< உபாகமம் 33 >

1 இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே.
தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
2 அவன் சொல்லியதாவது: “யெகோவா சீனாயிலிருந்து வந்து, சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார். பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார். ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும், மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.
“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
3 நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர். எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள். உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள்.
உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள்.
4 மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல். அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது.
மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது.
5 இஸ்ரயேலின் கோத்திரங்களுடன். மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது, யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார்.
மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
6 “ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது, அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.”
“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான்.
7 அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது: “யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்; அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும். அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான். அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.”
அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; அவனுடைய கை பலப்படுவதாக; அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான்.
8 லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது: “நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே உமது தும்மீம், ஊரீம் உரியவை. நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர். மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர்.
லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.
9 அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி, ‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான். அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை. தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து, உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.
தன்னுடைய தகப்பனையும், தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
10 அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும், உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான். உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான். உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.
௧0அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள்.
11 யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும். அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும். அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும். அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.”
௧௧யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும்” என்றான்.
12 பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது: “யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும். ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார். யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.”
௧௨பென்யமீனைக்குறித்து: “யெகோவாவுக்குப் பிரியமானவன், அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்” என்றான்.
13 யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது: “யெகோவா அவனுடைய நாட்டை, மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும், கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக.
௧௩யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும்,
14 சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும், சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக.
௧௪சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
15 பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும், அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.
௧௫பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,
16 பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக. எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக. இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும். தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக.
௧௬நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
17 மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான். அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன. அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான். பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான். எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே. மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.”
௧௭அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான்.
18 செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது: “செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு. இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.
௧௮“செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.
19 அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள். அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள். அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும், மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.”
௧௯அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான்.
20 காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது: “காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான். அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
௨0“காத்தைக்குறித்து: காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.
21 அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான். தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது, அவன் யெகோவாவின் நீதியையும், இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.”
௨௧அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான்” என்றான்.
22 தாணைப்பற்றி அவன் சொன்னதாவது: “தாண் பாசானிலிருந்து, பாய்கிற சிங்கக்குட்டி.”
௨௨“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான்.
23 நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது: “நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான். அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.”
௨௩“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான்.
24 ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது: “ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன். சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும். அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.
௨௪ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
25 உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும். நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.
௨௫இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான்.
26 “யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை. அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும், அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.
௨௬“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
27 என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம். அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும். அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி, உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
௨௭அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
28 இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும். தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில், யாக்கோபின் நீரூற்று பாதுகாப்பாய் இருக்கிறது. அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
௨௮இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும்.
29 இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்? அவரே உங்கள் கேடயமும், உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார். அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார். உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள். நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை மிதிப்பீர்கள்.”
௨௯இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய மேடுகளை மிதிப்பாய்” என்று சொன்னான்.

< உபாகமம் 33 >