< அப்போஸ்தலர் 13 >

1 அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள்.
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்.
2 அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார்.
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார்.
3 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
4 அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள்.
அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள்.
5 அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.
சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.
6 அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள்.
அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள்.
7 அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான்.
அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான்.
8 ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும்.
மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான்.
9 அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது,
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து:
10 “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ?
௧0எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?
11 இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான்.
௧௧இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான்.
12 நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.
௧௨அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
13 பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான்.
௧௩பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவில் இருக்கும் பெர்கே பட்டணத்திற்கு வந்தார்கள். யோவான் அவர்களைவிட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
14 அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளிலே அவர்கள் ஜெப ஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள்.
௧௪அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவிற்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, உட்கார்ந்தார்கள்.
15 மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு, ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய செய்தி உங்களிடம் இருந்தால், நீங்கள் பேசுங்கள்” என்றார்கள்.
௧௫மோசேயின் நியாயப்பிரமாண புத்தகமும் தீர்க்கதரிசன புத்தகமும் படித்துமுடிந்தபின்பு: சகோதரர்களே, நீங்கள் மக்களுக்குப் புத்திச்சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களுக்கு ஆள் அனுப்பினார்கள்.
16 பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
௧௬அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையசைத்து: இஸ்ரவேலர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிற மக்களே, கேளுங்கள்.
17 இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.
௧௭இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாக வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,
18 ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார்.
௧௮நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து,
19 கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
௧௯கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து,
20 இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று. “இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார்.
௨0பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார்.
21 பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான்.
௨௧அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார்.
22 இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார்.
௨௨பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார்.
23 “தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார்.
௨௩அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.
24 இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான்.
௨௪இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம்திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப்பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான்.
25 யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
௨௫யோவான் தன் பணிகளை முடிக்கிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்? நான் அவர் இல்லை, இதோ, எனக்குப்பின்பு ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
26 “சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது.
௨௬சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
27 எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள்.
௨௭எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும், அவரைத் தெரியாமலும், ஓய்வுநாட்களில் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களைத் தெரியாமலும், அவரை தண்டனைக்குள்ளாக்கியதினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
28 இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள்.
௨௮கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ஒன்றும் அவரிடத்தில் இல்லாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
29 இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள்.
௨௯அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
30 ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார்.
௩0தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்.
31 இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
௩௧இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
32 “நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை
௩௨நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
33 இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது: “‘நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’
௩௩இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம்.
34 அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது: “‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’
௩௪அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்’ என்று உரைத்தார்.
35 அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
௩௫அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
36 “தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது.
௩௬தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
37 ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
௩௭தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
38 “ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.
௩௮ஆதலால் சகோதரர்களே, இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
39 மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
௩௯மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்களாக்கப்பட முடியாமலிருந்ததோ, விசுவாசிக்கிற எவனும் அவைகளிலிருந்து இயேசுவாலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருப்பதாக.
40 ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
௪0அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
41 “‘பாருங்கள், ஏளனம் செய்வோரே! அதிசயப்பட்டு சிதறிப்போங்கள். ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன். அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’”
௪௧அசட்டைப்பண்ணுகிறவர்களே, பாருங்கள், ஆச்சரியப்பட்டு அழிந்துபோங்கள்! உங்களுடைய நாட்களில் நான் ஒரு செயலைச் செய்திடுவேன், ஒருவன் அதை உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நடக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றான்.
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள்.
௪௨அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள்.
43 கூடியிருந்த மக்கள் கலைந்துபோனபின், அநேக யூதரும், யூத விசுவாசத்தை பின்பற்றிய பக்தியுள்ளோரும், பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி, அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.
௪௩ஜெப ஆலய கூட்டம் முடிந்தபின்பு, யூதர்களிலும் யூதமார்க்கத்தைப் பின்பற்றின பக்தியுள்ளவர்களில் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களோடு இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.
44 அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள்.
௪௪அடுத்த ஓய்வுநாளிலே பட்டணத்தார் அனைவரும் தேவவசனத்தைக் கேட்பதற்காக கூடிவந்தார்கள்.
45 மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது, அவர்கள் பொறாமையினால் நிறைந்து, அவர்கள் பவுல் சொல்வதற்கு எதிரிடையாய் பேசி, விரோதித்து தூஷித்தார்கள்.
௪௫யூதர்கள் மக்கள் கூட்டங்களைப் பார்த்தபோது பொறாமைப்பட்டு, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகப் பேசி, அவர்களை அவமதித்தார்கள்.
46 அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios g166)
௪௬அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios g166)
47 ஏனெனில், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது இதுவே: “‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும் நீ என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி, நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்.’”
௪௭நீர் பூமியின் கடைசிவரை இரட்சிப்பாக இருப்பதற்கு உம்மை மக்களுக்கு ஒளியாக வைத்தேன்” என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
48 யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
௪௮யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios g166)
49 அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.
௪௯கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
50 ஆனால் யூதர்கள் பக்தியும், உயர்ந்த மதிப்புக்குரிய பெண்களையும் அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மைவாய்ந்தவரையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் துன்புறுத்தலை ஏற்படுத்தி, பவுலையும் பர்னபாவையும் அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட்டார்கள்.
௫0யூதர்கள் பக்தியும் கனமும் பெற்ற பெண்களையும் பட்டணத்து முதலாளிகளையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்களுடைய எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
51 எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
௫௧இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
52 சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.
௫௨சீடர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நிரப்பப்பட்டார்கள்.

< அப்போஸ்தலர் 13 >