< உபாகமம் 9 >
1 இஸ்ரயேலரே, கேளுங்கள்: இப்பொழுது நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்களைவிட அதிகமானவர்களும் வலிமையானவர்களுமான நாடுகளைத் துரத்திவிடப் போகிறீர்கள். அவர்கள் வானத்தை எட்டும் மதில்களையுடைய பெரிய பட்டணங்களில் வாழ்கிறார்கள்.
2 அந்த மக்கள் வலிமையும் உயரமுமான அரக்கர்கள்! நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள்: “ஏனாக்கியருக்கு எதிராக யாரால் நிற்கமுடியும்?” என்று அவர்களைக்குறித்து சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் இருக்கிறீர்கள்.
3 ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு முன்பாக சுட்டெரிக்கும் நெருப்பைப்போல் போகிறவர் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். அவர் அவர்களை அழிப்பார்; உங்களுக்கு முன்பாக அவர்களைக் கீழ்ப்படுத்துவார். யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியது போலவே, நீங்கள் அவர்களை வெளியே துரத்தி, விரைவில் அவர்களை அழித்தொழிப்பீர்கள்.
4 உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட பின்பு, “எங்களுடைய நீதியின் காரணமாகவே யெகோவா இந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வதற்கு எங்களை இங்கு கொண்டுவந்திருக்கிறார்” என்று நீங்கள் நினைக்கவேண்டாம். அப்படியல்ல, இந்த நாடுகளின் கொடுமையின் காரணமாகவே யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார்.
5 நீங்கள் இந்த நாட்டை உங்கள் நீதியின் காரணமாகவோ, உங்கள் உத்தமத்தின் காரணமாகவோ உரிமையாக்கப்போவது அல்ல; இந்த நாட்டவரின் கொடுமையின் காரணமாகவும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குத் தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படிக்கும் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார்.
6 உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த வளமான நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி, அதை உங்களுக்குக் கொடுப்பது உங்கள் நேர்மையின் காரணமாக அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.
7 பாலைவனத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எப்படிக் கோபமூட்டினீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் தொடங்கி, இங்கு வந்து சேரும்வரை நீங்கள் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறவர்களாகவே இருந்திருக்கிறீர்கள்.
8 ஓரேபிலே நீங்கள் யெகோவாவுக்கு கோபம் மூழச்செய்தீர்கள். அதனால் அவர் உங்களை அழித்துப்போடும் அளவுக்குக் கோபம்கொண்டார்.
9 யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை எழுதின கற்பலகைகளை பெற்றுக்கொள்ளும்படி, நான் மலைக்குப் போனபோது, அங்கே இரவும் பகலும் நாற்பது நாட்கள் தங்கினேன். அப்பொழுது நான் உணவு சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
10 அங்கே இறைவனின் விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடம் கொடுத்தார். சபைக்கூடிய அந்த நாளிலே, யெகோவா மலையின்மேல் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுக்கு அறிவித்த கட்டளைகளெல்லாம் அவற்றில் இருந்தன.
11 இரவும் பகலுமாக நாற்பது நாட்கள் முடிந்தபின் உடன்படிக்கைப் பலகைகளான இரண்டு கற்பலகைகளை யெகோவா எனக்குக் கொடுத்தார்.
12 பின்பு யெகோவா என்னிடம், “இங்கிருந்து உடனடியாக இறங்கிப்போ. ஏனெனில் நீ எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உன்னுடைய மக்கள் சீர்கெட்டவர்களாகி விட்டார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதிலிருந்து விரைவாய் விலகிப்போய்த் தங்களுக்காக வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைச் செய்துகொண்டார்கள்” என்றார்.
13 மேலும் யெகோவா என்னிடம், “இந்த மக்களை நான் பார்த்தேன். உண்மையிலேயே இவர்கள் ஒரு கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.
14 நான் அவர்களை அழித்து, அவர்களுடைய பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் செய்யவிடு. நான் அவர்களைப்பார்க்கிலும் உன்னை வலிமையானதும், அதிகமானதுமான நாடாக்குவேன்” என்றார்.
15 எனவே, நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதே, நான் மலையிலிருந்து திரும்பி, கீழே இறங்கிப் போனேன். என் கைகளில் இரண்டு உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
16 கீழே நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்திருந்ததை நான் கண்டேன். நீங்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில், வார்க்கப்பட்ட ஒரு விக்கிரகத்தை உங்களுக்காக செய்திருந்தீர்கள். யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.
17 அப்பொழுது நான் அந்த இரண்டு கற்பலகைகளையும் எனது கைகளிலிருந்து வீசி எறிந்து, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே அவற்றை உடைத்தேன்.
18 யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்து, அவருக்குக் கோபமூட்டி, நீங்கள் செய்திருந்த எல்லா பாவங்களுக்காகவும், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன். நான் உணவு சாப்பிடவுமில்லை; தண்ணீர் குடிக்கவுமில்லை.
19 ஏனெனில் நான் யெகோவாவின் கோபத்திற்கும், அவருடைய கடுங்கோபத்திற்கும் பயந்தேன். உங்களை அழித்துப்போடும் அளவுக்கு அவர் கோபங்கொண்டிருந்தார். ஆனாலும் யெகோவா திரும்பவும் எனக்குச் செவிகொடுத்தார்.
20 ஆரோனை அழிக்கும் அளவுக்கு யெகோவா அவன்மேல் கோபம்கொண்டார். அப்பொழுது ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன்.
21 உங்கள் கைகள் செய்த பாவச்சின்னமான அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து நெருப்பில்போட்டு எரித்தேன். அதை நொறுக்கி, புளுதியைப்போல் தூளாக அரைத்து, அதை மலையிலிருந்து கீழே ஓடும் நீரோடையில் எறிந்தேன்.
22 நீங்கள் தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவிலும்கூட யெகோவாவுக்குக் கடுங்கோபம் மூட்டினீர்கள்.
23 யெகோவா உங்களைக் காதேஸ் பர்னேயாவிலிருந்து அனுப்பும்போது, “நீங்கள் போய் நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால் நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையை எதிர்த்துக் கலகம் பண்ணினீர்கள். நீங்கள் அவரை நம்பவுமில்லை, அவருக்குக் கீழ்ப்படியவுமில்லை.
24 நான் உங்களை அறிந்த காலத்திலிருந்து நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறீர்கள்.
25 யெகோவா, தான் உங்களை அழிக்கப்போவதாகச் சொன்னதினால், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன்.
26 அப்பொழுது நான் யெகோவாவிடம் மன்றாடி, “எல்லாம் வல்ல யெகோவாவே! நீர் உம்முடைய மகா வல்லமையினால் மீட்டு, பலத்த கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உமது உரிமைச்சொத்தான உமது மக்களை அழிக்கவேண்டாம்.
27 உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவிற்கொள்ளும். இம்மக்களின் பிடிவாதத்தையும், கொடுமையையும், அவர்களுடைய பாவத்தையும் பொருட்படுத்தாதேயும்.
28 நீர் அவர்களை அழித்தால், நீர் எந்த நாட்டிலிருந்து எங்களைக் கொண்டுவந்தீரோ, அந்த நாட்டு மக்கள், தாம் வாக்குக்கொடுத்த நாட்டிற்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க யெகோவாவினால் முடியவில்லை. அவர் அவர்களை வெறுத்ததினால் பாலைவனத்திலே அவர்களைக் கொல்லும்படியே கொண்டுவந்தார் என்று சொல்வார்கள்.
29 ஆனால் இந்த மக்கள் உமது மகா வல்லமையாலும், நீட்டப்பட்ட புயத்தாலும் நீர் வெளியே கொண்டுவந்த உமது மக்களாகவும், உமது உரிமைச்சொத்தாகவும் இருக்கிறார்களே” என்றேன்.