< உபாகமம் 25 >
1 மனிதர்களுக்கிடையில் வழக்கு ஏற்படும்போது, அவர்கள் அதை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். நீதிபதிகள் வழக்கை விசாரித்து குற்றமற்றவனை விடுவித்து, குற்றவாளிக்கு தண்டனை வழங்குவார்கள்.
2 குற்றவாளிக்கு அடிக்கப்படும் தண்டனையே தீர்க்கப்பட்டால், நீதிபதி அவனைக் கீழே கிடத்துவித்து தனது முன்னிலையில் அவனை அடிக்கவேண்டும். அவனுடைய குற்றத்திற்கு ஏற்ற எண்ணிக்கையின்படி கசையடி கொடுக்கவேண்டும்.
3 ஆனால் அவனை நாற்பது அடிகளுக்குமேல் அடிக்கவேண்டாம். அதற்குமேல் அடிக்கப்பட்டால், உங்கள் சகோதரன் உங்கள் பார்வையில் இழிவாகக் காணப்படுவான்.
4 தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்.
5 சகோதரர்கள் ஒன்றாய் வாழும்போது, அவர்களில் ஒருவன் மகனைப்பெறாமல் இறந்தால், அவனுடைய விதவை மனைவி குடும்பத்திற்கு வெளியே திருமணம் செய்யக்கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தன்னுடன் சேர்த்து, திருமணம் செய்து அவளுக்கு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றவேண்டும்.
6 இறந்தவனுடைய பெயர் இஸ்ரயேலில் அற்றுப்போகாமல், அவள் பெறும் முதல் ஆண்பிள்ளைக்கு தன் சகோதரனுடைய பெயரை கொடுக்கவேண்டும்.
7 ஆனாலும், இறந்தவனின் மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்ய விரும்பாவிட்டால், அவள் அப்பட்டண வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் போய், “என் கணவனின் சகோதரன் தன் சகோதரனின் பெயரை இஸ்ரயேலில் நிலைப்படுத்த மறுக்கிறான். ஒரு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை அவன் எனக்குச் செய்யமாட்டேன் என்கிறான்” என்று சொல்லவேண்டும்.
8 அப்பொழுது, அவனுடைய பட்டணத்து சபைத்தலைவர்கள் அவனை அழைப்பித்து, அவனுடன் பேசவேண்டும். “அவளை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை” என்று அவன் தொடர்ந்து சொன்னால்,
9 அவனுடைய சகோதரனின் விதவை மனைவி சபைத்தலைவர்களின் கண்களுக்கு முன்பாக அவனுடைய செருப்பை எடுத்து, அவன் முகத்தில் துப்பி, “தன் சகோதரனுடைய குடும்பத்தைக் கட்டி எழுப்பாதவனுக்கு இப்படியே செய்யவேண்டும்” என்று சொல்லவேண்டும்.
10 அப்படிப்பட்டவனின் பரம்பரை, செருப்பு கழற்றப்பட்டவனின் குடும்பம் என இஸ்ரயேலில் சொல்லப்படும்.
11 இரண்டு மனிதர்கள் சண்டையிடும்பொழுது அவர்களில் ஒருவனின் மனைவி, தன் கணவனை அடிக்கிறவனிடமிருந்து காப்பாற்றும்படி வந்து, அவள் தன் கையை நீட்டி, அவனுடைய ஆணுறுப்பைப் பிடித்தால்,
12 நீங்கள் அவளின் கையை வெட்டிவிடவேண்டும். அவளுக்கு அனுதாபம் காட்டவேண்டாம்.
13 பாரம் கூடியதும், பாரம் குறைந்ததுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் படிக்கற்களை பையிலே வைத்திருக்கவேண்டாம்.
14 அளவைகளிலும் பெரிதும் சிறிதுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் அளவைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்கவேண்டாம்.
15 சரியானதும், நீதியானதுமான படிக்கற்களும், அளவைகளுமே உங்களிடம் இருக்கவேண்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.
16 இப்படிப்பட்ட நேர்மையற்ற அநீதியான நடத்தை உள்ளவன் எவனையும், உங்கள் இறைவனாகிய யெகோவா அருவருக்கிறார்.
17 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது வழியிலே அமலேக்கியர் உங்களுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
18 நீங்கள் இளைத்துச் சோர்வுற்று இருக்கையில் அவர்கள் உங்களை வழியிலே சந்தித்து, பின்னாலே தளர்வுற்று வந்தவர்களை வெட்டினார்களே! அவர்களோ இறைவனுக்குப் பயப்படவில்லை.
19 ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டில், உங்களைச்சூழ உள்ள எல்லா பகைவர்களிடமிருந்தும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார். அப்பொழுது வானத்தின் கீழெங்கும் அமலேக்கியரின் ஞாபகமே இராதபடி அவர்களை அழித்துவிடுங்கள். இதை மறக்கவேண்டாம்.