< தானியேல் 11 >
1 நான் அவனுக்கு ஆதரவாய் இருக்கவும், அவனுக்கு உதவிசெய்யவும் உறுதிகொண்டேன். மேதியனான தரியுவின் முதலாம் வருடத்திலே இப்படிச் செய்யத் தீர்மானித்தேன்.
2 “இப்பொழுதும் நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். அதாவது மேலும் மூன்று அரசர்கள் பெர்சியாவில் தோன்றுவார்கள். பின்பு நான்காவது அரசனும் தோன்றுவான். அவன் எல்லோரையும்விட செல்வந்தனாய் இருப்பான். அரசன் தன் செல்வத்தினால் வலிமைபெற்றபோது, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லோரையும் தூண்டிவிடுவான்.
3 பின்பு ஒரு வல்லமையுள்ள அரசன் எழும்புவான், அவன் அதிக வல்லமையுடன் அரசாண்டு, தான் விரும்பியவற்றைச் செய்வான்.
4 ஆனால் அவனுடைய வல்லமை உயர்ந்திருந்தபோது அவனுடைய பேரரசு உடைக்கப்பட்டு, வானத்தின் நான்கு திசைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அவனுடைய அரசு பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டதால், அது அவனுடைய சந்ததிகளுக்குக் கொடுக்கப்படமாட்டாது. முன்பு அந்த அரசிற்கு இருந்த வல்லமை பின்பு அதற்கு இருக்கமாட்டாது.
5 “பின்பு தென்திசை அரசனோ, வலிமைமிக்கவனாவான். ஆனால் அவனுடைய தளபதிகளில் ஒருவன் அவனைவிடவும் வலிமைமிக்கவனாகி, தனது சொந்த அரசை மிகுந்த வல்லமையுடன் ஆளுவான்.
6 சில வருடங்களில் தென்திசை அரசனும் வடதிசை அரசனும் நட்புறவு கொள்வார்கள். அதன்பின் தென்திசை அரசனின் மகள் வடதிசை அரசனுக்கு நட்புறவு உடன்படிக்கையை உறுதிப்படுத்த மனைவியாகக் கொடுக்கப்படுவாள். ஆனால் சதித்திட்டம் நீடிக்காது. அவனும் அவனுடைய வல்லமையும் அழிக்கப்படும். அந்நாட்களில் அவளும், அவளுடன்கூட அவளது அரச பாதுகாவலரும், அவளது தந்தையும், அவளுக்கு உதவிசெய்தவனும் அழிக்கப்படுவார்கள்.
7 “அவளுடைய குடும்ப வழியிலிருந்து வந்த ஒருவன், அவளுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும்படி எழும்புவான். அவன் வடதிசை அரசனுடைய படையைத் தாக்கி, அவனுடைய கோட்டைக்குள் புகுவான். அவன் அவர்களுக்கு எதிராய் சண்டைசெய்து வெற்றிபெறுவான்.
8 அத்துடன் அவன் அவர்களின் தெய்வங்களையும், உலோக உருவச்சிலைகளையும், அவர்களுடைய விலைமதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும், தங்கப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு எகிப்திற்குப் போவான். சில வருடங்களுக்கு வடதிசை அரசனுடன் யுத்தம் செய்யாமல் விட்டுவிடுவான்.
9 பின்பு வடதிசை அரசன், தென்திசை அரசனின் பிரதேசத்தின்மேல் படையெடுப்பான். ஆயினும் அவன் பின்பு தனது நாட்டுக்குத் திரும்புவான்.
10 வடதிசை அரசனின் மகன்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்து பெரியதொரு இராணுவப்படையைத் திரட்டுவார்கள். அந்தப் படை தடுக்க முடியாத பெருவெள்ளம்போல் அடித்துச்சென்று, மிக வேகமாகத் தென்திசை அரசனின் கோட்டைவரை சென்று சண்டையிடும்.
11 “அப்பொழுது தென்திசை அரசன் மிகுந்த கோபத்துடன், தனது படையுடன் அணிவகுத்துச்சென்று, வடதிசை அரசனுக்கெதிராகப் போரிடுவான். வடதிசை அரசன் பெரிய படையைத் திரட்டுவான். ஆயினும் அது தோல்வியே அடையும்.
12 வடதிசை அரசனின் படை, சிறைப்பிடித்துச் செல்லப்படுவதால், தென்திசை அரசன் பெருமையினால் நிறைந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொலைசெய்வான். ஆயினும் அவன் வெற்றியுடையவனாய் நிலைத்திருக்கமாட்டான்.
13 வடதிசை அரசன் முன்பு இருந்த படையைவிட பெரியதொரு படையைத் திரும்பவும் திரட்டி, சில வருடங்களுக்குப் பின்பு முற்றிலும் ஆயுதம் தரித்த ஒரு பெரிய படையுடன் முன்னேறிச் செல்வான்.
14 “அந்தக் காலங்களில் அநேகர் தென்திசை அரசனுக்கெதிராக எழும்புவார்கள். இந்தத் தரிசனம் நிறைவேறும்படியாக, உன் சொந்த மக்களுக்குள்ளேயும் வன்முறையாளர்கள் கலகம்செய்து அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். ஆயினும் அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்.
15 பின்பு வடதிசை அரசன் வந்து முற்றுகை அரண்களைக் கட்டி, அரணான ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவான். தென்திசை படைகள் எதிர்க்க வல்லமையற்றதாயிருக்கும். அவர்களில் மிகச்சிறந்தவர்களும் எதிர்த்துநிற்க பெலனற்றுப்போவார்கள்.
16 படையெடுத்து வரும் வடதிசை அரசன் தான் விரும்பியபடி செய்வான். அவனை எதிர்த்துநிற்க ஒருவனாலும் முடியாது. அவன் அழகான இஸ்ரயேல் நாட்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அதை அழிக்கும்படியான வல்லமையைப் பெறுவான்.
17 அவன் முழு அரசின் வல்லமையோடும் வரத்தீர்மானித்து, தென்திசை அரசுடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தைச் செய்வான். ஆனால் அவன் தென்திசை அரசைக் கைப்பற்றும்படி, தனது மகளை அவனுக்குக் கொடுப்பான். ஆனால் அவனுடைய திட்டங்கள் வெற்றியளிக்கவோ, அவனுக்கு உதவவோ மாட்டாது.
18 பின்பு அவன் தனது கவனத்தைக் கரையோர நாடுகளின்மீது திருப்பி, அவற்றுள் பலவற்றை பிடித்துக்கொள்வான். ஆனால் ஒரு படைத்தலைவன் அவனுடைய அகங்காரத்திற்கு ஒரு முடிவு உண்டாக்கி, அவனுடைய அகங்காரத்தை அவன் மேலேயே திருப்பிவிடுவான்.
19 இவற்றின்பின் அவன் தனது சொந்த நாட்டின் கோட்டைகளின் பக்கமாய்த் திரும்பிவருவான். ஆயினும் தடுமாறி விழுந்து, காணப்படாமல் போவான்.
20 “அவனுக்குப் பின்வரும் அரசன் தனது அரசின் மேன்மையைத் தொடர்ந்து காப்பாற்றுவதற்காக, வரி வசூலிக்கும் ஒருவனை அனுப்புவான். ஆயினும் அவன் ஒருசில வருடங்களுக்குள் கோபத்தினாலோ, யுத்தத்தினாலோ அல்லாமல் அழிக்கப்படுவான்.
21 “அவனுக்குப்பின் வெறுப்புக்குரியவனும், அரச மேன்மை கொடுக்கப்படாத ஒருவனும் அரசாட்சிக்கு வருவான். அந்த அரசின் மக்கள் தாம் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவன் அதன்மீது படையெடுப்பான். அவன் தந்திரமாக அரசாட்சியைக் கைப்பற்றுவான்.
22 பின்பு திரண்டுவரும் பல படைகள் அவனால் சிதறடிக்கப்பட்டு அழிக்கப்படும். அவனை எதிர்த்த உடன்படிக்கையின் தலைவனும் அழிக்கப்படுவான்.
23 அவன் மற்ற ஜனங்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின், தந்திரமாய் நடந்து சில மக்களுடன் அதிகாரத்துக்கு வருவான்.
24 செல்வந்த மாநிலங்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது, அவன் அவற்றின்மேல் படையெடுத்து தன் தந்தையர்களும், முற்பிதாக்களும் முன் ஒருபோதும் செய்யாததை இவன் செய்வான். கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும், செல்வங்களையும் எடுத்துத் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். அவன் கோட்டைகளைக் கவிழ்க்க முயற்சிப்பான். ஆனாலும் இந்த நிலை ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும்.
25 “அவன் ஒரு பெரும்படையுடன் பெலத்தாலும், மன உறுதியாலும் தூண்டப்பட்டு தென்திசை அரசனுக்கெதிராகப் போவான். தென்திசை அரசனும் பெரிதானதும், வலிமையுடையதுமான படையுடன் எதிர்த்துப் போரிடுவான். ஆனாலும் தென்திசை அரசனுக்கு எதிராய் திட்டமிடப்பட்டிருக்கும் பல சதிகளின் நிமித்தம் அவனால் எதிர்த்துநிற்க முடியாமலிருக்கும்.
26 அரசனுடைய பங்கீட்டு உதவியிலிருந்து சாப்பிட்டவர்களே அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்டு போகும். அநேகம்பேர் போர்முனையில் அழிந்துபோவார்கள்.
27 அப்பொழுது அந்த இரண்டு அரசர்களும், தங்கள் இதயங்களில் தீமைசெய்யும் எண்ணமுள்ளவர்களாய் ஒரே மேஜையில் இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பொய் பேசுவார்கள். ஆனால் அவர்களோ வெற்றியடையமாட்டார்கள். ஏனெனில் முடிவு குறிப்பிட்ட காலத்தில்தான் வரும்.
28 வடதிசை அரசன் பெரும் செல்வங்களுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வான். ஆனால் அவனுடைய இருதயம் பரிசுத்த ஆலயத்திற்கு விரோதமாய் இருக்கும். அதற்கு விரோதமான நடவடிக்கை எடுத்தபின்பே தன் நாட்டிற்குத் திரும்பிப் போவான்.
29 “நியமிக்கப்பட்ட காலத்தில் அவன் திரும்பவும் தென்திசையின்மேல் படையெடுப்பான். ஆனால் இந்தத் தடவை ஏற்படும் முடிவு முந்திய தடவையைப் போலல்லாது வித்தியாசமானதாய் இருக்கும்.
30 மேற்குக் கரையோர நாடுகளின் கப்பல்கள் அவனை எதிர்க்கும். அதனால் அவன் சோர்வடைந்து தன் நாட்டிற்குத் திரும்புவான். அப்பொழுது அவன் திரும்பி பரிசுத்த ஆலயத்திற்கு எதிராகத் தன் கடுங்கோபத்தை வெளிப்படுத்துவான். அவன் பரிசுத்த உடன்படிக்கையை கைவிடுகிறவர்களுக்குத் தயவு காட்டுவான்.
31 “அவனுடைய ஆயுதப்படைகள் ஆலயப் பகுதிகளை அசுத்தமாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள்.
32 அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடங்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள்.
33 “ஞானமுள்ளவர்கள், பலருக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்கள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் வாளினால் விழுவார்கள், எரிக்கப்படுவார்கள், சிறைப்பிடிக்கப்படுவார்கள், கொள்ளையிடப்படுவார்கள்.
34 அவர்கள் விழும்போது, அவர்களுக்கு ஒரு சிறு உதவியே கிடைக்கும். அவர்களோடு சேர்ந்துகொள்கின்ற பலர் உண்மைத்தனம் இல்லாதவர்களாய் இருப்பார்கள்.
35 ஞானமுள்ளவர்களில் சிலர் இடறுவார்கள். அதனால் அவர்கள் முடிவு காலம்வரை புடமிடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப் படுவார்கள். ஏனெனில் நியமிக்கப்பட்ட காலத்தின் முடிவு இனிமேல்தான் வர இருக்கிறது.
36 “அரசன் தான் விரும்பியபடியெல்லாம் செய்வான். அவன் எல்லா தெய்வங்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி மேன்மைப்படுத்துவான். தெய்வங்களுக்கெல்லாம் இறைவனானவருக்கு எதிராகக் கேள்விப்படாதவற்றையெல்லாம் சொல்வான். அந்த கோபத்தின் காலம் நிறைவேறும் வரைக்கும், அவன் வெற்றிபெறுவான். ஏனெனில் தீர்மானிக்கப்பட்டது நிறைவேற வேண்டும்.
37 அவன் தன் தந்தையர்களின் தெய்வங்களுக்கோ, பெண்களால் விரும்பப்பட்ட தெய்வங்களுக்கோ எதுவித மதிப்பும் காண்பிக்கமாட்டான். அவன் வேறு எந்த தெய்வத்திற்கோ மதிப்புக் கொடுக்கமாட்டான். அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னையே உயர்த்துவான்.
38 அவன் அத்தெய்வங்களுக்குப் பதிலாக கோட்டைகளின் தெய்வத்தைக் கனம்பண்ணுவான். அவன் தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்திற்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும், மாணிக்கக் கற்களினாலும், விலைமதிப்புள்ள அன்பளிப்புகளினாலும் கனம்பண்ணுவான்.
39 அவன் அந்நிய தெய்வங்களின் உதவியுடன் வலிமைமிக்க கோட்டைகளைத் தாக்குவான். தன்னை ஏற்றுக்கொள்கிறவர்களை மிகவும் கனம்பண்ணுவான். அவர்களை அநேக மக்களுக்கு மேலாக ஆளுநர்களாக நியமித்து, அவர்களுக்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுப்பான்.
40 “முடிவு காலத்தின்போது தென்திசை அரசன் அவனுடன் போர் செய்ய வருவான். வடதிசை அரசனோ அநேகம் தேர்களோடும், குதிரைப்படை, கப்பல் படையுடனும் புயல்போல அவனுக்கெதிராகப் போவான். அவன் அநேக நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்று, அவர்களை வெள்ளம்போல் அள்ளிக்கொண்டு போவான்.
41 அவன் அழகிய இஸ்ரயேல் நாட்டின்மேலும் படையெடுத்துச் செல்வான். அநேக நாடுகள் அவன்முன் விழ்ந்துபோகும். ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோனின் தலைவர்களும் அவன் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
42 அவன் அநேக நாடுகளுக்குமேல் தன் வலிமையை விரிவுபடுத்துவான். எகிப்தும் தப்பிப்போகாது.
43 தங்கமும், வெள்ளியும், எல்லா எகிப்தின் செல்வங்களும் அடங்கிய எகிப்தின் திரவியக் களஞ்சியங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவான். அதோடு லிபியர்களையும், எத்தியோப்பியர்களையும் தன் ஆட்சிக்குட்படுத்துவான்.
44 ஆனால் கிழக்கிலும், வடக்கிலுமிருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும். அவன் அநேகரை அழித்து ஒழிக்கும்படி கடுங்கோபத்துடன் அங்கு போகப் புறப்படுவான்.
45 பின்பு அவன் கடல்களுக்கும் அழகான பரிசுத்த மலைகளுக்கும் இடையில் தங்கி, தனது அரச கூடாரங்களை அமைப்பான். ஆனாலும் அவனுக்கு முடிவுவரும், அவனுக்கு ஒருவரும் உதவி செய்யமாட்டார்கள்.