< பிரசங்கி 10 >
1 செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும்.
௧செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும்.
2 ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது.
௨ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.
3 ஒரு மூடன் வீதியில் போகும்போதே, புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும் தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான்.
௩மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.
4 ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீ உன் பதவியைவிட்டு விலகாதே; நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும்.
௪அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.
5 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது.
௫நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே.
6 மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள்.
௬மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
7 அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.
௭வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன்.
8 குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும்.
௮படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
9 கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம்.
௯கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான்.
10 ஒரு கோடரி மழுங்கிப் போய் அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால், அதிக பலம் வேண்டியிருக்கும். ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும்.
௧0இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம்.
11 ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை.
௧௧தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன்.
12 ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான்.
௧௨ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.
13 அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை.
௧௩அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும்.
14 மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். ஒரு மனிதனும் வரப்போவதை அறியான். அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்?
௧௪மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
15 மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது.
௧௫ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும்.
16 அடிமையை அரசனாகவும் விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ!
௧௬ராஜா சிறுபிள்ளையுமாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ,
17 உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.
௧௭ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது.
18 சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும்.
௧௮மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும்.
19 மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே.
௧௯விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
20 உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம், சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம்.
௨0ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.