< அப்போஸ்தலர் 18 >
1 இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான்.
2 அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான்.
3 அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான்.
4 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான்.
5 சீலாவும், தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டான். இயேசுவே கிறிஸ்து என்று அவன் யூதருக்குச் சாட்சி கூறினான்.
6 ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது, அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! எனது கடமையிலிருந்து நான் நீங்கலாயிருக்கிறேன். இப்பொழுதிலிருந்து நான் யூதரல்லாத மக்களிடம் போகிறேன்” என்றான்.
7 பின்பு பவுல் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யுஸ்து என்பவனுடைய வீட்டுக்குப் போனான். அவன் இறைவனை ஆராதிக்கிறவனாய் இருந்தான்.
8 ஜெப ஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றார்கள்.
9 ஒரு இரவில் கர்த்தர் பவுலுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவர் அவனிடம்: “பயப்படாதே, பேசிக்கொண்டேயிரு, மவுனமாயிராதே.
10 ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
11 எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான்.
12 அகாயா நாட்டிற்கு கல்லியோன் என்பவன் அதிபதியாய் இருக்கையில், யூதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பவுலைத் தாக்கி, அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்:
13 “இந்த மனிதன் மோசேயின் சட்டத்திற்கு முரணான வழிகளில் இறைவனை ஆராதிக்கும்படி மக்களைத் தூண்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள்.
14 பவுல் பேச முயலுகையில், கல்லியோன் யூதரைப் பார்த்து, “நீங்கள் சொல்வது ஒரு குற்றச் செயலாகவோ அல்லது ஒரு பாதகமான குற்றமாகவோ இருந்தால், யூதராகிய உங்களுடைய முறையிடுதலுக்கு நான் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
15 ஆனால் இதுவோ சொற்கள், பெயர்கள், உங்களுடைய திருச்சட்டம் ஆகியவற்றைக் குறித்த பிரச்சனைகளாய் இருப்பதால், இதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு நான் நீதிபதியாய் இருக்க விரும்பவில்லை” என்றான்.
16 எனவே அவன் நீதிமன்றத்திலிருந்து அவர்களை வெளியேற்றினான்.
17 அப்பொழுது அனைவரும் ஜெப ஆலயத் தலைவனான சொஸ்தேனைப் பிடித்து நீதிமன்றத்தின் முன்னாக அடித்தார்கள். ஆனால் கல்லியோனோ அதைக்குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.
18 பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து, சிலகாலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களை விட்டு, கப்பல் மூலம் சீரியாவுக்குப் போனான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனுடனேகூடச் சென்றார்கள். பவுல் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான்.
19 பின்பு அவர்கள் எபேசு பட்டணத்தை வந்தடைந்தார்கள். பவுல் பிரிஸ்கில்லாவையும், ஆக்கில்லாவையும் அங்கேயே இருக்கும்படி சொன்னான். பவுலோ அங்குள்ள ஜெப ஆலயத்திற்குப்போய், யூதருடன் ஆதாரம் காட்டி விவாதித்தான்.
20 அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்டகாலம் தங்கும்படி கேட்டபோது, அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
21 ஆனால் அவன் அவர்களைவிட்டுப் புறப்படுகையில், “இறைவனின் சித்தமானால் நான் திரும்பிவருவேன்” என்று வாக்களித்தான். அதற்குப் பின்பு அவன் எபேசுவிலிருந்து கப்பலேறிப் போனான்.
22 அவன் செசரியாவைச் சென்றடைந்து, அங்கிருந்து எருசலேமிலுள்ள திருச்சபைக்குப் போய், அவர்களை வாழ்த்தினான். பின்பு அங்கிருந்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
23 சிலகாலம் அந்தியோகியாவில் தங்கிய பின்பு, அவன் புறப்பட்டு கலாத்தியா, பிரிகியா பகுதிகள் வழியாக ஒவ்வொரு இடமாக சென்று, எல்லா சீடர்களையும் தைரியப்படுத்தினான்.
24 இதற்கிடையில், அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவிற்கு வந்தான். அவன் ஒரு கல்விமானும், வேதவசனங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவனுமாய் இருந்தான்.
25 கர்த்தருடைய வழியைக் குறித்த அறிவுறுத்தலை அவன் பெற்றிருந்தான். அவன் இயேசுவைக்குறித்த காரியங்களை மிகுந்த ஆர்வத்துடன் பிழையின்றி போதித்தான். ஆனால் அவன், யோவானுடைய திருமுழுக்கைப் பற்றி மாத்திரமே அறிந்திருந்தான்.
26 அவன் ஜெப ஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபொழுது, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவனுடைய வழியை அவனுக்கு இன்னும் அதிகத் தெளிவாய் விளக்கிக் கூறினார்கள்.
27 அப்பொல்லோ அகாயாவுக்குப் போக விரும்பியபோது, சகோதரர்கள் அவனுக்கு உற்சாகமூட்டி, அங்குள்ள சீடர் அவனை வரவேற்கும்படி, அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அவன் அங்கு வந்துசேர்ந்து, கிருபையின் மூலம் விசுவாசிகளான அவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தான்.
28 அவன் வேதவசனங்களிலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, வெளிப்படையான விவாதங்களில் யூதர்களுடன் பலமாய் வாதாடினான்.