிரசங்கி 4 >
1 மீண்டும் நான் பார்த்தபோது: சூரியனுக்குக் கீழே அநேக ஒடுக்குதல்களைக் கண்டேன். ஒடுக்கப்படுகிறவர்களின் கண்ணீரையும், அவர்களை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதிருப்பதையும் கண்டேன்; அவர்களை ஒடுக்குவோரின் பக்கத்திலேயே வல்லமை இருந்தது, அவர்களை ஆறுதல்படுத்த யாருமே இல்லை.
௧இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுபவர்கள் இல்லை; ஒடுக்குகிறவர்களிடம் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுபவர்கள் இல்லை.
2 ஆதலால் இன்னும் உயிரோடிருந்து வாழ்கிறவர்களைப் பார்க்கிலும், ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன்.
௨ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
3 இவ்விரு கூட்டத்தினரைவிட, இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள். அவர்கள் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீமையைக் காணவில்லையே.
௩இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே.
4 தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
௪மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.
5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறான்.
௫மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
6 காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால், இரு கைகளையும் நிரப்புவதைவிட, மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது.
௬வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.
7 சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்:
௭பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.
8 தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை. அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை. ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை. அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான். இதுவும் அர்த்தமற்றதும், அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது.
௮ஒருவன் தனிமையாக இருக்கிறான்; அவனுக்கு யாருமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்திற்கு முடிவில்லை; அவனுடைய கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அனுபவிக்காமல் யாருக்காக பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.
9 தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள்.
௯தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.
10 ஒருவன் விழுந்தால், அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும். ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ, பரிதாபத்திற்குரியவன்.
௧0ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.
11 அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால், தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும்.
௧௧இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
12 ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்; ஆனால் இருவராய் இருந்தால் அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள். முப்புரிக்கயிறு விரைவில் அறாது.
௧௨ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.
13 எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன்.
௧௩இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன்.
14 அந்த வாலிபன் சிறையில் இருந்து அரச பதவிக்கு உயர்ந்திருக்கலாம். அல்லது தனது ஆட்சிக்குரிய பிரதேசத்தில் ஏழ்மையில் பிறந்திருக்கலாம்.
௧௪அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு.
15 சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன்.
௧௫சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
16 அப்படி அவனைப் பின்பற்றுகிற மக்களுக்கு முடிவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த சந்ததியோ புதிதாக ஆட்சிக்கு வந்தவனில் பிரியப்படவில்லை. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
௧௬அவர்களுக்குமுன்பு அப்படிச் செய்த மக்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமுமாகவும் இருக்கிறது.